சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகம் வேளாண் புலம் பூச்சியியல் துறை சார்பில் 'ஹைமனாப்டிரா ஒட்டுண்ணிகள்' குறித்த சர்வதேச கருத்தரங்கு வேளாண் புலம் அரங்கில் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் வேளாண் புலம் பூச்சியியல் துறை சார்பில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத பூச்சி நிர்வாக முறை முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் வேளாண் புலம் பூச்சியியல் துறை சார்பில் 'ஹைமனாப்டிரா ஒட்டுண்ணிகள்' குறித்த சர்வதேச கருத்தரங்கு வேளாண் புலம் பயிற்சி அரங்கில் 5 நாட்கள் நடந்தது.
கருத்தரங்கிற்கு, வேளாண் புலம் முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் செல்வநாராயணன் வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் மணியன் தேசிய கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 34 பங்கேற்றனர். கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், பல்கலைக் கழக பூச்சியியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி வளப்பணியகம் இயக்குனர் ஆப்ரகாம் வர்கீஸ், பூச்சிக்கொல்லி மருந்து தடுப்பு, ஒட்டுண்ணிகள் வளர்ப்பு, பயன்படுத்தும் முறைகள் குறித்து கருத்துரை வழங்கினார். பூச்சியியல் துறை பேராசிரியர்கள் மாணிக்கவாசகம், கனகராஜன், ஆராய்ச்சியாளர்கள் பலர் பங்கேற்றனர்.