சாதிக்கும் இளமை: குறும்படங்களை வெளியிட தயக்கம் வேண்டாம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்கும் இளமை: குறும்படங்களை வெளியிட தயக்கம் வேண்டாம்!

Added : அக் 05, 2015
Advertisement

திரையுலகில் இளைஞர்கள் நுழைய, தலைவாசலாக இருப்பது, குறும்படங்களின் தயாரிப்பு.பலர், குறும்பட போட்டிகளை நடத்தும் நிறுவனங்களுக்கு, தங்கள் படங்களை அனுப்புகின்றனர்.
அவர்களில், வெற்றி பெற்றோர் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றனர். நிராகரிக்கப்பட்டோருக்கான இடம், இருட்டாகவே இருக்கும். மேலும், தான் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்பதையும் அறிந்து கொள்ள முடியாது.இந்த குறையை போக்க, இரு இளைஞர்கள் இணைந்து, குறும்படங்களை வெளியிடுவதற்கான பிரத்யேக இணையதளத்தை துவக்கி உள்ளனர்.
அவர்கள், சிவகாசி அருகில் உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் செல்வம், 31; இணையதள விளம்பர நிபுணர். திண்டுக்கல் அருகில் உள்ள வேளம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜன், 27; தகவல் தொழில்நுட்ப வல்லுனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
நாங்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 'லிங்க்டு இன்' என்ற வலைதளத்தின் மூலம் நண்பர்களானோம். இருவரும் கிராம பின்னணியில் இருந்து வந்தோர் என்பதால், தங்கள் திறமைக்கான களம் கிடைக்காமல் போராடும் பல இளைஞர்களை சந்தித்த அனுபவம் இருந்தது. அவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தோம்.
திரைப்படம் சார்ந்த திறமைகளோடு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, தங்களின் இளமையையும், கனவுகளையும் விரயமாக்குவோருக்கு உதவ வேண்டும் என, தீர்மானித்தோம். அப்போது தான், குறும்படங்கள் எடுப்போர் படும் கஷ்டங்கள், எங்களின் நினைவுக்கு வந்தன. அவர்களுக்காக, கடந்த ஆண்டு, அக்., ௭ம் தேதி www.shortfundly.com இணையதளம் உதயமானது.படைப்பாளிகள், தாங்கள் எடுத்த குறும்படங்களை, http://www.shortfundly.comல் பதிவேற்றினால், அவற்றை தரம்பிரித்து, நேயர்களுக்கு அளிக்கிறோம். அவர்கள், அந்த படங்களை பற்றிய நிறை குறைகளை அலசுவர்.
நேயர்கள் அளிக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில், நல்ல குறும்படங்கள், அதிகளவில் பார்க்கப்படும். அதன்படி, படைப்பாளிகள் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்த சுய சிந்தனை கிடைக்கும்.
அதேநேரம், குறும்பட போட்டி களுக்கோ, நிறுவனங்களுக்கோ படத்தை, 'டிவிடி, பென்டிரைவ்' வழியாக அனுப்பாமல், www.shortfundly.com இணையத்தில் உள்ள, 'லிங்க்' மூலம் மட்டும் அனுப்பி னால், படைப்பாளியின் சுய விவரங்களோடு, அதில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும்.அவற்றிற்கு, நேயர்கள் அளித்துள்ள கருத்துக்களும் அவர்களுக்கு சென்று சேரும். இதனால், படைப்பாளிகளை தேடும் தயாரிப்பாளருக்கும், தயாரிப்பாளரை தேடும் படைப்பாளிகளுக்கும் நேரடி பலன் கிடைக்கும்.
குறும்பட போட்டியாளர்களை வரவேற்கும் தளமாகவும், அவற்றை வெளியிடும் தளமாவும் இது இருக்கும். இதனால், உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகள் ஒரு இடத்தில் குவிவதோடு, ரசனை, திறமை குறித்த ஒப்பீட்டு பார்வையில் சுய பரிசோதனை செய்து, பயன் பெறுவர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். www.shortfundly.comல், அலைபேசியில் கூட, எளிதாக தரவிறக்கம் செய்து, பங்கிடும் வகையில், மொழிவாரியாகவும், ரசனை வாரியாகவும் அனைத்து குறும்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
அதில், 'காமெடி, ஹாரர், திரில்லர், மோட்டிவேஷன், ஆக் ஷன், லவ், ஹார்ட் டச்சிங், சயின்ஸ் பிக் ஷன், எக்ஸ்பெரிமென்டல், சைலன்ஸ்' உள்ளிட்ட, 32 தலைப்புகளில், குறும்படங்கள் உள்ளன.அவை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், ௨௨ லட்சத்திற்கும் அதிகமான குறும்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ் மட்டுமே 13 ஆயிரத்திற்கும் மேல். அதற்கடுத்த இடங்களை தெலுங்கு, மலையாள மொழி குறும்படங்கள் பிடித்துள்ளன.
செல்வமும், மகாராஜனும் கூறியதாவது:
நாங்கள், குறும்பட கலைஞர்களுக்கு, இலவச சேவையை தொடர்ந்து செய்யவே விரும்புகிறோம். எதிர்காலத்தில், திரைப்படம் சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்களையும் பதிவிடுவோம். அதனால், படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் சந்திக்கும் ஆரோக்கியமான கூடமாக, http://www.shortfundly.com இருக்கும். எங்கள் மூலம், நல்ல படைப்பாளிகளும், கலைஞர்களும் வெளிச்சத்திற்கு வந்தால், அதையே எங்கள் அடையாளமாக கருதுகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 99952355393, 99622 86636
- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X