உங்களுக்கும் வேண்டும் ஒரு குடும்ப டாக்டர்

Added : அக் 07, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 உங்களுக்கும் வேண்டும் ஒரு குடும்ப  டாக்டர்

முன்பு கிராமத்தில் ஒரு வைத்தியர் இருப்பார். அவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பார். ஊரில் எல்லோரும் உடல் உபாதைகளுக்கு அவரிடம் போவார்கள். நாடியைப் பிடித்துப் பார்த்து வைத்தியம் பார்ப்பது மட்டுமின்றி, மனதை படித்துப் பார்த்தும் வைத்தியம் செய்வார். தன்னால் வைத்தியம் செய்ய இயலாத நோயாளிகளை டவுனில் இருக்கும் பெரிய டாக்டரிடம் அனுப்பி விடுவார். சில வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தடுத்து விடுவார். யாருக்கேனும் தொற்று நோய்கள் ஏற்பட்டால், அனைவருக்கும் நோய் பரவாமல் இருக்க தடுப்பு முறைகளையும், பத்தியத்தையும் சொல்வார். அந்த ஊரிலுள்ள குடும்பத்தார் அனைவருக்கும் அந்த வைத்தியர் கூறுவதுதான் தேவவாக்கு.ஆனால், தற்போதைய நிலைமையோ தலைகீழாகிவிட்டது. மக்கள் தாங்களாகவே தங்களது நோயிற்கு சிறப்பு மருத்துவர்களை முடிவு செய்து, தேடிப் போக ஆரம்பித்துவிட்டனர். இணையதளத்தின் மூலமாக தங்களுக்கு என்ன நோய் என்பதை கண்டறிந்து, அது சார்ந்த மருத்துவரிடம் செல்லுமளவிற்கு மருத்துவ அறிவை வளர்த்துக் கொண்டுவிட்டனர். ஒரு நோயிற்கு பல்வேறு மருத்துவர்களின் கூட்டு சிகிச்சை தேவைப்படும் பொழுது, தனக்கு தேவையான சிறப்பு மருத்துவரை எப்படி ஒரு நோயாளியால் அடையாளம் காணமுடியும்.
நோயின் தோற்றம், துணை நோய்களின் ஆதிக்கம். நோய் பரவல், தொற்று நோய் என ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட நோய்களை மருத்துவர் அறிவுரையின்றி எப்படி நோயாளியால் புரிந்து கொள்ள முடியும். இந்த புரிதல் இல்லாததால் தான் சாதாரண நோய் என்றாலும் கூட, பல்வேறு டாக்டர்களால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் சூழல் நிலவுகிறது. ௩௦ ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த 'குடும்ப டாக்டர்' முறை இப்போது காணாமல் போனதுதான் சிக்கல்களுக்கெல்லாம் காரணம்.
ஆரோக்கியம் காப்பவர் யார் இந்த குடும்ப டாக்டர்? உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருப்பவர். திறமையானவர். சிக்கனமான முறையில் சிகிச்சையளிக்க கூடியவர். உங்களுக்கு சிறப்பு சிகிச்சை தேவையெனில் வேறு மருத்துவரிடம் பரிந்துரை செய்ய தயங்காதவர். உங்கள் குடும்ப உறுப்பினர்களான குழந்தை முதல் வயதான தாத்தா, பாட்டி வரை அனைவருக்கும் சிகிச்சையளிக்கும் ஆற்றல் பெற்றவர். நோயாளிக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் உறவுப் பாலமாக இருப்பவர். மொத்தத்தில் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கும் தீர்க்கத்தரிசியாக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பவரே குடும்ப டாக்டர்.
உங்களுக்கு மனநோயா, உடல் நோயா அல்லது உணர்ச்சிவசப்பட்டதால் ஏற்பட்ட உடல் பாதிப்பா என்பதை உங்கள் குடும்ப மருத்துவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அவர்தான் உங்களை சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டு வருபவர். குடும்ப டாக்டரால் மட்டுமே நோயிற்கான புதிய மருத்துவ முறைகளையும், அதனை வழங்கும் மருத்துவரையும் அடையாளம் காணமுடியும். குடும்பத்தில் அனைவருக்கும் நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணவும் குடும்ப டாக்டரால் மட்டுமே ஆலோசனை வழங்க முடியும்.
உங்களுக்கு தற்போது தேவை அலோபதியா, சித்தாவா, ஆயுர்வேதாவா, ஓமியோபதியா, நேச்சுரோபதியா, யோகாவா, அக்குபஞ்சரா என்பதை உங்கள் குடும்ப மருத்துவர்தான் முடிவு செய்ய முடியும். நோயின் தன்மைக்கேற்றவாறு உங்களை வழிநடத்துவதில் வல்லமை படைத்தவர் குடும்ப டாக்டர் மட்டும்தான். அவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், நோயினை முழுமையாக தீர்க்கும் முதல் மருந்து.
எப்படி தேர்வு செய்வது குடும்ப மருத்துவரை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?எளிமையாக உரையாடக்கூடியவராக இருக்க வேண்டும். எல்லா கேள்விகளுக்கும் கோபப்படாமல் பதிலளிக்க வேண்டும்.
நோயாளி புரிந்துகொள்ளும்படியாக நோயின் தன்மை, அதற்காக வழங்கப்படும் மருந்துகள், அதனை உட்கொள்ளும் முறை ஆகியவற்றை விளக்குபவராக இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்ற சிகிச்சை கால அளவை மருத்துவர் தெரிவிக்க வேண்டும். அதனை தெரிந்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு நோயாளிக்கும் உண்டு. நோயாளியின் பொருளாதார வசதிக்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கும்
மனதுடனும், தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோதனைகளை சலுகை கட்டணத்தில் வழங்கும் மனமுடையவராகவும் இருக்க வேண்டும்.
சிகிச்சைக்கான செலவுத் திட்டத்தை முன்பே விளக்கிவிட வேண்டும். சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை என்றால் மிகவும் பயமாக இருக்கும். சில நேரங்களில் அவசியமான அறுவை சிகிச்சையை கூட இதனால் செய்யாமல் இருப்பார். அவரை சமாதானப்படுத்த வேண்டும். ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்து போகும் போது, மாடிப்படியில் அல்லது லிப்ட் வாசலில் '' மேலே போகும் வழி'' என்ற போர்டு இருக்கும். சும்மாவே பயந்து போய் இருக்கும் நோயாளி, இதனைப் பார்த்ததும் இன்னும் பயந்துப் போய்விடுவார். இது போன்ற சூழ்நிலையில் தேவையற்ற பயத்தை நீக்கி, ஆறுதல் சொல்லி, அறுவை சிகிச்சை முடியும் வரை கூடவே இருக்க வேண்டும் குடும்ப டாக்டர்.
கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தில் கணவன்- மனைவிக்கு இடையே பல பிரச்னைகள் இருக்கும். அதை குடும்ப டாக்டர் நன்கு புரிந்து வைத்திருப்பார். ஒரு குடும்ப டாக்டர், நோயாளியினுடைய மனைவியை நோக்கி '' உங்கள் கணவருக்கு பரிபூரண ஓய்வும், நிம்மதியும் உடனடியாக தேவை. ஆகையால் இந்த துாக்க மாத்திரையை தருகிறேன்'' என்று ஒரு சீட்டு எழுதிக் கொடுத்தார். மனைவி டாக்டரைப் பார்த்து '' இந்த மாத்திரையை அவருக்கு எப்பொழுது கொடுக்க வேண்டும்'' என்று கேட்க, டாக்டரோ சிரித்துக்கொண்டே '' இந்த துாக்க மாத்திரை அவருக்கல்ல. உங்களுக்குத்தான்'' என்றார். சில மனைவிகளின் தொல்லையால் கணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை குடும்ப டாக்டரால் சரியாக கண்டுபிடிக்க முடியும்.
நவ்வாக்கொட்டை, பலாக்கொட்டை ஆகியவற்றை முழுங்கிவிட்டால் வயிற்றில் மரம் முளைக்குமா? கிரிக்கெட் பந்து அடித்து கிட்னி வீங்கிவிடுமா? என்பது போன்ற உங்கள் குழந்தைகளின் அடிப்படை சந்தேகங்கள் முதல் எந்த நோயிற்கு எந்த மருத்துவச் சிகிச்சை, எந்த மருத்துவமனையில் சிறந்தது என்ற உங்களின் பல்வேறு கேள்விகளை குடும்ப டாக்டரிடம் மட்டும் தான் உரிமையோடு கேட்க முடியும். சிரித்துக் கொண்டே சரியான பதிலையும், அதற்கான விளக்கத்தையும் அவரால் மட்டும்தான் சொல்ல முடியும். குடும்பத்தினர் அனைவருக்கும் உறவுப் பாலமாக, நட்பாக திகழ்வதுடன், உங்கள் வீட்டிலுள்ள திருமண வயது ஆண், பெண்களுக்கு திருமண முன் ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்குபவராகவும் இருப்பார் குடும்ப டாக்டர்.
ஒவ்வொருவரும், குடும்ப டாக்டர் முறையை பின்பற்ற வேண்டும். தாங்களாகவே பல்வேறு சோதனைகளையும், சிகிச்சை முறைகளையும் மேற்கொள்வது நல்லதல்ல. ஆரோக்கியம் காக்க இன்றே உங்கள் குடும்ப டாக்டரை கண்டுபிடியுங்கள்.
-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்.சித்த மருத்துவர், மதுரை 98421 67567

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
08-அக்-201519:43:32 IST Report Abuse
K.Palanivelu குடும்ப டாக்டரிடம் அக்காலத்தில் சென்றால் கூடியவரை நாக்கை நீட்டசொல்லியும், கை விரல்களில் உள்ள நகங்களையும், கண்களை பார்த்தும் பரிசோதனை மூலம் (நோய்க்கான அறிகுறிகள்) கூடுமானவரை பரிசோதனைகூடங்களுக்கு அனுப்பி செலவு வைக்காமல் வைத்தியம் செய்வார். மேலும் நோயாளியை வீட்டில் வந்து பார்ப்பார்.அதெல்லாம் இப்போது மறைந்து பணம் அதிகமாக செலவழித்து வைத்தியம்பார்த்தாலும் குனமாவதில்லை.அக்காலத்தில் சித்த,ஆயுர்வேதம்,ஆங்கில மருத்துவம் கலந்து மூன்றாண்டு படிக்கும் வைத்திய முறை இருந்தது.அதில் தேர்ச்சி பெற்று எல்.எம்.பி, மற்றும் எல்.ஐ.எம் பட்டம் பெற்ற மருத்துவர்கள் குடும்ப வைத்தியர்களாக சிறந்த பணியாற்றினார்கள்.என்றைக்கு அந்த படிப்புமுறை அரசால் நீக்கப்பட்டதோ அப்போதிலிருந்து குடும்பவைத்தியர்கள் மறைந்து விட்டனர்.அந்தமூன்றாண்டுபடிப்பு முறையை அரசு மறுபடியும் அறிமுகப்படுத்தினால் குடும்பவைத்தியர் முறைசிறக்கும். அதிக செலவுசெய்து 5 ஆண்டு படிக்கும் எம்.பி.பி.எஸ். படிக்கும் வைத்தியர்களிடமிருந்து முந்திய அந்த்நியோனத்தை எதிர்பார்க்க இயலாது.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Maldives - maalththeevugal ,மாலத்தீவு
08-அக்-201509:27:43 IST Report Abuse
Ganesh Maldives நல்ல தகவல்...தினமலருக்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-அக்-201509:11:59 IST Report Abuse
Srinivasan Kannaiya குடும்ப டாக்டர் ஆக இருக்க யாரும் விரும்புவதில்லை...ஒரு குடும்பத்தில் பணம் காய்ச்சி தொங்காதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X