நாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம்! நாளை மு.வரதராசனார் நினைவு நாள்| Dinamalar

நாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம்! நாளை மு.வரதராசனார் நினைவு நாள்

Added : அக் 08, 2015
 நாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம்! நாளை மு.வரதராசனார் நினைவு நாள்

இருபதாம் நுாற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர்களுள் குறிப்பிடப்பட வேண்டியவர் மு.வரதராசனார். தமிழ் நல்லுலகம் 'மு.வ.' என்று அழைத்து மகிழ்ந்தது. 'மு.வ.' என்ற இரண்டு எழுத்துக்களின் விரிவு 'முன்னேற்ற வரலாறு' என்பதாகும்.
அன்றைய வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த வேலம் என்ற சிறுகிராமத்தில் பிறந்த மு.வ., பிற்காலத்தில் அமெரிக்கவின் ஊஸ்டர் கல்லுாரி 'டி.லிட்.,' என்னும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெறும் அளவிற்கு வாழ்வில் உயர்ந்தார்; தாசில்தார் அலுவலகக் கணக்கராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பேராசிரியர், பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் எனப் படிப்படியாக உயர்ந்து, நிறைவாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு என்ற சிகரத்தைத் தொட்டார்.
அறுபத்து இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மு.வ., தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 85-க்கு மேற்பட்ட அரிய நுால்கலைப் படைத்துத் தந்தார்; திறனாய்வுத் துறையில் மட்டுமன்றி, படைப்பிலக்கியத் துறையிலும் அவர் முத்திரை பதித்தார். சிறுவர் இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, மொழியியல், கடித இலக்கியம், பயண இலக்கியம், இலக்கியத் திறனாய்வு என பல்வேறு துறைகளைச் சார்ந்த நுால்களை எழுதியவர். 'எழுத்துலகில் இவர் தொடாத துறையும் இல்லை; தொட்டுத் துலங்காத துறையும் இல்லை' என்னும் அளவிற்கு மு.வ.வின் படைப்பாற்றல் வெளிப்பட்டது.மாணவர்களை மதித்த பேராசிரியர் : பொதுவாக, கல்வியுலகில் மாணவர்களால் மதிக்கப்பெறும் பேராசிரியர்கள் உண்டு; மு.வ. மாணவர்களை மதித்த பேராசிரியர். 'அல்லி', 'கரித்துண்டு', 'நெஞ்சில் ஒரு முள்', 'மண்குடிசை' என்னும் புதினங்கள் நான்கினுக்கு தம்மிடம் பயின்ற மாணவர்களான ம.ரா.போ.குருசாமி, கா.அ.ச., ரகுநாயகம்,
சி.வேங்கடசாமி, ரா.சீனிவாசன் ஆகியோரிடம் அணிந்துரை பெற்றவர்.
“மு.வரதராசனார் வாழ்க்கை, வெற்றி வாழ்க்கை, பலருக்கும் எடுத்துக்காட்டான உயர்ந்த வாழ்க்கை, இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் சீரிய வாழ்க்கை” எனக் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு கூறுவார்.
இன்றைய இளைய தலைமுறை இளைத்த தலைமுறையாக இல்லாமல், பாரதியார் கனவு கண்ட ஒளி படைத்த இளைய பாரதமாக உலா வருவதற்குப் பேராசிரியர் மு.வ., பரிந்துரைக்கும் மந்திர மொழி இது:
“ஒரு நெறியையோ, ஒரு நுாலையோ, சான்றோர் ஒருவரையோ பற்றிக்கொண்டு வாழ்கின்றவர்களே மனம் தடுமாறாமல் விளங்குகிறார்கள்; மற்றவர்களின் மனம் அத்தகைய பற்றுக்கோடு இல்லாமையால் தடுமாறுகிறது”.போற்றிய நுால்: மு.வ.வின் வாழ்க்கையை உற்றுநோக்கினால், அவர் பின்பற்றிய நெறி- வேண்டாமை என்பதும், அவர் போற்றிய நுால் - திருக்குறள் என்பதும், அவர் வழிபட்ட சான்றோர் - திரு.வி.க., என்பதும் விளங்கும். அவரைப் பொறுத்த வரையில் திருக்குறள் வழிபாட்டு நுால் அன்று; என்றென்றும் வாழ்வுக்கு வழிகாட்டும் நுால். 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்' என்பது அவரது முத்திரை நுால். 'திருக்குறள் தெளிவுரை' அவருக்கு நிலைத்த புகழையும் நீடித்த பெருமையையும் பெற்றுத் தந்தது. அதன் 210-ஆவது பதிப்பு அண்மையில் வெளிவந்தது.
மு.வ., வீட்டில் ஒரு மாதுளை மரம் இருந்தது. நடமாட்டத்துக்கு இடைஞ்சலாக அது இருந்ததால், அதனை வெட்டி எறிந்து விட வேண்டும் என்று வீட்டில் எல்லாரும் சொன்னார்கள். மு.வ. விரும்பவில்லை. ஏன் தெரியுமா?
எப்போதோ மு.வ.,வின் வீட்டுக்கு வந்த தமிழ் முனிவர் திரு.வி.க. துப்பிய விதையிலிருந்து முளைத்ததாம் அந்த மரம். நமக்கெல்லாம் அது வெறும் பயிர். மு.வ.வுக்கு? அது, வெறும் மாதுளை மரம் இல்லை. தமிழ் முனிவரின் எச்சில் தந்த பிரசாதம்!
மனத்தை ஆள்வதற்கான வழி: அன்றாடம் வாழ்வில் நேரும் அனுபவங்களையும், உள்ளத்தில் எழும் உணர்வுகளையும், நாட்குறிப்பில் நாள்தோறும் எழுதி வைத்தல் என்பது நல்ல வழக்கம். இது நாளடைவில் ஒருவன் தலைவனாகி மனத்தை ஆள்வதற்கான சிறந்த வழி என்பது அவர் கருத்து.
“நாள்தோறும் உன் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பில் எழுதி வை. நீ தலைவனாகி மனத்தை ஆள்வதற்கு அது ஒரு வழி. வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால், சிறந்த பெரியார் ஒருவரின் உருவத்தை நினைத்து, அவருடைய துாய பண்புகளை எண்ணி, உன் குறைகளையும் எண்ணித் திருந்து” என 'அல்லி' என்னும் நாவலில் இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தியுள்ளார் மு.வ.
அறிவிலே தெளிவும் நெஞ்சிலே உறுதியும் கொண்ட இளைய தலைமுறை உருவாவதற்குப் பேராசிரியர் மு.வ., வலியுறுத்தும் முத்தான அறிவுரைகள் மூன்று.
1. பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தல்.2. உயர்ந்த புலவர்களின் காவியங்களைப் படித்தல்.3. சிறந்த உணர்வினர் எழுதிய கதைகளைப் படித்தல்.இவற்றைப் படிப்பதால் விளையும் நன்மைகளையும் மு.வ. 'தங்கைக்கு' என்னும் கடித இலக்கியத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.
இன்பமான வாழ்வு: 'எது இன்பமான வாழ்வு' என்பதற்கு மு.வ. தரும் விடை:“ உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம்;மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம்;உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்”“மனத்தைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்” என்பது மு.வ. உணர்த்தும் அடிப்படையான வாழ்க்கைப் பாடம்.
“குறுகி நிற்பது மனத்தின் இயற்கை அன்று; பரந்த நோக்கம் கொண்டு உயர்வதே மனத்தின் இயற்கை” என கடைசி நுாலான 'நல்வாழ்' விலும் வலியுறுத்துவார். அவர் போற்றும் வாழ்வின் மூன்றாம் இன்பம், உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது. 'வாழ்க்கை பண்படப் பண்பட, பிறர் துன்பத்திற்காகக் கண்ணீர் விடுவதே மிகுதியாகின்றது' எனக் குறிப்பிடும் மு.வ., 'அறநெறிப்படி வாழ்ந்து, மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி, தொண்டு செய்வதையே' மானுட வாழ்வின் இன்பமாகவும் பயனாகவும் கருதுகிறார். துன்பத்தில் வாழும் ஒருவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவுவது தான் உண்மையான இன்பம்!
உடம்பு நன்றாக இருந்து, மனமும் வலிமையாக அமைந்து, பிறருக்கு உதவி செய்து வாழ்வது தான் மு.வ. போற்றும் நல்வாழ்வு. அதுவே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான தாரக மந்திரம்.நிறைவாக, பேராசிரியர் மு.வ.வின் வாழ்வும் வாக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் இன்றியமையாத செய்தி இது:
“வாழ்க்கை மிகப் பெரிய கலை. அதில் தேறுவது கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத்தக்க நல்ல தொண்டு; எப்படி எனின், நம்மைப் பார்த்துப் பிறர் படிக்குமாறு, நாம் ஒரு புத்தகமாக பயன்படுவோம்”.-முனைவர். இரா.மோகன்எழுத்தாளர், -பேச்சாளர் மதுரை, 94434 58286

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X