"மாநகராட்சி மூன்றாவது மண்டல கவுன்சிலர்கள் காட்டுல பண மழை,'' என்றபடி, ஹாலில் வந்தமர்ந்தாள் மித்ரா.
"கவுன்சிலர்கள் காட்டுல மட்டுமா மழை பெய்யுது?'' என, கிண்டலாக கேட்டாள் சித்ரா.
"அதிகாரிகள் இல்லாம, கவுன்சிலர்கள் இல்லையே. மூணாவது மண்டலத்துல, குழாய் விஸ்தரிப்பு பணி பல இடங்களில் நடந்துட்டு இருக்குது. வீதியில இருக்கற குழாயை மாத்தி அமைக்கும்போது, வீட்டு இணைப்பையும் துண்டித்து, வேலை செய்றாங்க. மறுபடியும் "கனெக்ஷன்' கொடுக்கனும்னா, 1,500 ரூபா மொய் வைக்கனும். தண்ணி இல்லாம வீட்டு வேலை எதுவும் செய்ய முடியாதே. அதனால, மனசுக்குள்ள திட்டித்தீர்த்துட்டு, ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் மொய் எழுதுறாங்க,'' என்றாள் மித்ரா.
"கொஞ்சம் ஏமாந்திருந்தா, அம்மா உணவகம் வெடிச்சிருக்கும்,'' என்று குண்டை தூக்கி போட்டாள் சித்ரா.
"என்னக்கா சொல்றீங்க? அந்தளவுக்கு பாதுகாப்பு இல்லாமல இருக்கு?'' என, அதிர்ச்சியில் உறைந்தபடி கேட்டாள், மித்ரா.
"தென்னம்பாளையம் அம்மா <உணவகத்துக்கு பின்புறம், காஸ் சிலிண்டர்களை அடுக்கி வச்சிருந்தாங்க. உணவகத்தை ஒட்டியிருந்த தொழிற்சங்க ஆபீஸ் தீ பிடிச்சு, தரைமட்டம் ஆச்சுல்ல. தீயணைப்பு துறையினர் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா, அவ்ளோ தான். சுவத்துக்கு பின்னாடி இருந்த காஸ் சிலிண்டருங்க வெடிச்சிருக்கும். நல்லவேளையா எல்லா சிலிண்டரையும் அவசர அவசரமா அப்புறப்படுத்திட்டாங்க. இனியாவது, மாநகராட்சி அதிகாரிகள் உஷாரா இருக்கணும்,'' என்றாள் சித்ரா.
"பூனை போறதை மட்டும் பார்த்துட்டு இருந்தா? பெருசா போற யானை கண்ணுக்கு தெரியாது,'' என்றாள் மித்ரா.
"என்னமோ சொல்ல வர்றது தெரியுது? ஆனா, என்னான்னு தெரியலையே?'' என, குழம்பினாள் சித்ரா.
"நம்மூர்ல, 62 மூட்டை ரேஷன் அரிசி காணாம போன விவகாரம் இன்னும் விசாரணையில்தான் இருக்கு. ஆனா, மாவு அரைக்கற மில்காரங்களை மட்டும் நோண்டிக்கிட்டு இருக்காங்க. இப்ப என்னடான்னா, இலவச ரேஷன் அரிசியை மாவு மில்களில் அரைக்கக் கூடாதுன்னு, "புட் செல்' பிரிவு அதிகாரிகள் "கெடுபிடி' பண்றாங்க. மாசமானா, "கப்பம்' கட்டுறோம்; இருந்தாலும், இடைஞ்சல் பண்ணிக்கிட்டே இருக்காங்கன்னு மாவு மில்காரங்க புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
"அதெல்லாம் சரி; ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்கறதில்லையாமே,'' என,
சித்ரா கேட்க, "அவங்களுக்கெல்லாம் சம்பளம் தேவையே இல்லையே என கிண்டலடித்துவிட்டு, வளர்மதி கூட்டுறவு சங்கம் ரொம்பவும் நொடிஞ்சு போயிருச்சு; நஷ்டத்துல ஓடுதுன்னு சொல்றாங்க.
வேறு வருமானம் இல்லாம மளிகை விற்பனையை வைத்து, பிழைப்பு ஓட்டுறாங்க. அதனால, ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாசக்கணக்குல சம்பளம் பாக்கி வெச்சுருக்காங்க. கொஞ்ச கடைகளை நிர்வகிக்கும் பொறுப்பை, கூட்டுறவு வங்கிகளுக்கு தள்ளிவிடலாம்னு நெனைச்சு, பேசிக்கிட்டு இருக்காங்க. வங்கி நிர்வாகமோ, மசிய மாட்டேங்குது,'' என்றாள் மித்ரா.
"ராஜினாமா செய்ய அனுமதி கேட்டு, ஆளுங்கட்சி கவுன்சிலர் செல்வம், கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்காரே, ஏன்? என்னாச்சு,'' என, கேள்வி எழுப்பினாள் சித்ரா.
"குடிநீர் கட்டணத்தை, 300 சதவீதம் உயர்த்தி அறிவிச்சாங்க. வருஷத்துக்கு, 600 ரூபாயா இருந்ததை, 2,400 ரூபாயா உயர்த்துனாங்க. கம்யூ., கட்சிக்காரங்க வழக்கம்போல வீதியில் இறங்கி போராட்டம் நடத்துனாங்க; யாரும் பெருசா கண்டுக்கலை; பொதுமக்களும் பொருட்டா நெனைக்கலை. பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.,வினர் போராட்டம் நடத்தியதும், தலைமை செயலகம் வரை தகவல் போயிருக்கு. ஆளுங்கட்சிக்காரங்களுக்கு பயங்கர "டோஸ்'. அதனால, கட்டண உயர்வை தற்காலிகமா நிறுத்தி வச்சுட்டாங்க. இவ்ளோ பிரச்னைக்கும், "சிட்டி மம்மி'தான் காரணம்; ஊருக்குள்ள தலைகாட்ட முடியலை; ராஜினாமா செய்ய அனுமதி கொடுங்கன்னு, தலைமைக்கு அந்த கவுன்சிலர் கடிதம் அனுப்பியிருக்கார். இதெல்லாம், "இமேஜை டேமேஜ்' பண்றதுக்கு, வி.ஐ.பி., செஞ்ச வேலைன்னு, மற்றொரு தரப்பு புலம்புது,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE