மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி| Dinamalar

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி

Updated : அக் 12, 2015 | Added : அக் 12, 2015 | கருத்துகள் (7)
 மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி

இன்றைய தினம் பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடிப் பேர், ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் நோயாக இருந்தது. இப்போதோ இளைஞர்களையும் பருவப் பெண்களையும் பாதிக்கின்ற நோயாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
என்ன காரணம்
உடல் உழைப்பு குறைந்து வருவதும், உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக் காரணங்கள். நாட்டில் கணினித்துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு, 35 சதவீத இளைஞர்கள், யுவதிகள் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை மூட்டுவலியை ஏற்படுத்துகின்ற அடுத்த காரணம். இன்றைய இளைய தலைமுறையினர் நம் பாரம்பரிய உணவு முறையை ஓரங்கட்டி விட்டு, மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிவிட்டார்கள். இதனால் சிறு வயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகிறார்கள். இது நாளடைவில் மூட்டுவலிக்கும் வழி அமைத்துத் தருகிறது.
முழங்கால் மூட்டுவலி :மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் 'மூட்டுவலி' என்று பொதுவாகச் சொல்கிறோம். உடற்பருமன், முதுமையில் அடிபடுதல், மூட்டுச் ஜவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியாக் கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய், கால்வளைவு போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள். மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிக வேலை கொடுத்தால் மூட்டில் நீர் கோர்த்து வீங்கி மூட்டுவலியை அதிகப்படுத்தும்.
எலும்பு வலுவிழப்பு நோய் :பொதுவாக ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகும். முதுமை நெருங்கும்போது இது தாமதமாகும். பழைய செல்லுக்குப் பதில் புதிய செல்கள் உருவாகாமல் போகும். இதனால் அங்கு சிறு சிறு துவாரங்கள் ஏற்பட்டு எலும்பு வலிமை இழக்கும். இதற்கு 'எலும்பு வலுவிழப்பு நோய்' என்று பெயர். இந்த நோய் முழங்காலைப் பாதிக்குமானால் குருத்தெலும்புகள் வலுவிழந்து மூட்டுவலியை ஏற்படுத்தும்.
வயதாக ஆக குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாவது இயற்கை. இதை 'முதுமை மூட்டழற்சி' என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு, வழுவழுப்பாக இருக்கும். 'கொலாஜன்' எனும் புரதப்பொருள் இந்த வழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது; குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும்போது இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்துவிடும்.
இதன் விளைவால், எண்ணெய் இல்லாத சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது மூட்டுவலி ஏற்படுகிறது. அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்புத் திசுக்களில், சிறிது சிறிதாக 'எலும்பு முடிச்சுகள்' முளைப்பதாலும் மூட்டுவலி கடுமையாகிறது.
தேய்மானத்தை எப்படி அறிவது :சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்ச துாரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டது போல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.
எலும்பு தேய்மானத்தால் மூட்டுவலி ஏற்படுபவர்களுக்கு, ஆரம்பத்தில் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். தொடை தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசி இட்டால் சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு 'ஆர்த்ராஸ்கோப்' மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் செய்யப்படும்.
இதன் பலனால் 6 மாதமோ ஒரு வருடத்துக்கோ மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும். மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால் இந்த சிகிச்சைகள் எல்லாம் திருப்தி தராது. 'செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை'தான் சரியான தீர்வு.
தடுப்பது எப்படி :நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ அப்படித்தான் மூட்டுத் தேய்மானமும். இதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் வேகமாகத் தேய்மானம் ஆவதை தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்வது? இளம் வயதிலிருந்தே புரதச் சத்து நிறைந்த பால், பால் பொருள்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படுகிறது.
தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் - டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.
சிறு வயதிலிருந்தே நடைப் பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும். முழங்கால் மூட்டுக்கு வலிமை தருகின்ற யோகாசனங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியை நிச்சயம் தள்ளிப்போட முடியும்.
உடல் எடையை வயதுக்கு ஏற்றபடி பராமரிக்க வேண்டியது கட்டாயம். நடக்கும்போது, நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால் மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும்.
- டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர்ராஜபாளையம்.gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X