சென்னை: சென்னை, புழல் சிறையில், ஜெயிலர் மற்றும் வார்டன்கள் நான்கு பேர் மீது, இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் கைதானவர்களும், பயங்கரவாதிகள் மூன்று பேரும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்; இரண்டு பேரை சிறை பிடித்தனர். படுகாயமடைந்த சிறை அதிகாரிகள், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 16 பேர் கைதுகடந்த ஆண்டு ஜூனில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், 49, கொலை வழக்கில், ராஜா முகமது, அப்துல் வகாப், தமீம் உட்பட, 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும், ஆந்திர மாநிலம், புத்துாரில் பதுங்கியிருந்த போது, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட, மூன்று பயங்கரவாதிகளும், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஜெயிலர் இளவரசன், 58, அனைத்து கைதிகளும் அறைக்குள் சென்று விட்டனரா என, சோதனையில் ஈடுபட்டார்; அப்போது, உயர் பாதுகாப்பு அறையில், கைதிகளின் எண்ணிக்கையை சரி பார்க்க உள்ளே சென்றார்.அடுத்த சில நிமிடங்களில், அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ரோந்து பணியில் இருந்த வார்டன்கள் முத்துமணி, 27, ரவிமோகன்,40, செல்வின் தேவராஜ், 42, ஆகியோர் ஜெயிலரை காப்பாற்ற உள்ளே சென்று கைதிகளை அடித்தனர். இதனால், ஆத்திரமடைந்த கைதிகள் அவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். கல், உருட்டு கட்டை என, கையில் கிடைத்த பொருட்களால் தாக்கினர். வார்டன் முத்துமணியை, கூர்மையான இரும்பு கம்பியால் குத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்த மற்ற வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகள் அங்கு சென்றனர்; கைதிகளை சிறைக்குள் தள்ளி, படுகாயம் அடைந்த ஜெயிலர் மற்றும் வார்டன்களை காப்பாற்றி, ஆம்புலன்ஸ் மூலம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கள் மவுரியா, ராஜேந்திரன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகரன் ஆகியோர் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். நிபந்தனைமேலும், தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள், உதவி ஜெயிலர் குமார், வார்டன் மாரி ஆகியோரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர். 'சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி பேச்சு நடத்திய பிறகே, இருவரையும் விடுவிப்போம்' என, நிபந்தனை விதித்தனர். இரவு, 9:00 மணிக்கு, புழல் சிறைக்கு சென்ற திரிபாதி, அவர்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE