உடுமலை: உடுமலை அருகே கிராமங்களில், அதிகரித்துள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மும்முனை மின்சாரம் இல்லாமல், விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை அருகே கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணறு, சோமவாரப்பட்டி மேற்குப்பகுதி, அம்மாபட்டி, பொட்டிநாயக்கனுார், பொட்டையம்பாளையம், தொட்டம்பட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, வெனசப்பட்டி உட்பட கிராமங்களுக்கு, கொங்கல்நகரம் துணை மின்நிலையம் மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் மற்றும் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.
மாலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவு, 11:00 மணி வரை, குறிப்பிட்ட இடைவெளிகளில், ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால், மாணவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் மின்னழுத்த பாதையில், தென்னை மர மட்டைகள் விழுவது, மின்பாதையில் பழுது உட்பட பல்வேறு காரணங்கள், மின்வாரியத்தால், தெரிவிக்கப்படுகின்றன. மின்வெட்டு முடிந்து, மின்சாரம் வினியோகிக்கும் போது, குறைந்த மின்னழுத்த பிரச்னையும் அப்பகுதியில், ஏற்படுகிறது.
கொங்கல்நகரம் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய மின் இணைப்புகளுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படும். கடந்த சில நாட்களாக மும்முனை மின்சாரம் எப்போது வரும் என தெரியாத அளவிற்கு மின்வெட்டு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வறட்சி காரணமாக, போர்வெல்களை இயக்கி, கிணற்றில் நிரப்பி, அந்த தண்ணீரை தென்னை மரங்களுக்கு பாய்ச்ச வேண்டிய நிலையில், விவசாயிகள் உள்ளனர். மும்முனை மின்சார வினியோகம் சீராக இல்லாத நிலையில், தென்னை மரங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் சார்பில், நேற்று, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், 'அறிவிக்கப்படாத மின்வெட்டால், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மின்பாதை பிரச்னைகளால், மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுக்க, பராமரிப்பு பணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில், நிறுவப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான காற்றாலைகள் மூலம் பல்வேறு பகுதிகள் மின்வினியோகம் பெற்று வருகின்றன. ஆனால், மும்முனை மின்சாரத்திற்காக இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய நிலையில், நாங்கள் உள்ளோம்', என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், நெகமம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமச்சந்திராபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களிலும் மும்முனை மின்சாரம் சீராக வினியோகிக்கப்படுவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE