சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பொது போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், 1,500 கூடுதல் பேருந்துகளை இயக்க, எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது. அதற்காக, புதிய பணிமனைகள் கட்டும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
சென்னையில், போக்குவரத்து சேவையை அளித்து வரும் மாநகர போக்குவரத்து கழகம், தற்போது, 27 பணிமனைகளுடன், 4,000 பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன் மூலம் தினசரி, 52 லட்சம் பயணிகள், மாநகர பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
புதிய பணிமனைகள்
சென்னையில் இருந்து 50 கி.மீ., துாரத்திற்கு, புறநகர் பகுதிகளை ஒருங்கிணைத்து, மாநகர போக்குவரத்து கழகத்தின் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விரிவாக்க பகுதிகளில் இன்னும் கூடுதல் பேருந்து சேவைகளை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
தற்போது, சென்னையின் மைய பகுதிகளில் உள்ள பணிமனைகளில் இருந்து, விரிவாக்க பகுதிகளில், 50 கி.மீ., துாரத்திற்கு மேல், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் பல்வேறு நிர்வாக சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரிவாக்க பகுதி களில், முக்கிய நகர்களை தேர்வு செய்து, மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய பணி
மனைகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆதம்பாக்கம், பெசன்ட் நகர், கண்ணகி நகர், பாடியநல்லுார், குன்றத்துார், மகாகவி பாரதியார் நகர், குரோம்பேட்டை - 2, பெரும்பாக்கம், பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, தையூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் புதிய பணிமனைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
இலக்கு
இதில், ஆதம்பாக்கம், பெசன்ட் நகர் ஆகிய பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளன. கண்ணகி நகரில், பணிகள் துவங்கி உள்ளன. ஓராண்டில் பணிகள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாடியநல்லுார், குன்றத்துார், மகாகவிபாரதி நகர், குரோம்பேட்டை - 2 ஆகிய நான்கு பணிமனைகள் கட்டுமான பணி முடிந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா, பணிமனைகளை விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
பெரும்பாக்கத்தில் பணிமனை கட்டுமான பணிக்கு, 14.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது. பெரம்பூரில், பணிமனை கட்டுமான பணிக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணி துவங்க உள்ளது.
கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி ஆகிய இடங்களில், பணிமனை அமைக்க, நிலம்
கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. தையூரில் நிலம் எடுப்பு பணிகள் நடந்து
வருகின்றன.
இதனால் இந்த ஐந்து பணிமனைகள் திறப்பதற்கு மேலும் ஓராண்டிற்கு மேல் ஆகும் என, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து கண்காணிப்பு குழு கூட்டத்தில், அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE