லெக்கின்ஸ் கவர்ச்சியா - தேவையா?| Dinamalar

'லெக்கின்ஸ்' கவர்ச்சியா - தேவையா?

Updated : அக் 04, 2015 | Added : செப் 26, 2015 | கருத்துகள் (56) | |
'காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்துாரிப் பொட்டு வைச்சு' என்ற ஜேசுதாசின், அந்நாளையப் பாடலை, யாரேனும், 'காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி, கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு வெச்சு தேவதை போல், நீ நடந்து வர வேண்டும்' என, ரீ-மிக்ஸ் செய்தாலும் செய்யலாம். இன்று, 'லெக்கின்ஸ்' அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை.எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும்
'லெக்கின்ஸ்' கவர்ச்சியா - தேவையா?

'காஞ்சிப் பட்டுடுத்தி, கஸ்துாரிப் பொட்டு வைச்சு' என்ற ஜேசுதாசின், அந்நாளையப் பாடலை, யாரேனும், 'காட்டன் லெக்கின்ஸ் உடுத்தி, கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு வெச்சு தேவதை போல், நீ நடந்து வர வேண்டும்' என, ரீ-மிக்ஸ் செய்தாலும் செய்யலாம். இன்று, 'லெக்கின்ஸ்' அந்த அளவு பெண்களுக்கு பிடித்த உடை.

எல்லா உடைகளுக்கும், ஒரு வரலாறும், ஒரு பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சரித்திரம் உண்டு. லெக்கின்ஸ் என்பது ஆண் - பெண் இருவருக்குமான உடையாகத் தான், ஆரம்பத்தில் இருந்தது. 16ம் நுாற்றாண்டிலிருந்து வலம் வரும் உடை இது. ஐரோப்பாவில் குளிர் தாங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் கால் சாராய் அல்லது பாவாடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளக் கண்டுபிடித்த உடையே லெக்கின்ஸ். அப்போதெல்லாம் ஒரு காலுக்கு ஒன்று என்று, இந்த உடைக்கு இரு பகுதிகள் இருக்கும். ஒருவழியாக, 1960க்கு பின், அமெரிக்காவில், இன்று இருப்பது போன்ற லெக்கின்ஸ் வடிவமைப்பு வந்தது. குளிர் தேசங்களுக்காக, நைலானில் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காட்டன் மற்றும் இன்ன பிற சன்னமான இழைகளால் உருவாக ஆரம்பித்ததும், இதே கால கட்டத்தில்தான்.

பின், கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய இந்த உடை, இந்தியப் பெண்களுக்கு பிடித்தமான உடையாகிப் போனது, கடந்த, 4 - 5 ஆண்டுகளில் தான். சென்னை போன்ற பெரு நகரங்களில், கடந்த இரு ஆண்டுகளாக!சல்வார் கமீஸ் என்கிற உடை, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பின், அதை அணியும் பெண்களுக்கு, ஒரு பெரிய பிரச்னை வந்தது. 'கமீஸ்' எனப்படும் மேல்சட்டை சரியாக அமைந்து விடும். கால் பகுதிக்கான, சல்வார் அல்லது சுரிதார் சரியாக அமையாது. 'சல்வாருக்கும், சுரிதாருக்கும் வித்தியாசம் தெரியாத பாவப்பட்டவர்களுக்கு, சல்வார் லொட லொட என்று இருக்கும். சுரிதார் வளையம் வளையமாக கால்களில் இறுக்கி இருக்கும்; 'ச்சூரி' என்றால், இந்தியில் வளையல். இந்தப் பிரச்னையை லெக்கின்ஸ் தீர்த்தது.

கறுப்பு, பச்சை, சிவப்பு என்று பொத்தாம் பொதுவான நிறங்களில், 5, 6 லெக்கின்ஸ் வாங்கி, கொடியில் தொங்கப் போட்டு விட்டால், கையில் கிடைக்கும் சல்வார் டாப்பை உருவி எடுத்து, 'மேட்ச்சிங்' லெக்கின்ஸ் அணிந்தால், பிரச்னை போயே போச்சு. காலைத் துாக்கி வண்டியில் போட சவுகரியம். உடலில் உறுத்தாத மென்மையான உடை என்கிற சவுகரியம். 'அயர்ன்' செய்ய வேண்டாம். இவை தான் இடைத்தேர்தலில் நிற்கிற ஆளுங்கட்சி மாதிரி, லெக்கின்ஸ் போட்டியின்றி ஜெயித்த காரணங்கள்.லெக்கின்ஸ் அணியலாமா என்று படம் பிடித்து போட்ட பத்திரிகைகள் யாவும், தம் பருத்த கால்களில், முக்கால் அளவு வெளியே தெரிய, அரை டிராயர் அணிந்து வரும் ஆண்களை அல்லது லுங்கியை துாக்கி, உள்ளே இருக்கும் பட்டா பட்டி உள் ஆடையை வெளிப்படுத்தும் ஆண்களை, படம் பிடித்து போடவே மாட்டார்கள்.

ஏனெனில், இவை எல்லாம் எவ்வளவு ஆபாசமேயானாலும், விற்பனை பொருளல்ல. பெண் உடல் சம்பந்தப்பட்ட எதுவும் தான் விற்பனை பொருள். இந்த விவாதங்கள் வரும் போது, 'நாங்க எதை போட்டுகிட்டா உங்களுக்கு என்ன; உங்க பார்வையை சரியா பாருங்க...' என்று பெண்கள் தரப்பும், 'உங்க பாதுகாப்புக்காகத் தான் நாங்க பேசறோம்...' என்று ஆண்கள் தரப்பும் எப்போதும் சப்தமிடுவர்ஜீன்ஸ் அணிந்த பெண், நீதிமன்றத்தில் நுழையலாமா? நீளக் குர்த்தி அணிந்திருந்தாலும், மேலே துப்பட்டா அணியாத பெண், கல்வி மன்றங்களில் நுழையலாமா? லெக்கின்ஸ் அணியலாமா கூடாதா? ஓயாத சர்ச்சைகள் பெண் உடைகள் பற்றி. டில்லி பஸ்சில் நடந்த, 'நிர்பயா' சம்பவத்திற்கு பின், பொறுப்பில் உள்ள ஒரு பிரமுகர், 'பெண்கள், நீண்ட கோட் மாதிரி உடைக்கு மேலே அணிந்தால், அவர்களுக்கு அது பாதுகாப்பு' எனக் கூறினார்.

இன்னமும், சிலர் வழங்கிய அறிவுரைகள், 'பெண்கள் ஒழுங்கா டிரஸ் செய்துக்கிட்டா, பாதி குற்றங்கள் நடக்காது!' பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளும், குற்றவாளிகளுக்கு வாய்தாவும் வழங்கி கொண்டிருக்கும் நம் அமைப்பின் விசித்திரங்களில் அந்த அறிவுரைகளும் அடக்கம்.
லெக்கின்ஸ் உண்மையாகவே ஆபாச உடையா? நம் பண்பாட்டின் சின்னமாக போற்றப்படும் புடவையை கூட, மிக ஆபாசமாக அணிய சில பெண்களால் முடியும். தன்னை வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமும், தன்னை பார்த்து விரியும் ஆணின் கண்களில் தன் முக்கியத்துவத்தை உணரும் இச்சையும் கொண்ட சில பெண்களால், எந்த பவித்திரமான உடையையும் ஆபாசமாக்கி விட முடியும்.

ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட, 18 - 19ம் நுாற்றாண்டுகளில், 'உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்' என்ற எச்சரிக்கை வாசகம் விற்பனை அட்டைகளில் இருந்ததாய் சிலர் கூறுகின்றனர்.உடைகளில் கவுரவம் என்பது, பெண்ணின் கருத்தோற்றத்திலும், பெண்ணை வெறித்துப் பார்க்கக் கூடாது என்ற கண்ணியம், ஆணின் கண்ணோட்டத்திலும் இயல்பாக வளர வேண்டியதே ஒரு நாகரிக சமூகத்தின், சரியான அளவுகோல். படங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் ஓய்ந்து விடும். ஏனெனில், உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்கு காலம் மாறுபவை. ஆனால், மாறாத மானுட மதிப்பீடு என்பது, ஆண் - பெண்ணை பார்க்கும் பார்வை. இவள் உடல் மட்டுமல்ல, ஒரு உயிர், ஒரு அறிவு, ஒரு ஆன்மா என்ற பார்வை இந்த மதிப்பீட்டை வளர் பருவ ஆணிடமும், பெண்ணிடமும் ஏற்படுத்த குடும்பங்கள், ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள், ஊடகங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு வேறு என்ன தான் வழி?
இமெயில்: bharathy.bhaskar@gmail.com

-- பாரதி பாஸ்கர்,
பேச்சாளர்,
சமூக ஆர்வலர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X