வேலூர்: வேலூர் சிறையில், சிக்கன் பிரியாணி கேட்டு, போலீஸ் பக்ருதீன் கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். நேற்று முன்தினம், புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணமான போலீஸ் பக்ருதீன், வேலூர் சிறைக்கும், பன்னா இஸ்மாயில், மதுரை சிறைக்கும், பிலால் மாலிக், கடலூர் சிறைக்கும், காஜா மொய்தீன், சேலம் சிறைக்கும், முன்னா கோவை சிறைக்கும், கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை, திருச்சி சிறைக்கும் மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் நேற்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. நேற்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE