எங்கே செல்கிறோம் இளைஞர்களே?| Dinamalar

எங்கே செல்கிறோம் இளைஞர்களே?

Updated : அக் 05, 2015 | Added : அக் 05, 2015 | கருத்துகள் (3)
Share
 எங்கே செல்கிறோம் இளைஞர்களே?

ஒரு நாட்டை நல்லரசாக மாற்றும் ஆற்றல் இளைய சமுதாயத்திற்கு உண்டு. வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்தும், எப்போது வளர்ச்சி அடைந்தன என ஆராய்ந்து பார்த்தால், எப்பொழுது அந்த நாடுகளில் இளைஞர்களது எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் அதிகமாக இருந்ததோ, அந்த காலக்கட்டத்தில்தான். தற்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் அதிகமாக உள்ளது. எனவே தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம், ''2020 ல் இந்தியா வல்லரசாக உருவெடுக்கும்'' என்றார். ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எங்கே செல்கிறது?
இளைய சமுதாயத்தின் மாற்றத்திற்கான முக்கியப் பொறுப்பாளர்கள் பெற்றோர், ஆசிரியர், அவன் வாழ்கின்ற சமுதாயம், அரசு, கல்விமுறை, தொலைக்காட்சி, திரைப்படம் என கூறிக் கொண்டே போகலாம். எவரும், 'இதில் எங்களுக்கு பங்கு இல்லை' என கூறமுடியாது.தாயை போல் பிள்ளை, நுாலைப்போல் சேலை என்பது முதுமொழி.
குழந்தைகளை வளர்த்தெடுத்து நல்ல மாணவனாக மனிதனாக மாற்றுவதில் முக்கியப் பொறுப்பு அன்னை, தந்தைக்கும் உண்டு. நிறையக் குடும்பங்களில் தன் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்; என்ன படிக்கிறார்கள்; யார் யார் அவரது நண்பர்கள், எங்கே செல்கின்றனர்; எப்பொழுது வருகின்றனர்? என கண்காணிப்பது கிடையாது.
குழந்தைகளுக்கு அன்னையின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் தேவை. இது, வீட்டில் கிடைக்காத போது அவர்கள் மனம், அதைதேடி வெளியில் சென்று தவறான நண்பர்களுடன் சேர்ந்து, தீயபழக்கங்களுக்கு ஆட்படுகின்றனர். தன்னைக் கெடுத்துக் கொள்வதோடு, தன் குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்பட வழி செய்கின்றனர்.
தவறு செய்வது எப்படி? பெற்றோர்கள் செய்யும் தவறுகளை உற்று நோக்கும் குழந்தைகள், தவறு செய்ய துாண்டப்படுகின்றனர். அத்தகைய பெற்றோர், அவர்களைத் தட்டிக் கேட்கும் திறன் அற்றவர்களாக ஆகி, குழந்தைகளை கண்டிக்காமல் விட்டுவிடுகின்றனர். பெற்றோர்களாகிய நாம்தான் நம் குழந்தைகளுக்கு 'ரோல்மாடல்'. இந்த இளைய சமுதாயத்தின் சீரழிவிற்கு முழு பொறுப்பேற்க வேண்டியவர்கள் பெற்றோரே.
ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரே முதல் ஆசிரியர், ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர். ஒரு மாணவனை நல்ல மனிதனாக, பண்பாளனாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கு உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அன்று ஆசிரியர்களுக்கு அதிக உரிமைகள் இருந்தன; அதைப் பயன்படுத்தி மாணவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, திருத்தி நல்வழிப்படுத்தினர். இன்றோ ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், மாணவர்களிடம் இல்லை. பெற்றோர்களும் அதைப்புரிந்து கொள்வதில்லை.
ஆங்காங்கு சில இடங்களில், ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதற்காக ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தையும், அதே கண்ணோட்டத்தோடு பார்த்தால், பொறுப்போடு பணிபுரியும் பல ஆசிரியர்களும் தங்களது பொறுப்பை செவ்வனே செய்ய முடியாத நிலைக்கு ஆளாக நேரிடும். பெற்றோர்களே, ஆசிரிய சமுதாயத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். ஆசிரியப்பெருமக்களும், தங்களது பணி சமுதாயத்தில் மிக முக்கியமானது என்பதை உணர வேண்டும்.
சமுதாய விலங்கு :ஒரு மாணவன் ஆசிரியர்களுடன் இருக்கும் நேரம், வெறும் 5 மணி நேரம் தான். மீதம் உள்ள 19 மணி நேரம், அவன் பெற்றோருடனும் சமுதாயத்துடனும் தான் இருக்கிறான். மனிதன் சமுதாயத்தோடு இணைந்து வாழ பழக்கப்பட்டவன். எனவேதான் மனிதனை 'சமுதாய விலங்கு' என்று குறிப்பிடுகிறோம். இன்று நாம் வாழும் சமுதாயம் எவ்வாறு இருக்கிறது.
முன்பெல்லாம் குற்றங்கள் செய்ய மக்கள் பயந்தார்கள். நாம் குற்றம் செய்தால் இந்த சமுதாயம் நம்மை துாற்றும்; பழிச்சொல்லுக்கு ஆளாக்கும்; இழிவாகப் பேசும் என்ற உணர்வு மக்களிடைய இருந்தது. எனவே, குற்றங்களும் குறைவாக இருந்தன.ஆனால் இன்றோ, தலைகீழாக மாறிவிட்டது. குற்றம் செய்பவர்கள் பயந்த காலம் போய், குற்றவாளிகளை கண்டு பயப்படக்கூடிய காலம் வந்துவிட்டது. அதை குற்றம் செய்பவர்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இன்றைய மாணவ சமுதாயத்தின் மாற்றத்தில் ஊடகங்களும், திரைப்படங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலங்களில் ஊடகங்களும், திரைப்படங்களும் பல்வேறு அரிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.அன்றைய திரைப்பட கதாநாயகர்கள், தவறு செய்வது போன்ற காட்சிகளில் நடிக்க தயங்கினர். உதாரணமாக புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து தாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறையுடன் நடந்து கொண்டார்கள். ஆனால் இன்று...?
எதிர்மறை கருத்துக்கள் திரைப்படம் மற்றும் ஊடங்களில் வரும் கதைகளை பார்ப்போமேயானால், திருமண பந்தத்தை மீறிய உறவு, சிறுவயது காதல், வன்முறை, கொள்ளையடித்தல், லை செய்தல், தகாத உறவு போன்ற எதிர்மறை கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதில் அதிக பங்கு வகிக்கின்றன. எப்பொழுதும் எதிர்மறை கருத்துக்கள் தான் எளிதில்மக்களை சென்றடையும்.
அதுவும் ஊடகங்கள் வாயிலாக இக்கருத்துக்களைச் சொல்லும் பொழுது, இது மக்களிடையே குறிப்பாக இளைய மற்றும் மாணவ சமுதாயத்திடம் எதிர்மறை எண்ணங்களைத் துாண்டும்.ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அறிவு பெற்றோர் தங்களது குழந்தைகளை அன்பாலும், அரவணைப்பாலும் ஆன்றோனாக, சான்றோனாக மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் தம் மாணவர்களை, தங்களது குழந்தைகள் போல் உடன் பிறந்தோர் போல் பாவித்து, அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி அறிவை வழங்கி வாழ்க்கையில் உன்னதமான இடத்தை அடைய வழிவகை செய்ய வேண்டும்.
சமுதாய முன்னேற்றத்திற்கான கருத்துக்கள், அதன் சாரம் குறையாமல் நம் இளைய சமுதாயத்திடம் சென்றடையச் செய்ய வேண்டும். ஊடகங்கள் தேவையற்ற கருத்துக்களை உதறித்தள்ளி, உன்னதமான, உண்மையான, நடைமுறைக்கு உகந்த நல்ல கருத்துக்களை மக்களுக்கு கொண்டு செல்ல உறுதி கொள்ள வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து பயனுள்ள கருத்துக்களை பயிற்றுவித்தால் நம் இளைய சமுதாயம் பயன்பெறும், பரவசமடையும், நம் பாரதத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும், அகில உலகமும் நம்மை திரும்பிப் பார்க்க வகை செய்யும் .
-எஸ்.கணேசன்,
பொருளியல் துறைத் தலைவர்.அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி. 98650 48554.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X