சென்னை, புழல் மத்திய சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து, படுகாயமடைந்த ஜெயிலர் மற்றும் வார்டன்கள், போலீஸ் உயர் அதிகாரிகளிடம், 'பகீர்' வாக்குமூலம் அளித்துள்ளனர்.சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் உட்பட, பா.ஜ., நிர்வாகிகள் மூன்று பேர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள், 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில். இவர்களும், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான, சாதிக் நவாஸ், அப்துல் சலீம் உள்ளிட்ட, 16 பயங்கரவாதிகளும், சென்னை புழல் மத்திய சிறையின் உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, இவர்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்கு கணக்கெடுக்கச் சென்ற உளவுப்பிரிவு ஜெயிலர் இளவரசனை, அனைவரும் சுற்றிவளைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அப்போது, இளவரசனை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவி மோகன், செல்வின் தேவதாஸ் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
சிறைபிடிப்பு
அதுமட்டுமின்றி, உதவி ஜெயிலர் குமார், வார்டன் மாரி ஆகியோரை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சிறைபிடித்த கைதிகள், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., திரிபாதி பேச்சு நடத்திய பின் விடுவித்தனர். கைதிகள், வார்டன்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சக வார்டன்கள், காயமடைந்த ஜெயிலர் மற்றும் வார்டன்களை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஜெயிலர் இளவரசன் மற்றும் வார்டன்கள் அளித்த வாக்குமூலம் பற்றி, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
கடந்த சில நாட்களாகவே, 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், குளிர்பானம், பீடி, சிகரெட் மற்றும் உயர்தர சாப்பாடு கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். சமீபத்தில், பிரியாணி வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். 'அதற்கெல்லாம் அனுமதி கிடையாது' என, ஜெயிலர் இளவரசன் மறுத்துள்ளார்.
மேலும், பக்ருதீன் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைகளில், அலைபேசி சிம் கார்டு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என, இளவரசன் அடிக்கடி சோதனை
நடத்தியுள்ளார். இதனால், அவர் மீது பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் அனைவரும், உயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தாலும், காலை, 6 மணியில் இருந்து மாலை, 6 மணி வரை, சிறை அறையில் இருந்து திறந்து விடப்பட்டு, வளாகத்தில் தான் இருப்பர். மாலை, 3 முதல் 5 மணி வரை, கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்கும் நேரம்.
இந்த நேரத்தில் தான், பயங்கரவாதிகள் அனைவரும் இணைந்து, இளவரசனை தீர்த்து கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காக, கேரம் போர்டு சட்டம், மரக்கட்டைகள், கருங்கல் உள்ளிட்ட ஆயுதங்களை தயார் நிலையில் எடுத்து வைத்துள்ளனர்.
இளவரசன், நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல கைதிகள் பற்றி கணக்கெடுக்க சென்ற போது, 'உதவி ஜெயிலர் குமாரை பார்க்க வேண்டும்' என, பயங்கரவாதிகள் அனைவரும் அவரிடம் ஒட்டுமொத்தமாக தெரிவித்துள்ளனர். 'பிரியாணி வாங்கித் தர வேண்டும்; இல்லையெனில் உண்ணாவிரதம் இருப்போம்' என்றும் மிரட்டியுள்ளனர்.
இளவரசன் மறுக்கவே, 'போலீஸ்' பக்ருதீன் திடீரென பாய்ந்து, அவரின் கைகளை பின்னால் பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளான். பிலால் மாலிக், கேரம் போர்டு மரச்சட்டத்தை எடுத்து வந்து பலமாக அடித்துள்ளான். அடி தாங்க முடியாமல், தன்னை விட்டு விடும்படி இளவரசன் கெஞ்சியுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த வார்டன் முத்துமணி, 'விடுங்கடா...' என, பயங்கரவாதிகளை அதட்டிய போது, அவரையும் கேரம் போர்டு மரச்சட்டத்தால், பிலால் மாலிக் கடுமையாக
தாக்கியுள்ளான்; இதில், முத்துமணிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய அவர், பின் கீழே சரிந்துள்ளார்.அதைப் பார்த்து, வார்டன்கள் ரவிமோகன், செல்வின் தேவதாஸ் ஆகியோர் ஓடிச்சென்று காப்பாற்ற முற்பட்டுள்ளனர். அப்போது, அவர்களையும் பயங்கரவாதிகள் சூழ்ந்து கொண்டு, மரக்கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
வலி தாங்க முடியாமல், ஜெயிலர் மற்றும் வார்டன்கள் அலறவே, சக போலீசார் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்
ஜெயிலர் இளவரசன் உள்ளிட்டோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது, 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று காலை, பிலால் மாலிக் - கடலுார்; பன்னா இஸ்மாயில் - மதுரை; 'போலீஸ்' பக்ருதீன் - வேலுார்; முன்னா ரபிக் - கோவை; காஜா மொய்தீன் - சேலம்; மண்ணடி அப்துல் முத்தலீப் - திருச்சி சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
பிரியாணி கேட்டு கலாட்டா
புழல் சிறையிலிருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வேலுார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, 'போலீஸ்' பக்ருதீனை, நேற்று காலை, 11:00 மணிக்கு, தனி, 'செல்'லில் அடைத்தனர். அவனுக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
மதியம், 12:00 மணிக்கு, பக்ருதீனுக்கு மதிய உணவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொடுக்கப்பட்டது. உணவு தட்டை துாக்கி எறிந்த அவன், சிக்கன் பிரியாணி கேட்டு கலாட்டா செய்தான். அரை மணி
நேரம் கெஞ்சி கூத்தாடி, சிறை காவலர்கள் அவனை சமாதானம் செய்தனர்.சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயிலர் இளவரசன், வார்டன்கள் ரவிமோகன், செல்வின் தேவதாஸ் ஆகியோர், நேற்று மதியம், வீடு திரும்பினர். தலையில், 20 தையல் போடப்பட்டுள்ள வார்டன் முத்துமணி, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள
அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறை வார்டன்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு, புழல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 'கைதிகளை தாக்கினால், மனித உரிமை கமிஷன் நடவடிக்கை பாய்கிறது; சிறை வார்டன்கள் மீது தாக்குதல் நடத்திய கைதிகளுக்கு என்ன தண்டனை' என, கேள்வி எழுப்பினர்.
புழல் சிறையில் தற்போது...
* புழல் மத்திய சிறையில் தற்போது, விசாரணை கைதிகள், 2,003; தண்டனை கைதிகள், 673 மற்றும் மகளிர் சிறையில், 121 பேர் உள்ளனர்
* சிறை பாதுகாப்பு பணிக்கு, ஜெயிலர் உட்பட, 444 போலீசார் உள்ளனர்; அவர்களில், 30 சதவீதம் பேர் அலுவலக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
* அதனால், கைதிகளை கண்காணிப்பது, ரோந்து வருவது மற்றும் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில், சொற்ப எண்ணிக்கையிலான போலீசாரே ஈடுபடுகின்றனர்
* செல்வாக்கு மிக்க கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைகளில், அலைபேசி வசதி தாராளமாக உள்ளது. இந்த வசதி கிடைக்காத பிற கைதிகள், வார்டன்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE