அன்னை தந்தையே அன்பின் எல்லை! | Dinamalar

அன்னை தந்தையே அன்பின் எல்லை!

Added : அக் 13, 2015 | கருத்துகள் (5)
அன்னை தந்தையே அன்பின் எல்லை!

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ஆலயம் தொழுவது சாலவும் நன்று''என்ற வாக்கியத்திற்கு ஏற்ப ஒரு காலத்தில் நிஜ உலகின் கடவுளாக நம் பெற்றோரை வணங்கினோம். பெற்றோருக்கு அடுத்தபடியாகத் தான் தெய்வத்தை நினைக்கக் கூறியது இலக்கியங்களும் புராணங்களும்.பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக தம் வாழ்நாளின் பெரும்பகுதியை பணத் தேடலாகவும் கடன் சுமைகளாகவும் மனவேதனைகளாகவும் உடல் நலக் குறைகளாகவும் கழித்தவர்கள். பிள்ளைகளுக்காக தன் கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்களும், கணவனை இழந்தவர்களும், வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சிறுவயதிலேயே தன் மனைவியை இழந்து, மறுமணம் செய்யாமல் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய, தந்தைகளும் பாராட்டப்பட வேண்டியவர்கள். தாய் என்ற நிஜ கடவுள் “தாயிற் சிறந்த கோயிலுமில்லைதந்தை சொல்மிக்க மந்திரமில்லைஆயிரம் உலகில் பெருமைகள் இல்லைஅன்னை தந்தையே அன்பின் எல்லை''என, நுாற்றுக்கணக்கான பாடல்வரிகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ஓர் அன்னை தன் பிரசவ காலத்திலும், பிரசவித்த காலத்திலும் தன் உடல் நலத்தைவிட தன்னுள் ஜனித்த கருவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறாள். பத்து மாதங்களும் தனக்கு பிடித்த, பிடிக்காத உணவுகளை சாப்பிட்டு, துாக்கத்தில் புரண்டு படுக்க முடியாமல், மனதில் நல்லெண்ணங்களை வளர்த்து, கடவுள் நம்பிக்கையோடு தன் பிரசவ வலியையும் பொறுத்து, தன் வாழ்க்கையில் மறுஜென்மமாக அவதரித்து குழந்தையை பெற்றெடுக்கிறாள்.
அதோடு முடியாமல் தன் குழந்தையை வளர்ப்பதற்காக இரவு துாக்கத்தை தொலைத்து, பசியை மறந்து, அழகை இழந்து, முழு நேரமும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு வாழ்கிறாள். அலுவலகம் செல்லும் தாய்மார்களின் மனக் குமுறல்கள் எவ்வளவோ. பிள்ளைக்கு குறித்த நேரத்தில் உணவு தர முடியாமல், அலுவலக சுமையும், குடும்ப சுமையும் ஒன்றுசேர அதன் விளைவை முகத்தில் காட்டாமல் இன்முகத்தோடு வலம் வருகிறார்கள். பிள்ளை வளர்ந்த பிறகு, அதற்கு சரிவிகித சத்தான உணவை கொடுப்பதற்காக தன் பங்கு உணவை தவிர்த்தவளும் தாயே.
பெண் பிள்ளையானால் வளர்ந்த பிறகு அவள் தங்கச் சங்கிலி அணிவதற்காக தன் தாலிச் சங்கிலியையும் கழற்றியவர்கள். சேட்டை செய்யும் பிள்ளையை அடித்து விட்டு, இரவு துாங்கும் போது அதன் காலைத்தொட்டு முகர்ந்து அழுபவளும் ஒரு தாயே. இப்படி கணக்கிலடங்கா பல்வேறு பரிமாணங்களையும் எடுத்து பல்வேறு இன்ப துன்பங்களுக்கிடையே குழந்தையை வளர்ப்பவள் தாய்.
தந்தை எனும் ஆசான் :தாய்க்கு ஒருநாள் பிரசவ வேதனை என்றால், தந்தைக்கு தன் பிள்ளை வளரும் வரை தினமும் பிரசவ வேதனைதான். பிள்ளைக்காக தன் வேலைப் பளுவையும் அதிகரித்துகொண்டு குடும்ப பாரத்தையும் சுகமான சுமையாக தாங்கியவரும் அவரே. வீட்டிற்கு வெளியே கடன்காரர்களின் கெடுபிடிக்கு ஆளானாலும், அதனை வெளிக்காட்டாமல் வீட்டிற்குள்ளே தன்னை ஒரு மகிழ்ச்சியான தந்தையாக காட்டிக் கொள்வதிலும் அவருக்கே பெருமை. தன் பிள்ளை ஒருவேளை பிரியாணி சாப்பிட, பத்து நாட்களுக்கு பழைய சோற்றை சாப்பிடுபவர். தன் மகன் கல்லுாரிக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல தன் இருகால்களையும் சக்கரங்களாக மாற்றி உழைப்பார்.தன் பிள்ளை சக நண்பர்களுக்கு இணையாக உடை உடுத்த, கந்தல் ஆடையை தைத்து போட்டு உடுத்தியவர்கள். பிள்ளையின் உயர்கல்விக்காக தன் வீட்டோடு சேர்த்து, தன் மானத்தையும், சுயமரியாதையையும், கவுரவத்தையும் சேர்த்து அடகு வைத்தவர்கள்.
வெளியில் சிங்கமாகவும், புலியாகவும் வலம் வந்த தந்தை தன் மகளுக்காக மருமகனிடம் தாழ்ந்து செல்வார். இவ்வாறெல்லாம் தந்தையின் கைம்மாறு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இன்றுவரை. வள்ளுவனும் பெற்றோரும் “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல்''மகன் தந்தைக்கு செய்யத்தக்க கைம்மாறு 'இவன் தந்தை இவனை மகனாகப்பெற என்ன தவம் செய்தானோ' என்று, பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது''
என்று தம் பிள்ளைகள் அறிவுமிக்கவராக இருப்பது தம்மைக் காட்டிலும் இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது என்கிறார் வள்ளுவர். பிள்ளைகளின் கைம்மாறு எண்ணிலடங்கா செயல்களை செய்த பெற்றோர்களுக்காக, பிள்ளைகள் செய்ய வேண்டிய கைம்மாறு பல உள்ளன. ஆனால் நம் பிள்ளைகள், பசித்த வேளையில் தாய் உணவு பரிமாற நேரம் தவறியதற்காக, வீட்டில் தட்டை பறக்கவிட்டு, வார்த்தை அம்புகளை வீசிவிட்டு, வெளியில் சென்று நண்பர்களோடு அரட்டை அடித்து, பிரியாணியை வெளுத்துக் கட்டுகிறார்கள்.கஷ்டப்பட்டு அப்பா வாங்கிக் கொடுத்த அலைபேசியில், நடிகர் நடிகைகளின் சித்திரம், இடர்களுக்கு நடுவே அப்பா வாங்கிக் கொடுத்த வாகனத்தில், தன் நண்பர்களுடன் 'வீலிங்' 'ரைடிங்' எனும் சாகச பயணங்கள். கல்லுாரிக்கு பணம் கட்ட வேண்டுமென்று அதிகமாக வாங்கி, நண்பர்களுடன் சென்று தியேட்டர்களுக்கு பணத்தை தருகிறார்கள். இப்படி பல்வேறு கைம்மாறுகள் நடைபெறுகிறது இந்நாட்டிலே. அதிகரிக்கும் முதியோர் இல்லம் கைம்மாறுகளின் கிரீடமாக, திருமணத்திற்கு பிறகு தன் மனைவியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தன் பெற்றோரை வீட்டிலேயே தனியாக தவிக்கவிட்டு, இல்லை என்றால் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். நமக்கும் எதிர்காலமும் உண்டு; வயது முதிர்வும் உண்டு என்பதை மனதில் நிறுத்தி இன்று இருக்கும் நம் நடமாடும் தெய்வங்களை அன்புடனும் பாசத்துடனும் நடத்தலாம். கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய நேரத்தில், மன ஆறுதலுக்கு கூட ஆளில்லாமல், தனிமை எனும் சிறையில் இருக்கும் நம் மூத்த குடிமக்களை காப்போம்.பெற்றோருக்கு மகிழ்வை தராவிட்டாலும், மனக்கசப்பை தராமல் இருக்க முயற்சி செய்வோம். தெருக்கோடியில் நம் பெற்றோரை விடாமல் காப்போம் என்று உறுதியெடுப்போம். அப்துல் கலாம் சொன்ன கனவுகளுடன் சேர்த்து, பெற்றோரை நம் வீட்டு பொக்கிஷமாக மாற்ற கனவு கண்டு நனவாக்குவோம். வலிமை மிக்க பாரத நாட்டின் துாண்களான நம் பெற்றோரை, இன்றே நம் வீட்டிற்கு அழைத்து வந்து முதியோர் இல்லத்திற்கு மூடு விழா காண்போம்.-- பேராசிரியர்.கே.பிரவீனா,தியாகராஜர் கல்லுாரி, மதுரை,aveena52@gmail.com.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X