""எவ்வளவு வருமானம் வந்தாலும், ஆசை யாரை விட்டது,'' என்றபடி, "டிவி'யை "ஆன்' செய்தாள் சித்ரா.
""ஏன், என்னாச்சு? நம்மூர்ல வருமானத்துக்கு எப்போதும் பஞ்சமில்லையே,'' என, மித்ரா கேட்க, ""புரட்டாசி சனிக்கிழமை அன்னைக்கு, வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுது. பொது தரிசன வரிசை ஒரு கி.மீ.,க்கு நீளுது. ஆபீசுக்கு "லேட்' ஆகிடும்னு, சிறப்பு தரிசனத்துக்கு போனேன். இரண்டு பேருக்கு, 50 ரூபாய்னு கட்டணம் வசூலிச்சாங்க. ஆனா, ஒருத்தர் போனா<லும், 50 ரூபாய்க்குதான் "டிக்கெட்' வாங்கிட்டு போக வேண்டியிருக்கு. கோவில் பெயரில் வங்கியில் கோடிக்கணக்கில் "பேலன்ஸ்' இருந்தாலும், பக்தர்களிடம் பறிக்கிறதுல அதிகாரிகள் தரப்பு குறியா இருக்கு. வசூலிக்கிற பணத்தை, முறையா கோவில் கணக்குல சேர்த்தா நல்லா இருக்கும்,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம் சரி, உண்டியல் காணிக்கையை எண்ணியபோது, பணக்கட்டு காணாமப் போச்சுன்னு, சொன்னீங்களே? என்னாச்சு?'' என, துருவினாள் மித்ரா.
""தீவிரமா விசாரிச்சு, கோவில் ஊழியர்கள் ஐந்து பேரை "சஸ்பெண்ட்' செஞ்சிட்டதா பேசிக்கிறாங்க. ஆனா, நிர்வாக தரப்புல, வாய் திறக்க மறுக்குறாங்க. கோவில் அதிகாரிகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும் இடையே முட்டல், மோதல், உரசல் தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இந்த பிரச்னையில, புரட்டாசி சனிக்கிழமை அன்னைக்கு பக்தர்களுக்கு பிரசாதம் கூட கொடுக்கலை. கேட்டதுக்கு, மடப்பள்ளியில் சுவாமிக்கு மட்டுமே பிரசாதம் தயாரிக்கணும். பக்தர்களுக்கு பிரசாதம் வெளியே தயாரிக்கணும்னு சொல்லி, "விளையாட்டு' காட்டிட்டாங்க. வழக்கமா கோவிலுக்கு வந்து விரதத்தை முடிக்கும் பக்தர்கள் ரொம்பவும் மனசு வருத்தப்பட்டாங்க. ஆண்டவன் சன்னதியில் ஏகப்பட்ட "பாலிடிக்ஸ்'. சர்ச்சைக்குரிய அதிகாரிகளை எப்படியும் மாத்திடுவாங்கன்னு சொல்றாங்க; பொறுத்திருந்து பார்ப்போம்,'' என, "சஸ்பென்ஸ்' வைத்தாள் சித்ரா.
""அதெல்லாம் சரி; ஈமு கோழி பிசினஸ் செஞ்சு, கோடிக்கணக்குல பணத்தை சுருட்டுனாங்களே. அந்த "கேஸ்' என்னாச்சு?,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""வழக்கு விசாரணையில் இருக்கு. முதல்கட்டமா, அசையும் சொத்துக்களை ஏலம் விடுறதுக்கு கோர்ட் உத்தரவிட்டிருக்கு. கிட்டத்தட்ட ரெண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பார்வையிடுறதுக்கு போன வருவாய்த் துறைக்காரங்க, வாயடைச்சு போயிட்டாங்க,'' என சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ""ஏன்? என்னாச்சு,'' என, பதற்றமடைந்தாள் மித்ரா.
""அந்த கட்டடத்துல, காலி டப்பாக்கள்தான் இருந்துச்சு; போலீசாரும், அதிகாரிகளும் அதிர்ச்சியாகிட்டாங்க. இந்த வழக்கை கோர்ட் உன்னிப்பா கவனிச்சிக்கிட்டு வருது; ஆறு பேர் சிக்கியிருக்காங்க; அதுல ஒருத்தர், போலீஸ் ஏட்டு. பொருட்களை களவாடிட்டு போறதுக்கு உதவியா இருந்திருக்காரு; 15 "லகரம்' பேரம் பேசியிருக்காரு. எல்லாத்தையும் கைது செஞ்சு "உள்ளே' தள்ளிடலாமா? அல்லது பொருட்களை மீட்கறது வரைக்கும் "விசாரணை'ங்கிற பெயருல இழுக்கலாமான்னு, ரகசியமான இடத்துல வச்சிருக்காங்க. இந்த விஷயத்துல, போலீசுக்கு ஒரு "குட்டு' வச்சாத்தான், விசாரணை சூடுபிடிக்கும்னு பேசிக்கிறாங்க. இல்லேன்னா, வாங்கறதை வாங்கிட்டு அமுக்கிடுவாங்கன்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, ""தடபுடலா விருந்து நடந்துச்சாமே,'' என, கேள்வி எழுப்பினாள்.
""ஆமாக்கா, தி.மு.க.,வுல இருக்கிற நம்மூர் நிர்வாகி பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடுனாரு. "விடியட்டும்; முடியட்டும்' என்ற தலைப்பில், ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துறதுக்கு, ஊருக்குள்ள ஏகப்பட்ட "கலெக்ஷன்' பண்ணியிருந்தாங்க. அவரும் ஏகத்துக்கும் பாராட்டிட்டு போயிட்டாரு. அதனால ரொம்ப சந்தோஷத்துல இருந்த அவர், "ஸ்டார்' ஓட்டலில் விருந்து வச்சு அமர்க்களப்படுத்தியிருந்தாரு. 45 ஆடு வெட்டியிருக்காங்க; 500 கிலோ சிக்கன், 2,000 முட்டை, பிரியாணி, சிக்கன் கிரேவி, சில்லி சிக்கன், அப்பளம், வடை, பாயாசமுன்னு அசத்தியிருக்காங்க. உற்சாக பானமும் சப்ளை செஞ்சிருக்காங்க. புரட்டாசி மாசமா இருந்ததால, கொஞ்சம் பேரு பெருமூச்சு விட்டுக்கிட்டே சாம்பார், ரசம், தயிரோடு நிறுத்திக்கிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE