ஆப்பிள் அதிசயம்!

Added : அக் 05, 2015 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஆப்பிள் அதிசயம்!

வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப உலகில், அலைபேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆரம்பகால கட்டத்தில் அலைபேசி, தொலைவில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளும் நிலையில் மட்டும் அமைந்திருந்தது. அலைபேசி, முதலில் ஒரு
தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, அலைபேசியில் உள்ள வசதிகளால், பல அறிவியல் சாதனங்கள் காணாமல் போய்விட்டன. அலைபேசியில் கணிப்பான், கடிகாரம், குறிப்பேடுகள், வானொலி, வரைபடங்கள், கடக்கவேண்டிய வழிகளை, திசைகளைக்காட்டும் கருவி, புகைப்படக்கருவி, வானிலையை அறிந்துகொள்ளும் வசதி, மின்புத்தகங்கள், தேடுபொறிகள், பேருந்து, புகைவண்டிச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி, தமிழ், ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி, குறுஞ்செய்தி, நிழற்படம், குறிப்புகள், குரல் அனுப்பும் வசதி, நேரடி வங்கி
சேவைகள், இணைய அகராதிகள், நேரடித் தொலைக்காட்சிகள், சமுதாய வலைத்தளங்கள், நேரடி வர்த்தகம், தகவல் சேமிக்கும் பெட்டி, நேரடி மொழி பெயர்க்கும் வசதி, இதர இணைய சேவைகள் என அனைத்து வசதிகளையும் ஒருங்கே அமையப்பெற்ற அதி
நவீன அலைபேசிகள் (Smart Phones) சந்தையில் வலம் வருகின்றன.தமிழ் செயலிகள்
ஸ்மார்ட் போன்களின் தரவரிசையில், முன்னணி இடத்தைப் பெற்றுள்ள ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ள, ஐபோன் என்னும் அலைபேசியில் பல்வேறு தமிழ் மொழிசார்ந்த செயலிகள் இடம் பெற்றுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கி, அதில் என்ன என்ன வசதிகள் எல்லாம் வழங்கலாமோ அத்தனையையும் உலகிற்கு வழங்கிய அற்புத மனிதர் ஸ்டீவ் ஜாப்சின் நினைவு நாள் நேற்று.ஆரம்ப காலகட்டங்களில், அலைபேசி சந்தையில் நோக்கியா, மோட்டரோலா, சோனி எரிக்சன், சாம்சங், எல்.ஜி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்தன. இந்நிறுவனங்கள் தயாரித்த அலைபேசிகள், ஒலி வழி தகவல் தொழில்நுட்ப வசதி கொண்டதாக மட்டுமே இருந்தன. இவை அலைபேசிகள் கண்டுபிடித்த காலகட்டங்களில் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன.
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில், 1955 ல் பிறந்த ஸ்டீவ் பவுல் ஜாப்ஸ் என்பவர் கணினி பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கி, 300க்கும் மேற்பட்ட மின்னணு தொழில்நுட்ப சாதனங்களைக் கண்டு
பிடித்து, அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார். இதன் பின்னர் சொந்த ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து, கணினி உலகில் பெரும்புரட்சியை ஏற்படுத்தினார். கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களை அறிமுகப்
படுத்தினார்.பேசும் வசதிமட்டும் கொண்ட அலைபேசிகளில் இருந்து, தொடுதிரை வசதி எனப் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன அலைபேசிகளை உருவாக்கி, உலக மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விட்டார் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன்களை 2007- முதல் தாயாரித்து வருகிறது. முதல் தலை முறை ஸ்மார்ட் போன், ஐ போன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம், மூன்றாம் (2008), நான்காம் (2010), ஐந்தாம் தலைமுறை(2012) அலைபேசிகளை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே சக்தி வாய்ந்த அமெரிக்க நாட்டு அரசின் மொத்தக் கையிருப்பு 73.76 பில்லியன் டாலர். ஆனால் உலகின் தலைசிறந்த தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் நிதி கையிருப்பாக உள்ளது. ஐபோன்களின் வருகைக்குப் பிறகே ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கின.
மக்கள் தேவை என்ன கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐபோன்- 5 (ஐந்தாம் தலைமுறை) ஒரு மாதத்தில் மட்டும் ஐம்பது லட்சம் விற்றுத்தீர்ந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்தாலும், உலகில் அனைவரும் அதனை விரும்பக் காரணம் அந்தந்த மொழிகளில் அதன் செயலிகள் (Apps) அமைந்திருப்பதே. இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்களை விற்பதற்கு நேரடி முகவர்கள் இல்லாத சூழ்நிலையில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிக அளவில் ஆப்பிள் ஐபோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கான காரணம் அதில் இடம் பெற்றுள்ள தமிழ்வழி செயலிகளே!
கனவு வளாகம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 அக்.5 ல் இறந்தார். மரணத்திற்கு முன், 2006ம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார். அந்த வளாக பணி முடிந்து, 2017ல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளாகத்தினை விண்வெளி ஓட வளாகம் என்றே அனைவரும் அழைக்கும் வகையில் இதன்தோற்றம் அமைந்துள்ளது. ஒரேகட்டடத்தில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் 13 ஆயிரம் பேர் பணியாற்றுவார்கள். சுற்றிவந்தால், இது ஒரு மைல் துாரத்திற்கும் சற்று அதிகமாகவே இருக்கும். வட்ட வடிவ வளாகமாக அமைக்கப்படும் இந்த கட்டடம் நான்கு மாடிகளால் ஆனது. இதன் இருபக்க சுவர்களும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணிபுரிபவர்கள், இரண்டு பக்கமும் உள்ள இயற்கைச் சூழலைக் கண்டவாறே பணியாற்ற முடியும். கண்ணாடிகளால் ஆன மாடிப்படிக்கட்டுகளை வரிசைப்படுத்தினால், ஆறு கிலோ மீட்டர் துாரத்திற்கு இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.பசுமை வளாகம்
பூமிக்கு அடியில் 14 ஆயிரம் கார்களை நிறுத்த ஏதுவாக வளாகம் அமைக்கப்படுகிறது. வளாகத்தைச் சுற்றி 7,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு இந்தவளாகம் பெரிய பூங்காவாக இருக்கும். மொத்தப் பரப்பளவில், 80 சதவீத இடம் 'பசுமைவளாகம்' ஆக அமையும். இந்த வளாகம் அமைய இன்றைய திட்ட மதிப்பீட்டின்படி 500 கோடி டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை சிலிகான் பள்ளத்தாக்கில் வசிக்கும் 20 ஆயிரம் ஆப்பிள் நிறுவனத்தினர் பயன்படுத்தலாம். வளாகத்தைச் சுற்றி சுற்றி, நடைபயிற்சி மற்றும் ஓடும் பயிற்சி மேற் கொள்ள பல மைல்கள் அளவிலான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்திற்குள்ளாக ஊழியர்கள் சென்று வருவதற்கெனத்தனியே 1,000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும். இது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், குபர்டீனோ நகரில் உள்ள தற்போதைய ஆப்பிள் நிறுவன வளாகம் அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் பேர் ஒருங்கே அமர்ந்து காணக்கூடிய அரங்கம்ஒன்று, பூமிக்கடியில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ஏறத்தாழ 7 லட்சம் சதுர அடி அளவில் சூரிய வெப்பத்திலிருந்து மின்சக்தியை உருவாக்கும் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டீவ் ஜாப்ஸ் பெற்றோர் புகை பிடிக்கும் பழக்கத்தால், நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்துள்ளநிலையில், அவரது கனவு வளாகத்திற்குள் எவரும் புகைபிடிக்கக் கூடாது என்ற விதிகட்டாயப்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புகழை அதன் சாதனங்கள், சரித்திரத்தில் பதித்தாலும், இந்த வளாகம் கூடுதலாகப் புகழை இணைக்கும் என்பதில் ஐயமில்லை. இதை பார்க்க ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்றாலும், அவரது கனவு நனவாகிறது.--முனைவர் சி.சிதம்பரம்உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,காந்திகிராம பல்கலைக்கழகம்,காந்திகிராமம். 98432 95951.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
06-அக்-201512:06:38 IST Report Abuse
TamilArasan ஸ்டீவ் பவுல் ஜாப்ஸ் ஆப்பில் நிறுவனம் தொடங்கும் முன்பாக சுமார் ஆறு மாதகாலம் இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்ந்துள்ளார் பல இந்து ஆலயங்களில் தங்கி வழிபட்டுள்ளார், தனது வாழ்க்கை நெறிமுறைகளில் இந்திய ஆன்மீக பாதை மிகபெரிய தாக்கத்தை எற்படுத்திஉள்ளது என்று கூறியுள்ளார்...
Rate this:
Cancel
babu - Nellai,இந்தியா
06-அக்-201511:33:05 IST Report Abuse
babu அய்யா பேராசிரயர் அவர்களே, இப்படியே அடுத்த நாட்டு மனிதர்களுக்கு ஜால்ரா தட்டுவதை முதலில் நிறுத்துங்கள். தமிழ் துறையில் நம் நாட்டில் எவ்வளவு பங்கு முன்னுரிமை பெற்றுள்ளது என்று கூற முடியுமா.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X