"வாரிசு சான்று வாங்கறதுக்குள், வருவாய்த்துறை இன்ஸ்பெக்டர் (ஆர்.ஐ.,) படாதபாடு பட்டுட்டாங்க, தெரியுமா?'' என்றாள் மித்ரா.
"என்னப்பா, சொல்றே? ஆர்.ஐ.,க்கே இந்த நிலைமையா?'' என்று அதிர்ச்சியானாள் சித்ரா.
"ஆமாக்கா, சொன்னால், யாரும் நம்ப மாட்டாங்க. சாமளாபுரம் ஏரியாவுல ஒரு பெண் ஆர்.ஐ., இருக்காங்க. இவரோடு தந்தை, மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிச்சார். சமீபத்தில், அவர் இறந்துட்டார். அவர் வசிச்ச பகுதி, ஆண்டிபாளையம் ஏரியாவுக்குள் வருது. வருவாய்த்துறை அதிகாரியா இருக்கறதால, முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செஞ்சு, வாரிசு சான்று கேட்டு, வி.ஏ.ஓ., ஆபீசுல கொடுத்திருக்காங்க. அங்க இருக்கற அதிகாரி, சும்மா கையெழுத்து போட்டுடுவாரா, என்ன? "விசாரணை செய்யணும்'னு சொல்லி, 28 நாள் கிடப்பில் போட்டுடுட்டார். படிப்படியா மேல்மட்டம் வரைக்கும் சிபாரிசு செஞ்ச பிறகே, கையெழுத்திட்டு கொடுத்திருக்காங்க. ஆர்.ஐ.,யா இருக்கறவங்களுக்கே, இந்த நிலைமைனா, சாதாரண ஜனங்க, எப்படி தொங்கிட்டு இருப்பாங்கனு யோசிச்சு பாருங்க,'' என்றாள் மித்ரா.
"எதையாவது, "எதிர்பார்த்து' இழுத்தடிச்சிருப்பாங்க. இதையெல்லாம், உயரதிகாரிங்க கண்டுக்க மாட்டாங்களா?,'' என்றாள் சித்ரா.
"ரெண்டு பேருமே ஒரே துறையை சேர்ந்தவங்க. புகார் சொன்னா, நல்லா இருக்காதுன்னு, ஒரு மாசமா போராடி, கையெழுத்து வாங்கியிருக்காங்க. ஆனா, கலெக்டர் ஆபீஸ் முழுக்க, இப்ப, இதைப்பத்தி தான் பேசிக்கிட்டு இருக்காங்க. இதெல்லாம், மாவட்டத்துக்கே கேவலம் இல்லையா? டி.ஆர்.ஓ., சாட்டையை எடுத்தாத்தான், எல்லாம் சரியாகும்,'' என, வருத்தப்பட்டாள் மித்ரா.
"மறுபடியும் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு, ஒரு லட்சம் ரூபாய் கேட்டிருக்காங்க,'' என, அதிர்ச்சி குண்டை தூக்கி வீசினாள் சித்ரா.
"என்னக்கா சொல்றீங்க, ஒரு லட்சம் ரூபாயா?'' என, அதிர்ந்தாள் மித்ரா.
"நம்ம மாநகராட்சியிலதான், எல்லாம் செய்வாங்களே! காம்பவுண்ட் வீடுகளை சுத்தமாக வைத்திருக்கா விட்டால், குடிநீர் இணைப்பை "கட்' செய்றாங்க. இதுமாதிரி, கிழக்கு மண்டலத்துல இருக்கும், "லைன்' வீட்டுல, நாலு இணைப்பை துண்டிச்சாங்க. "கழிவுநீர் பிரச்னையை "ரெடி' பண்ணிக்கிறோம்; மறுபடியும் "கனெக்ஷன்' கொடுங்க'னு, ஒரு அதிகாரியிடம் கேட்டிருக்காங்க. அவரோ, தன்னுடைய "பினாமி'யை பார்க்கச் சொல்லியிருக்கார். கடைசியா பேசிய நபர், "நாலு இணைப்புக்கும் சேர்த்து, ஒரு லட்சம் கொடுங்க; சத்தம் இல்லாம இணைப்பு கொடுக்கிறோம்'னு பேரம் பேசியிருக்கார். அதிர்ச்சியான வீட்டுக்கு சொந்தக்காரர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பிட்டார். அங்கிருந்து பதில் கேட்டு, மாநகராட்சிக்கு கடிதம் வந்திருக்கு. வேறு வழியில்லாமல், "புரோக்கர்' மூலமா பேசி, குறைந்த செலவுல, மறுபடியும் "கனெக்ஷன்' கொடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"கொஞ்சம் ஏமாந்தா, சொத்தை வித்துதான் பணம் கொடுக்கணும் போலிருக்கே. எப்படியிருந்தாலும், பணத்தை கறக்காம விடலையே,'' என, மனம் நொந்த மித்ரா, ""நம்மூரும், "ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் இருக்கே; ஏதாச்சும் உருப்படியா செய்வாங்களா,'' என, கேட்டாள்.
"முதல்கட்டமாக, கவுன்சிலர்களையும், பொதுநல அமைப்பினரையும் அழைத்து பேசியிருக்காங்க. கவுன்சிலர்களிடம், "மைக்' கொடுத்தா, குப்பை, சாக்கடை, தெருநாய் பிரச்னையை பேச ஆரம்பிச்சிடுவாங்கன்னு, படிவம் கொடுத்து, பூர்த்தி செஞ்சு கொடுக்கச் சொன்னாங்க. படிவத்தை வாங்குனவங்க, மடிச்சு, பாக்கெட்டுல வச்சுட்டு போயிட்டாங்க. இந்த வேலையை கூட ஒழுங்கா, செய்ய மாட்டாங்களா என, "ஸ்மார்ட் சிட்டி' ஆய்வுக்குழு நொந்து போயிருக்கு,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE