'கண்'ணுக்குள் இத்தனை கருத்துக்களா | Dinamalar

'கண்'ணுக்குள் இத்தனை கருத்துக்களா

Added : செப் 28, 2015 | கருத்துகள் (2)
Advertisement
'கண்'ணுக்குள்  இத்தனை கருத்துக்களா

ஒளியை உணர உதவும் உறுப்பு கண். மனதில் ஒன்றை வைத்து உதட்டில் மற்றொன்றை பேசினால் கண்கள் காட்டி கொடுத்துவிடும். கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். கண்ணுக்கு கண் பார்த்து பேசும்போது நேர்மையின் அளவீடு தெரியும். உடல் உறுப்புகளில் அறிவின் திறவுகோலாக இருப்பது கண்கள். குறிப்பு அறிதலிலும், குறிப்பு அறிவுறுத்தலிலும் கண் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கண்களை மையமாக கொண்டு ஏராளமான கருத்தாக்கங்கள் உருவாகின.
ஆறறிவு மனிதனுக்கு நான்காவது அறிவாக கண் உள்ளது. கண் என்ற உறுப்பு மனிதன் மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் உண்டு. மனிதன் மட்டுமே கல்வி அறிவுடன் விலங்குகளில் இருந்து உயர்ந்து நிற்கிறான். இதனை பெற கண், செவி முக்கிய பங்கு வகிக்கின்றன. கண் என்ற சொல்லுக்கு 47 வகையான பொருளை தருகிறது கழக பேரகராதி.கண்களை மையமாக வைத்து பல்வேறு சொற்கள் வழக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை கண்ணோட்டம், நோக்கு, பார்வை, கண் திறத்தல், கண்கொத்தி பாம்பு, கண்ணழித்தல், கண்காணி, கணிச்சியேன் (சிவன்), விழிப்புணர்வு முதலியவை.
பார்வை என்பது இயல்பாக பார்ப்பதை குறிக்கும். செய்யுள் உறுப்புகளில் ஒன்றான நோக்கு என்ற சொல் ஏதேனும் ஒரு குறிக்கோளுடன் நோக்குவதாகும். இதையே வள்ளுவர்,'இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்குநோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து'என்று குறிப்பிடுகிறார். கோயில்களில் சுவாமி சிலையை வடிக்கும்போது, அனைத்துவித வேலைப்பாடுகளும் முடித்தபின் இறுதியாக நடக்கும் கண் திறக்கும் நிகழ்வு முக்கிய இடத்தை பெறுகிறது.
இலக்கியத்தில் கண்கள் கண்களின் முக்கியத்துவத்தை இலக்கிய, இலக்கணங்கள் உணர்த்துகின்றன. எண்ணும், எழுத்தும் என இரு அறிவுக் கண்களை பெற்றவர்களே உயிர் வாழ்வோராக கருதப்படுவர் என, வள்ளுவர் குறிப்பிடுகிறார்.'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு'தமிழில் காதலுக்கு கண் இல்லை. கண்கள் வழியே கண்டு உள்ளத்தில் கலப்பதே உண்மையான காதல். எழுத்துக்களில் ஒலிக்கும் கால அளவை, கண் இமைக்கும் நேரத்தை கொண்டு வரையறை செய்தனர் தமிழ் இலக்கண அறிஞர்கள். கல்வி அறிவு பெறாதோர் கண் இருந்தும் குருடர் என, வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தன்னை இகழ்ந்த காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியை பார்த்து, 'உறங்கிய புலியை காலால் இடறிய குருடன் போல உயிரோடு திரும்புவது அரிது' என பாடுகிறார் (புறம் 73) சோழன் நலங்கிள்ளி. இதன்மூலம் அறியாமையை போக்கும் விளக்காக, கண்கள் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.
கண் தானம் செய்த முதல் தமிழன் தானத்தில் சிறந்தது கண்தானம். முதன்முதலில், கண் தானம் செய்தவர் திண்ணன். தனது இறைப்பணியை மெய்ப்பிக்க, கண்களையே தானம் செய்தவர் என்பதால் 'கண்ணப்ப நாயனார்' என்ற சிறப்பு பெயரை பெற்றார்.சங்க கால புலவர்களை வேறுபடுத்த, உடல் உறுப்புகள் அடிப்படையில் பெயரிட்டு வழங்குகிறோம். கண் அடிப்படையில் பலருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன. கண்களை அதிக நேரம் இமைக்காமல் இருக்கும் திறன் கொண்டவராக இருந்ததால், 'நெட்டிமையார்' என்ற சிறப்பு பெயரை பெறுகிறார் ஒரு சங்கப்புலவர்.விழிப்புணர்வு என்பது ஒரு நிகழ்வு பற்றியோ, ஒரு பொருளை பற்றியோ, உணர்வுகள் பற்றியோ உண்மையான நிலையை ஏற்றுக்கொள்ள கூடிய அல்லது உணரக்கூடிய ஆற்றலை குறிக்கும்.
விழிப்புணர்வு ;மனிதன் கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது விழிகள் மூடப்பட்டு வெளிக்காட்சிகள் எதுவும் கண்களுக்கு தெரியாது. வேலைப்பளு மற்றும் சிந்தனை சிதறல்களால் அறிய வேண்டியதை அறியாமல், ஏமாற்றப்படுவதை உணராமல் இருக்கும் நிலையை உறக்கத்தில் இருந்து விழித்தெழ வைப்பதே விழிப்புணர்வு.ஒருவர் பிரச்னைகளில் இருந்து தானாக விழிப்புணர்வு அடைய முடியும். ஒருவர் மற்றவருக்கோ அல்லது ஒரு மக்கள் கூட்டத்திற்கோ விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.இதனை முன்வைத்தே பசித்திரு, தனித்திரு, விழித்திரு எனும் தாரக மந்திரத்தை போதித்தார் வடலுார் வள்ளலார்.
காதலும், கண்களும் காதலின் தொடக்கமே கண்களின் வழியே அமைகிறது. இதனை வள்ளுவர்,'கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள'என்று குறிப்பிடுகிறார். வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி, கம்பர் தமிழில் ராமாயணத்தை படைத்த போதிலும், அதனை தமிழ் மரபிற்கு ஏற்றவாறே படைத்து காட்டுகிறார். நோக்கு வர்மம் வர்மத்தில் 4 வகைகள் உண்டு. இதில் கண்ணை அடிப்படையாக கொண்ட நோக்கு வர்மத்திற்கு 'மெய்தீண்டாக் கலை' என்ற பெயரும் உண்டு. நம்மை தாக்க வரும் மனிதர்கள் அல்லது விலங்குகளின் மீது பார்வையை செலுத்துவதன் மூலம் அவர்களை செயலிழக்க செய்து நம்மை தற்காத்து கொள்வதே இக்கலையில் நோக்கம்.
கண் திருஷ்டி, கண்படுதல், கெட்ட பார்வை, ஒரு பார்வையில் சப்த நாடியும் அடங்கி போதல் என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் பயன்பாட்டில் உள்ளதை, நோக்கு வர்மத்தின் எச்சமாகவே கருத வேண்டும்.கண்கள் குறித்த கண்ணோட்டம் இன்று மாறி வருவதை காலம் மாறிப்போச்சு என்ற புதுக்கவிதை உணர்த்துகிறது.''அண்ணலும் நோக்கினான்அவளும் நோக்கினாள்இல்லை இல்லைஅண்ணலும் நோக்கினான் -என்மனைவியும் நோக்கினாள் -அதைநானும் நோக்கினேன் -என்னைஅவளும் நோக்கினாள் -நான்குனிந்து கொண்டேன்!ஏன் என்று மாய்ந்த பொழுதுகிடைத்தது
பதில்... காலம் மாறிப்போச்சு!நானும் சம்பாதிக்கிறேன்'' என, மனிதன் புறக்கண்களினால் உலகைக்கண்டு உழன்று திரியும் வேளையில், சித்தர்கள் குறிப்பிடும் அகக்கண்ணால் நோக்கினால் உயர்வான வாழ்வை (வீடுபேறு) பெறமுடியும்.கண்களின் வழியே கண்டவற்றின் அடிப்படையில், உள்மனதில் தோன்றும் கனவுகளை நிகழ்வுகளாக மாற்ற, அயராது உழைத்து பெருவாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும். இளைஞர்கள் கனவு காண வேண்டும். அதனை நனவாக்க அயராது உழைக்க வேண்டும் என்ற அப்துல்கலாமின் பொன்மொழிகளுக்கு ஏற்ப வாழ, கண்கள் அடிப்படையாக உள்ளது என்றால் மிகையாகாது.- முனைவர் சி.சிதம்பரம்,உதவி பேராசிரியர்,காந்திகிராம பல்கலை,காந்திகிராமம். 98432 95951.வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) கண்னைப்பற்றியும், அதன் சிறப்பைப்பற்றியும் மிகச்சிறந்த ஒரு கட்டுரை. நாம் இறந்தாலும் கண் வாழும், எனவே இன்றே இவ்வளவு சிறப்புடைய நம்முடைய கண்களை தானம் செய்யும் முடிவை எடுப்போம். நமக்கு பிறகும் நாம் இவ்வுலகை காண்போம்
Rate this:
Share this comment
Cancel
நரேன் - Pune  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-201508:27:45 IST Report Abuse
நரேன் மிக அருமையான கட்டுரை ஐயா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X