சிட்டி வசூல் மேப்பு... சென்ட்ரல் தான் டாப்பு!| Dinamalar

சிட்டி வசூல் 'மேப்'பு... சென்ட்ரல் தான் 'டாப்'பு!

Added : செப் 22, 2015
Share
களிமண்ணால் தானே செய்த சின்னஞ்சிறிய விநாயகர் சிலையை, வண்ண வண்ணப் பாசிகளால் அலங்கரித்து, சுற்றிலும் அழகாக பூக்களைப் போட்டு வைத்திருந்தாள் சித்ரா. அதைக் கையில் எடுத்து, இருவருக்கும் நடுவில் வைத்துக்கொண்டு 'செல்பி' எடுத்தாள் மித்ரா.''ரொம்ப 'க்யூட்'டா இருக்காருக்கா, இந்த நேச்சுரல் விநாயகர்...இந்த வருஷம், குறிச்சி குளத்துல நல்லா தண்ணி இருந்ததால, பெரிய பெரிய
சிட்டி வசூல் 'மேப்'பு... சென்ட்ரல் தான் 'டாப்'பு!

களிமண்ணால் தானே செய்த சின்னஞ்சிறிய விநாயகர் சிலையை, வண்ண வண்ணப் பாசிகளால் அலங்கரித்து, சுற்றிலும் அழகாக பூக்களைப் போட்டு வைத்திருந்தாள் சித்ரா. அதைக் கையில் எடுத்து, இருவருக்கும் நடுவில் வைத்துக்கொண்டு 'செல்பி' எடுத்தாள் மித்ரா.
''ரொம்ப 'க்யூட்'டா இருக்காருக்கா, இந்த நேச்சுரல் விநாயகர்...இந்த வருஷம், குறிச்சி குளத்துல நல்லா தண்ணி இருந்ததால, பெரிய பெரிய சிலையெல்லாம் ஈசியா கரைச்சுட்டாங்க''
''இன்னொரு விஷயத்தைக் கவனிச்சியா மித்து...விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துல வழக்கத்தை விட, இந்த வருஷம் லேடீஸ் கூட்டம் அதிகமா இருந்துச்சு. வண்டிகள்ல சில லேடீஸ் போட்ட குத்தாட்டத்தைப் பாத்துட்டு, நானே மெரண்டுட்டேன்'' என்றாள் சித்ரா.
''வரவர நம்ம ஊரு பொம்பளைங்களும் ரொம்பத்தான் மாறிக்கிட்ருக்காங்கக்கா. ஜி.எச்.,ல இருக்கிற போதை மீட்பு மையத்துக்கு முன்னெல்லாம் 'ஜென்ட்ஸ்'தான் வருவாங்க. இப்போ, மாசத்துக்கு குறைஞ்சது ரெண்டு பொண்ணாவது வந்துர்றாங்களாம். கேக்கவே வேதனையா இருக்கு'' என்றாள் மித்ரா.
''சரக்கு அடிக்கிறதுக்கே சங்கடப்பட்டா எப்பிடி...செல்வபுரம் அன்னை இந்திரா நகர்ல, 24 மணி நேரமும் ஒரு வீட்டுல 'பார்' இயங்கிட்டு இருக்கு. எத்தனை மணிக்குப் போய், என்ன சரக்குக் கேட்டாலும் கிடைக்குமாம். அதுவும் பத்தலைன்னா, அங்கேயே கஞ்சாவும் கிடைக்குமாம். அதை நடத்துறதும் ஒரு லேடி தான்!''
''என்னக்கா சொல்ற... நம்மூர்ல லேடி தாதாவா?''
''ஆமா...ஸ்டேஷன்ல 'டாப் டூ பாட்டம்', கச்சிதமா மாமூல் போயிருதாம். ஏதாவது 'கம்ப்ளைன்ட்' வந்துச்சுன்னா, உடனே பேருக்கு ஒரு கேசைப் போட்ருவாங்க. அதுக்குன்னே, அங்க ஒருத்தரை சோறு போட்டு வளக்குறாராம் அந்த கோயம்புத்தூர் சொர்ணாக்கா''
''மேலிடத்துக்கு யாரும் புகார் பண்ணலையா?''
''ஸ்டேஷனுக்குப் புகார் பண்ணுனவுங்களையே, அந்தம்மாவோட ஆளுங்க கூப்பிட்டு, 'லைட்'டா மெரட்டிருக்காங்க. ஏற்கனவே, அவுங்க பயந்து கெடக்காங்க'' என்றாள் சித்ரா.
''நம்மூர்ல ஒரு கோவில்ல இருந்த ஐம்பொன் சிலை, 100 கலசங்களைக் காணலைன்னு சொன்னியே. அந்த கோவில்ல வேலை பாக்கிறவுங்களை எல்லாரையும் கூப்பிட்டு ஏதாவது வெளியில பேசுனா, தொலைச்சுப்புடுவேன்னு மெரட்டிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''ஏற்கனவே தான் தொலைச்சுட்டாங்களே. அப்புறம் என்ன புதுசாத் தொலைக்கிறது'' என்று சிரித்தாள் சித்ரா.
''கோவில் விஷயத்தைப் பேசுனதும், அறநிலையத்துறை அப்பாயின்மென்ட் மேட்டர், ஞாபகம் வந்துச்சு. கோயம்புத்தூர்ல கோவில் நகைகளை சரி பார்க்குற பொறுப்புல இருக்கிற ஒரு ஆபீசர், இதுக்கு முன்னாடி முக்கியமான ஆபீசர்க்கு 'இன்சார்ஜ்'ஜா இருந்தாருல்ல. அப்போ அவரு போட்ட அப்பாயின்மென்ட் எல்லாத்துலயும் ஏகப்பட்ட 'ஃப்ராடு' நடந்திருக்காம்'' என்றாள் மித்ரா.
''பல பேரு போலி டி.சி., மார்க் ஷீட் எல்லாம் கொடுத்ததாச் சொன்னாங்களே. அதுவா?''
''அது மட்டுமில்லை. ஏகப்பட்ட தப்பு நடந்திருக்கு. அதைப் பத்தி 'என்கொயரி' ஆரம்பிச்சதுமே, மேலதிகாரிகளை பணத்தைக் கொடுத்து, சரிக்கட்டிட்டாராம். இப்போ மறுபடியும் கெளற ஆரம்பிச்சிருக்காங்க. அநேகமா, அவரை தென் மாவட்டத்துக்கு தூக்கிருவாங்களாம்''
''மித்து! அதே டிபார்ட்மென்ட்ல இருக்கிற 'இளம்' அதிகாரி ஒருத்தரு, கோவில் உண்டியல் எண்ணுறப்ப எல்லாம், 'எனக்கொரு பங்கு வேணும்'னு வசூலுக்குப் போய் நிக்கிறாராமே'' என்றாள் சித்ரா.
''தீபாவளி வந்துருச்சுல்ல. இனிமே, வசூல் வேட்டை தான். சிட்டி போலீஸ்ல இப்போதைக்கு, சென்ட்ரல் ஏரியா தான், வசூல்ல 'லீடிங்'ல போயிட்ருக்காம். அதுலயும் காந்திபுரம், கிராஸ்கட் ரோடுகள்ல கடை சைஸ், வியாபாரத்தைப் பொறுத்து, அவுங்களே தொகையை 'ஃபிக்ஸ்'
பண்ணிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.
''பீளமேட்டுல, ஒரே ஒரு உளவுப்புலி, மத்த எல்லாரையும் விட, வேகமா வசூல் வேட்டை ஆடுறாராமே''
''மூணு மாசத்துக்கு முன்னாடி, சரவணம்பட்டியிலயிருந்து வந்தாரே. பேருலயே 'மணி' வச்சிருப்பாரே...அவரா?''
''அவரே தான் மித்து... அந்த ஏரியாவுல 19 டாஸ்மாக் 'பார்'லயும் ராவெல்லாம் சரக்கு ஓட்றாங்க. ஒரு 'பார்'க்கு, 5,500 ரூபா. ஸ்டேஷனுக்கு அஞ்சாயிரம். இவருக்கு ஐநூறு. இதைத் தவிர்த்து, சிடி கடை, கஞ்சா சேல்ஸ், அந்தத் தொழிலு...எல்லார்ட்டயும் இவரே நேரடியா வசூல் பண்ணிட்டு வந்துர்றாராம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...அவரு, வசூல் விஷயமா, அவரோட மொபைல்ல இருந்து பேச மாட்டாரு. யார்ட்டயாவது மொபைல் வாங்கிப் பேசிட்டு, அப்புறம் அவரே அதுல 'ரிக்கார்டு' இருக்கான்னு பாத்து அழிச்சிருவாரு'' என்றாள் மித்ரா.
''பேசுறதை அழிக்காம இருந்ததால தான், ஒரு வருஷம் கழிச்சும், அதே மேட்டரை அமைச்சர் பேசுனதும் தெரியவந்துச்சு'' என்று நிறுத்தினாள் சித்ரா.
''அது யாருக்கா...வருஷம் மாறியும் வார்த்தைய மாத்தாத மந்திரி?''
''நம்ம வனத்துறை அமைச்சர் தான். போன வருஷம் வன விழாவுல பேசுன அதே பேச்சை, அச்சுப் பிறழாம, இந்த வருஷம் வனத்துறை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியிலயும் பேசிருக்காரு''
''ஒரு வருஷத்துக்கு முன்னாடி, கோயம்புத்தூர்ல மேயர் இடைத்தேர்தலுக்கு முன்ன, சில அறிவிப்புகளை சி.எம்.,வெளியிட்டாங்க. அடுத்த வருஷ தேர்தல்லயும் அதையே தான், மறுபடியும் சொல்லுவாங்க போலயிருக்கு. ஏன்னா, எந்த திட்டமுமே தொடங்கவேயில்லையே. 'என்றும் மாறா பேச்சு, எங்க கட்சி மூச்சு'ங்கிறாங்களோ?''
''பேச்சுன்னதும், நம்ம 'கோயம்புத்துாரு கொமாரு' ஞாபகம் வந்துருச்சு. அவரு தான்... நம்ம இளந்தாரி ஆபீசரைப் பத்தி, அங்கங்க ஏதேதோ பேசிருக்காரு. வெளியில, 'அவரு எனக்கு தம்பி மாதிரி'ங்கிறாராம். இந்த டாக்டர் பேசுறது, அந்த டாக்டருக்குத் தெரிஞ்சு, ரொம்பவே வேதனைப்பட்டாராம்''
''டாக்டர்களை விடு. இன்ஜினியர்க மேட்டர் சொல்றேன்...கார்ப்பரேஷன் லேடி ஆபீசர், தன்னோட டிரைவருக்கு, ஏ.இ., குவாட்டர்சைக் கொடுத்தாருல்ல. இப்போ, அவரோட பி.சி.,க்கு எஸ்.இ., குவாட்டர்சையே கொடுத்திருக்காங்க'' என்றாள் மித்ரா.
''அதை விட கொடுமை...தூத்துக்குடி கார்ப்பரேஷன்ல வேலை பாக்கிற இன்ஜினியரு, நம்ம கார்ப்பரேஷன் குவாட்டர்ஸ்ல குடியிருக்காரு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''அவரென்ன தினமும் ஹெலிகாப்டர்ல வேலைக்குப் போறாரா?'' என்று சிரித்தாள் மித்ரா.
''அதை விடு...புதுசா வந்திருக்கிற சிட்டி இன்ஜினியரைப் பத்தி விசாரிச்சியா?''
''அவரு...'நான் 528 டவுன் பஞ்சாயத்துகளைப் பார்த்த ஸ்டேட் ஆபீசர். ஒரு கார்ப்பரேஷன்கிறதால நல்லாப்பண்ண முடியும்'னு சொல்றாராம். பார்க்கலாம்''
''இவரோட 'போஸ்ட்டிங்'குக்கு 'டைகர் பிஸ்கட்' இன்ஜினியர் போனாரே. என்ன பண்றாராம்?''
''பெரிய போஸ்ட்டிங் இல்லியா...டைகர் பிஸ்கெட்டுக்குப்பதிலா, 'லயன் டேட்ஸ்' சாப்பிடுவாராயிருக்கும்'' என்று மித்ரா சொல்ல, இருவரும் வெடித்துச் சிரித்தனர்.
''ஏன் மித்து...கான்ட்ராக்ட் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆதரவா, வாரத்துக்கு நாலு அமைப்பாவது, கார்ப்பரேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துறாங்களே. என்னதான்டி விவகாரம்?'' என்று 'சீரியஸ்' ஆகக்கேட்டாள் சித்ரா.
''போராடுற சில பேரு, கான்ட்ராக்டரை மெரட்டி பணம் பறிக்கிறதுக்காகப் பண்றதா பேசிக்கிறாங்க. ஆனா, அவுங்க கேக்குற விஷயம் நியாயமானது தான்'' என்றாள் மித்ரா.
''எது...சம்பளத்தைக் குறைச்சுக் கொடுக்குறதா சொல்றாங்களே...அதுவா?'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...ஒரு நாளைக்கு 318 ரூபா வீதமா, மாசத்துக்கு 9550 ரூபா சம்பளம் கொடுக்கணும். ஆனா, கொடுக்குறது 5,250 ரூபா தான். மொத்தம் ரெண்டாயிரம் பேரு. ஒரு ஆளுக்கு 4,300 ரூபா எடுத்தா, மாசத்துக்கு இதுலயே 86 லட்ச ரூபா போகுது. கார்ப்பரேஷன்ல மூணு
கம்பெனி கான்ட்ராக்ட் எடுத்திருக்கு. பேரு வேறயா இருந்தாலும், ஓனரு ஒருத்தர் தான்''
''ஆனா...துப்புரவுப் பணியாளர்களுக்கு டிரஸ், மாஸ்க், கிளவுஸ், பி.எப்., உபகரணமெல்லாம் வாங்கித்தர, செலவானதை மட்டும் தான் எடுத்துக்கிர்றதா அவுங்க சொல்றாங்களே''
''அதெல்லாம் எங்க கொடுத்திருக்காங்கன்னு நாமளே பாக்குறோமே. அந்த அமைப்புகள் கேக்குறது மாதிரி, 7,500 ரூபாயாவது கொடுக்கலாம்'' என்றாள் மித்ரா.
''மித்து! ஹவுசிங் போர்டு வீடுகள்ல, சமூக சேவகர்ங்கிற பேர்ல குடியிருக்கிற 'மாஜி' ரெண்டு பேரு, வருஷக்கணக்கா வாடகையே கட்டலையாம். அவுங்களும் அங்க குடியிருக்காம, வேலைக்காரங்களை குடி வச்சிருக்காங்க. ஆனா, கவர்மென்ட் ஆபீசர்ஸ் பல பேரு, வீடு இல்லாம அல்லாடுறாங்க'' என்று சித்ரா சொல்லும்போதே, அவளது அலைபேசி அலற, முடிவுக்கு வந்தது அரட்டை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X