நூல் எனும் ஏணி| Dinamalar

நூல் எனும் ஏணி

Added : செப் 24, 2015 | கருத்துகள் (2)
 நூல் எனும் ஏணி


கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை!மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்!
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!என்று நம்முடன் நுால்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன.ஒருவரின் நல்லறிவானது அவர் பயின்றிடும் நல்ல நுால்களைப் பொறுத்து அமையும் என்பதனை,
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்றநுாலவே ஆகுமாம் நுண்ணறிவு"என்கிறார் ஒளவையார்.
மனிதனின் அறிவுத்தேடலை நிறைவடையச் செய்பவை நுால்களே. மனிதனை அறிவில் சிறந்தவனாகவும், ஆளுமை நிறைந்தவனாகவும் மாற்றுவதில் நுால்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு நுாலும் மனிதனை விசாலமாக்குகிறது. வாசிப்பு அவனுக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நுால் வகைகள்
நுாலாசிரியர்களில் முதல் வாழ்வியல் நுாலை எழுதியவர் திருவள்ளுவரே. கம்பர், இளங்கோ, காளிதாசர் போன்றவர்களின் நுால்கள் நமது இலக்கிய அறிவை வளர்க்கும். திரு.வி.க, மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் போன்றோரின் நுால்கள் நமது மொழி அறிவை வளர்க்கும். மு.வ. எழுதிய நுால்கள் நாம் வாழ்க்கையை நெறியோடு வாழ வழிகாட்டும்.
எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின், காப்மேயர், டேல்கார்னகி ஆகியோரது சுயமுன்னேற்ற நுால்கள் நமது சிந்தனையை விரிவு செய்யும். தொழிற் நுால்கள், நமது வேலை, தொழில் வியாபாரத்தில் விருத்தி காண உதவும். உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் போன்ற நுால்கள் உழைப்பு, விடாமுயற்சியின் அவசியத்தை உணர்த்தி நிற்கும். மேலும் வெற்றிக்கான வழிமுறைகளை
விவரிக்கும், பிரச்சனைகளுக்குத் தேவையான தீர்வுகளை தம்முள் வைத்திருக்கும். ஆபிரகாம் லிங்கன் தொடங்கி பில்கேட்ஸ் வரை, மகாத்மாகாந்தி, நேரு தொடங்கி அப்துல்கலாம் வரை நாம் படித்து அறிய வேண்டிய நுால்கள் பல உள்ளன. தத்துவ நுால்கள் சிந்தனையை மேம்படுத்தும். சமய நுால்கள் ஆன்ம அறிவோடு மன அமைதியையும் தரும்.
நுால் சொல்லாட்சி நுவலப்பட்டதே (உரைத்தலே) 'நுால்' ஆகும். 'நுால்' எனும் வார்த்தை பழந்தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளது.
'மாலை மார்ப நுாலறி புலவ'
- திருமுருகாற்றுப்படை - 261'நுாலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்'- பெரும்பாணாற்றுப்படை - 487'நுால் வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி'- மதுரைக்காஞ்சி'அலகு சால் கற்பின் அறிவுநுால் கல்லாது
உலக நுால் ஓதுவது எல்லாம்'- நாலடியார் - 140
'அதிகாரம் பிடகம் ஆபிடம் தந்திரம்பனுவல் ஆகமம் சூத்திரம் நுாலே'- பிங்கல நிகண்டு-2057மேற்சொன்னவற்றால் நுால்கள் பல தமிழகத்தில் சிறந்து விளங்கின என அறியலாம். அறிஞர்கள் வாழ்வில் நுால்கள் புகழின் உச்சத்தை எட்டிய அறிஞர்களின் வாழ்க்கைச் சரிதத்தை படிக்கும் போது, அவர்கள் தம் வாழ்நாளில் நுால் சேகரித்தலுக்கும், நுால் வாசித்தலுக்கும் ஒதுக்கிய காலத்தின் பயனையே புகழெனும் அறுவடையாகப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வரும்.
காரல் மார்க்ஸ் தனது 'மூலதனம்' எனும் நுால் உருவாக்கத்திற்காக பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை நுாலகத்திலேயே கழித்தார் என்பர். அண்ணாதுரை சென்னை கன்னிமரா நுாலகத்தில் நாள் முழுவதையும் செலவிடுவாராம். நுாலகத்தில் எந்த வரிசையில், எந்தப் புத்தகம் இருக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
