வரணும் 21 கோடி... அதுக்கு தரணும் நாலு கோடி!| Dinamalar

வரணும் 21 கோடி... அதுக்கு தரணும் நாலு கோடி!

Added : அக் 06, 2015
Share
அவசரமாக சென்னை செல்வதற்காக, ஆம்னி பஸ்சில் டிக்கெட் வாங்கிக்கொண்டு, காந்திபுரத்தில் காத்திருந்தாள் மித்ரா.''என்ன மித்து...இங்க வரச்சொல்லிட்ட. இன்னுமா, இங்க பஸ்சை நிறுத்துறாங்க?'' என்றபடி, 'என்ட்ரி' கொடுத்தாள் சித்ரா.''ஆமாக்கா! இப்போதைக்கு நம்மூர்ல ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புதுசாக் கட்டுறதாத் தெரியலை. அது வரைக்கும், நம்மூரு டிராபிக் போலீஸ் காட்டுல மழை தான்''
வரணும் 21 கோடி... அதுக்கு தரணும் நாலு கோடி!

அவசரமாக சென்னை செல்வதற்காக, ஆம்னி பஸ்சில் டிக்கெட் வாங்கிக்கொண்டு, காந்திபுரத்தில் காத்திருந்தாள் மித்ரா.
''என்ன மித்து...இங்க வரச்சொல்லிட்ட. இன்னுமா, இங்க பஸ்சை நிறுத்துறாங்க?'' என்றபடி, 'என்ட்ரி' கொடுத்தாள் சித்ரா.
''ஆமாக்கா! இப்போதைக்கு நம்மூர்ல ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புதுசாக் கட்டுறதாத் தெரியலை. அது வரைக்கும், நம்மூரு டிராபிக் போலீஸ் காட்டுல மழை தான்'' என்றாள் மித்ரா.
''இதுல போலீசுக்கு எப்பிடி மித்து, காசு வரும்?'' என்றாள் சித்ரா.
''காந்திபுரத்துல நிறுத்தி, ஆட்களை ஏத்தணும்னா, போலீஸ் ஒத்துழைப்பு இல்லாம நடக்குமா? அதுலயும் இப்போ சில பஸ்களுக்கு, டிராபிக் போலீசே ஏஜன்டாகி, ஆள் பிடிச்சுக் கொடுக்குறாங்க'' என்றாள் மித்ரா.
''நம்மூரு போலீஸ்காரங்க, அதை மட்டுமா பண்றாங்க. முத்தண்ணன் குளக்கரை பக்கத்துல, பழைய கதவு, ஜன்னல் விக்கிற ஆக்கிரமிப்புக் கடைக நிறைய இருக்குமே. அங்க வியாபாரம் பெருசா நடக்கிறதில்லை. ஆனா, சில கடைகள்ல கஞ்சா, ஊசி வியாபாரம் நல்லா நடக்குதாம். காலேஜ், ஸ்கூல் பசங்களுக்கு, போதை ஊசி போட கத்துக் கொடுக்குறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...என்ன சொல்ற...'' என்று அதிர்ந்தாள் மித்ரா.
''உண்மைதான் மித்து. இது, அங்க இருக்கிற போலீஸ்காரங்களுக்கும் தெரியும். ஆனா, கண்டுக்கிறதில்லை. அவுங்க, பகல்லயே, இந்த கடைகள்ல உக்கார்ந்து, சரக்குப் போடுறாங்க. எல்லா 'சப்ளை'யும், அந்த வியாபாரிங்க தான்'' என்றாள் சித்ரா.
''அந்த வியாபாரிகளுக்கு 'பொலிடிகல் பேகிரவுண்டு' ஏதாவது இருக்குமே?'' என்றாள் மித்ரா.
''இந்து அமைப்புல இருந்து, வெளிய துரத்தப்பட்ட ஒருத்தர் தான், இந்த வியாபாரத்தை நடத்துறாராம். அவருக்கு, 'லோக்கல்' ஆளும்கட்சி ஆளுங்க சில பேரு, 'சப்போர்ட்' பண்றதா சொல்றாங்க'' என்றாள் சித்ரா.
''ஆளும்கட்சி மேட்டர் கேள்விப்பட்டியா...நம்ம மாண்புமிகு டாக்டரை, மாவட்டத்துல இருந்து கழட்டுறது உறுதியாம். நாம ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பேசுனது மாதிரியே, பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மூனெழுத்து 'இன்ஷியல்' இருக்கிறவர் தான், புது 'மாவட்டம்' ஆகப் போறாராம். சென்னையில, 'அம்மா'வைப் பாக்க, ஒரு வாரமா 'வெயிட்' பண்றாராம்''
''ஏற்கனவே பாத்துட்டாரு, சீக்கிரமே பேரை அறிவிக்கப்போறதா கேள்விப்பட்டேன்''
''அது உறுதியாத் தெரியலை. ஆளை மாத்தப்போறது தெரிஞ்சு, கடைசி நேரத்துல, 'காம்ப்ரமைஸ்' ஆகிக்கலாம்னு, கிரைண்டர் கம்பெனி ஓனரை வச்சு, 'மாண்புமிகு டாக்டர்' பேசிப் பார்த்ததுல, ஒண்ணும் கதை ஆகலையாம்'' என்றாள் மித்ரா.
