டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: பெண் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை| Dinamalar

தமிழ்நாடு

டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: பெண் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

Added : அக் 05, 2015
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: பெண் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

சேலம்: திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தற்கொலை விவகாரம் குறித்து அரவக்குறிச்சி பெண், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரிடம், நேற்று, சி.பி.சி.ஐ.டி., போலீஸார், 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவருடன் பணியாற்றிய போலீஸார், இன்ஸ்பெக்டர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தோழியும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி டி.எஸ்.பி.,யுமான கீதாஞ்சலியிடம், நேற்று சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில் வைத்து, எஸ்.பி., நாகஜோதி, டி.எஸ்.பி., ராஜன் ஆகியோர், 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற் கொண்டனர். இந்த விசாரணையில், டி.எஸ்.பி.,யிடம், 86க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு பதட்டம் இன்றி பதில் அளித்த, டி.எஸ்.பி., கீதாஞ்சலி, கோகுல்ராஜ் கொலையில், விஷ்ணுபிரியாவுக்கு, டார்ச்சர் கொடுத்த அதிகாரிகள் அடங்கிய பட்டியலையும் தெரிவித்ததாக சி.பி.சி.ஐ.டி., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, மாலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜியிடம், சி.பி.சி.ஐ.டி., போலீஸார், 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் கொலை தொடர்பான கேள்விகள், அவரிடம் கேட்கப்பட்டது. நேற்று ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை, திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் குணசீலன் உட்பட போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

முதல் கட்டத்தை தாண்ட வில்லையாம்: சி.பி.சி.ஐ.டி., போலீஸார் செப்.,22ல் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை துவக்கி விட்ட நிலையில், இன்னும் முதல் கட்ட விசாரணையையே தாண்ட வில்லையாம். விசாரணை என்ற பெயரில், இழுத்தடிப்பு செய்து வரும் நிலையில், யுவராஜ் போலீஸ்துறைக்கே சவால் விடுத்தும் வகையில், 'டிவி' பேட்டி அளித்து வருவது, சி.பி.சி.ஐ.டி.,யில் நேர்மையை விரும்பும் போலீஸார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில், இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X