மாவீரன் அலெக்சாண்டர், போர்க்களத்திற்கு கூட ஹோமருடைய காவியங்களை எடுத்துச் சென்று படித்தாராம். அலெக்சாண்டருக்கு தங்கப் பேழை ஒன்றை பாரசீக மன்னர் பரிசாகக் கொடுத்தார். உடனே நண்பர்களைப் பார்த்து,
"இந்தப் பேழையில் எந்தப்பொருளை வைக்கலாம்"? என்று கேட்டார். அவர்கள் ஏதேதோ கூறினர். ஆனால் அலெக்சாண்டரோ, 'இதனுள் வைக்கத் தகுதியான பொருள் ஹோமர் இலியட் காவியம் தான்' என்றார்.
மில்டன் ஐந்து ஆண்டு காலம் கிரேக்க காவியங்களைப் படித்துக் குறிப்பெடுத்தார். பின்பு 'சொர்க்க இழப்பு' என்னும் அழியாத காவியத்தைப் படைத்தார்.
அக்பர் தன்னுடைய நுால் நிலையத்தில் 20,000 கையெழுத்துப் பிரதிநிதிகள் கொண்ட பல்வேறு நுால்களைப் பத்திரப்படுத்தி
வைத்திருந்தார்.தலைவர்களின் வாழ்வில் ஐசக் நியூட்டன் இளமையில் மாடுமேய்க்கச் செல்லும்போது, அவற்றை புல் மேயவிட்டு புத்தகங்களைப் படிப்பார். அலெக்சாண்டர் ஒவ்வொரு நாடாக வெற்றி கண்டு அந்த செய்தியை தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலுக்கு தெரிவித்தப்போது, "நாடு உனக்கு முக்கியமாக இருக்கலாம். அந்த நாட்டிலுள்ள அறிஞர்கள் எழுதிய ஏடுகள் எனக்கு முக்கியம். அவற்றை எனக்கு அனுப்பி வை" என்றார்.
அவ்விதமே அலெக்சாண்டரும் அனுப்பினாராம். ஜான்ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் 'கடைத்தேற்றம்' என்ற நுால்தான் காந்தியடிகளின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.
பகத்சிங்கை துாக்கில் போடும் நேரம் நெருங்கிய போது, 'லெனின் புரட்சி' என்ற நுாலின் கடைசி அத்தியாயத்தைப் படித்து கொண்டிருந்தார். காவல் அதிகாரிகளிடம் ஐந்து நிமிடம் அனுமதி வாங்கி, அந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிட்டு அந்தப் பக்கத்தை மடித்து வைத்துவிட்டு துாக்கு மேடைக்குச் சென்றார்.
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு, நுால்கள் கற்பதன் அருமையை நன்கு உணர்ந்தவர். அவர் கோவை - சென்னை ரயிலில் போக வர முதல் வகுப்பு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு பயண நேரம் முழுவதும் படித்தப்படி இருப்பார். படிப்பதற்கென்றே பயணம் மேற்கொள்வாராம். வேலைகளை ஒதுக்கிவிட்டு, பிரச்னைகளை மறந்து அடுத்தவர் குறுக்கீடின்றி படிப்பதற்காகவே அந்த
உத்தியைக் கையாண்டார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தனது படுக்கை முழுவதும் புத்தகங்களைப் பரப்பி வைத்திருப்பாராம். அதை அடிக்கடி எடுத்துப் படிப்பாராம். இவ்வாறு, அறிஞர் பெருமக்களின் வாழ்வில் நுால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
"மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கி
சக மக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினியாய் எழுந்த உயர்
எண்ணமெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை
புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்!
என்ற சீரிய கருத்தினை கவிஞர்
பாரதிதாசன் கூறுவதிலிருந்து நுால்களின் அருமை புலனாகிறது. நுால் எனும்
ஏணி நமக்காக காத்திருக்க, நாமும்
ஏறத் தயாராகலாமே!
--- பா.பனிமலர்,தமிழ்த்துறைத் தலைவர்,இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லுாரி,மதுரை. 94873 39194.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X