''வர்ற எலக்ஷன்ல வடக்கு தொகுதியை குறி வச்சு, கோயம்புத்தூரு கொமாரு காய் நகர்த்திட்டு இருக்காருல்ல...அதுக்கும் வாய்ப்பில்லையாமே. மாணவரணி பொறுப்புக்கு வந்திருக்கிற கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர் தான் வடக்குல 'சீட்' வாங்கப்போறாராம்'' என்றாள் சித்ரா.
''நம்மூர்ல நேர்மைக்கு இடமேயில்லக்கா. காசே வாங்காத ஆளா இருந்தா, கார்ப்பரேஷன்ல காலம் ஓட்றது கஷ்டம். நேர்மையா வேலை பார்த்த சென்ட்ரல் ஏ.சி.,யை காரணமேயில்லாம தூக்கிட்டாங்க. 95வது வார்டு அம்மன் நகர்ல, 50 இல்லீகல் வாட்டர் கனெக்ஷனைப் பிடிச்ச ஏ.இ.,சக்திவேலை, வெள்ளக்கிணறுல குப்பை பிரிக்கிற இடத்துக்கு மாத்தி விட்டாங்க'' என்றாள் மித்ரா.
''இதைக்கேளு...ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,க்கு போட்ட ஒப்பந்தப்படி, 'பப்ளிக் டேப்'ல குடி தண்ணி கனெக்ஷன் தரக்கூடாது. ஆனா, 86, 93 வார்டுகள்ல ரெண்டு இடத்துல, இல்லீகலா போட்டதை, டேப் இன்ஸ்பெக்டர் கண்டு பிடிச்சு, 'கட்' பண்ணிருக்காரு. அவரை, ஆளும்கட்சிக்காரங்க ரெண்டு பேரு கூப்பிட்டு மெரட்டிருக்காங்க''
''மறுபடியும் அவரே கனெக்ஷன் கொடுத்துட்டாரா?''
''இல்லை. அவர் கொடுக்க முடியாதுன்னு சொன்னதால, ஆளும்கட்சிக்காரங்களே, ஆளை வச்சு திரும்பவும் கனெக்ஷன் கொடுத்துட்டாங்க'' என்றாள் சித்ரா.
''யாரும், எதையும் கேக்க முடியாதுங்கிற மாதிரி ஆயிருச்சுக்கா'' என்று அலுத்துக் கொண்டாள் மித்ரா.
''இல்லையே மித்து... 21 கோடி ரூபா கொடுக்க, நாலு கோடி ரூபா கேக்குறாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...நீ சொல்றது குப்பை மேட்டர் தான?'' என்று விரல் நீட்டினாள் மித்ரா.
''கற்பூரம்டி நீ...குப்பை அள்ளுற கம்பெனிக்கு, 21 கோடி ரூபா கொடுக்காம, நிறுத்தி வச்சாங்களே. அதை கொடுக்குறதுக்கு நாலு கோடி ரூபா கேட்டு, பேரம் நடந்திருக்கு. இப்போ, அந்த அமவுன்ட்ல, டிரான்ஸ்போர்ட் காசு 7.8 கோடியை கொடுக்கச் சொல்லி, கோர்ட் உத்தரவு போட்ருச்சு. இனிமே என்னாகும்னு தெரியலை''
''அது சரி...ஸ்மார்ட் சிட்டி கருத்துக் கேட்பு கூட்டத்துல, கருத்துச் சொன்னவுங்களை விட, வெறுத்துச் சொன்னவுங்க தான் அதிகமாமே''
''ஆமா மித்து...ஒரே பஸ் ஸ்டாண்ட், லாரிப்பேட்டை, வெஸ்டர்ன் பை-பாஸ், மல்டி லெவல் பார்க்கிங், உக்கடம் மேம்பாலம்னு எல்லாமே காகித அறிவிப்பாவே இருக்கு. ஒரு சுரங்கப்பாதை கூட ஊர்ல இல்லை. நாலரை வருஷத்துல, ஒரு லிங்க் ரோடு, ஸ்கீம் ரோடு கூட போடலை. இதெல்லாம் செஞ்சாலே, கோயம்புத்தூரு ஸ்மார்ட் சிட்டியாயிரும்னு பேசிருக்காங்க''
''கரெக்ட்க்கா... வெறும் 15 சதுர கி.மீ., பரப்பும், ரெண்டரை லட்சம் மக்களும் இருக்கிற திண்டுக்கல் கார்ப்பரேஷனுக்கும் 500 கோடி ரூபா, 257 சதுர கி.மீ., பரப்பும், 20 லட்சம் மக்களும் இருக்கிற கோயம்புத்தூர் கார்ப்பரேஷனுக்கும் 500 கோடி ரூபா ஒதுக்குறது, எந்த விதத்துல நியாயம்னு மக்கள் கேக்குறாங்க''
''யானைப்பசிக்கு சோளப்பொரி தான்'' என்றாள் சித்ரா.
''கருத்துக் கேட்பு கூட்டத்துல, இப்பிடியெல்லாம் மக்கள் கேட்ட கேள்விக்கு கலெக்டராலயே பதில் சொல்ல முடியலை. அதனால, மக்களோட புகாரைப் பதிவு பண்றதுக்கு, '24 இன்ட் 7 க்ரீவன்ஸ் செல்' அமைக்கலாம்னு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு கலெக்டரே பரிந்துரை பண்ணிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''வேறென்ன பண்றது...மெட்ரோ ரயிலுக்குத் தகுதியான நகரங்கள்னு, 2011ல சென்ட்ரல் கவர்மென்ட் அறிவிச்ச பட்டியல்ல, கோயம்புத்தூரு 13வது இடத்துலயும், கொச்சி 17வது இடத்துலயும் இருந்துச்சு. இப்போ, கொச்சியில மெட்ரோ ரயில் வேலையே முடியப்போகுது. இங்க....என்ன நடந்திருக்கு. முழுக்க முழுக்க இதுக்குக் காரணம், ஸ்டேட் கவர்மென்ட் தான'' என்று கொந்தளித்தாள் சித்ரா.
''வர்ற ஒன்பதாம் தேதி, கோயம்புத்தூர்ல ஸ்டாலின் இதையெல்லாம் பேசப்போறாராமே. அதுக்கு, 'ஓஎம்ஜி' டீம்ல, 'நோட்ஸ்' எடுக்குறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''அதென்ன ஓஎம்ஜி...'ஓ மை காட்' டீமா?'' என்று சிரித்தாள் சித்ரா.
''இல்லக்கா. ஸ்டாலினை 'புரமோட்' பண்றதுக்காக 'ஒன் மைண்டடு ஜெனரேஷன்'னு ஒரு 'டீம்' வேலை பார்க்குது. அவுங்கதான், ஏடிஎம்கே கவர்மென்ட்ல அறிவிச்சது எது, செஞ்சது எதுன்னு பட்டியல் எடுக்குறாங்க'' என்றாள் மித்ரா.
''என்னத்தைப் பேசி என்ன பிரயோஜனம். இங்க இருக்கிற மாவட்டச் செயலாளர்கள் சுத்த 'வேஸ்ட்'ன்னு உடன் பிறப்புகளே உறுமுறாங்களே'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா! வசூல் பண்றதைத் தவிர, இவுங்க வேறு எதுவும் பண்றதில்லை. இவுங்களை மாத்தணும்கிறதுக்காக, கருப்புக்கொடி காட்டப்போறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''வசூல்னா, ஆர்.டி.ஓ., ஆபீஸ் ஞாபகம் வரும்ல. சென்ட்ரல் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல, 'டெஸ்ட் டிராக்' ஒண்ணு கட்டி, முதல்வரோட காணொலிக்காட்சி இல்லாமலே, இவுங்களே திறந்துக்கிட்டாங்க. அதுல வண்டி ஓட்ட முடியாம, பல பேரு விழுந்துர்றாங்க. லைசென்ஸ் கிடைக்கிறதில்லை. அதனால, வேற அட்ரஸ்க்கு 'அபிடவிட்' வாங்கி, நார்த், சவுத் ஆபீஸ்கள்ல போய் லைசென்ஸ் வாங்கிர்றாங்க''
''அப்பிடின்னா, இவுங்க வருமானம் குறைஞ்சிருமே''
''கரெக்ட்...இது தெரிஞ்சு தான், அந்த 'டிராக்'கை இவுங்களே இழுத்து மூடிட்டாங்க. இப்போ, இங்க வாங்க. ஈஸியா லைசென்ஸ் தர்றோம்னு புரோக்கர்களை வச்சு, கூவிக்கூவி கூப்பிடுறாங்க'' என்றாள் சித்ரா.
''ஆனா, கோவைப்புதூர்ல இருக்கிற ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல புரோக்கர்களை எல்லாம் துரத்தி விட்டு, நேரடியா லஞ்சம் வாங்குறாங்களாமே'' என்றாள் மித்ரா.
''ஹவுசிங் போர்டுல லஞ்சம் வாங்குறப்போ, ஒரு லேடி ஸ்டாஃபை, விஜிலென்ஸ் 'ட்ராப்' பண்ணிருக்காங்க. ஆனா, எல்லாரும் எதிர்பார்த்த ரெண்டு லேடீஸ் தப்பிச்சிட்டாங்க. அவுங்க ரெண்டு பேரையும் மாத்துனா தான், ஹவுசிங் போர்டே உருப்படும்கிறாங்க'' என்று மித்ரா சொல்லும்போதே, அவள் ஏற வேண்டிய ஆம்னி பஸ் வந்தது. டாட்டா காட்டி, வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X