ஸ்டாலினை வேவு பார்த்த காக்கி... சட்டை கிழியாததே பாக்கி!| Dinamalar

ஸ்டாலினை 'வேவு' பார்த்த காக்கி... சட்டை கிழியாததே பாக்கி!

Added : அக் 13, 2015
Share
கணபதியில், ஓட்டலில் ஆனியன் பக்கோடாவை ருசித்துக்கொண்டே, இரண்டு 'காஃபி'க்கு ஆர்டர் கொடுத்தாள் மித்ரா.''மித்து....ஏதாவது பேசுறதுக்கு முன்னாடி, பக்கத்துல யாராவது நிக்கிறாங்களான்னு 'செக்' பண்ணு'' என்றாள் சித்ரா.''ஏன்க்கா...புதுசா பயப்படுற?'' என்று மிரள்வது போல் விழித்தாள் மித்ரா.''இப்பிடித்தான், இதே ஓட்டல்ல ஸ்டாலின் சாப்பிடுறப்ப, ஒரு போலீஸ் ஆபீசர் 'வேவு'
ஸ்டாலினை 'வேவு' பார்த்த காக்கி... சட்டை கிழியாததே பாக்கி!

கணபதியில், ஓட்டலில் ஆனியன் பக்கோடாவை ருசித்துக்கொண்டே, இரண்டு 'காஃபி'க்கு ஆர்டர் கொடுத்தாள் மித்ரா.
''மித்து....ஏதாவது பேசுறதுக்கு முன்னாடி, பக்கத்துல யாராவது நிக்கிறாங்களான்னு 'செக்' பண்ணு'' என்றாள் சித்ரா.
''ஏன்க்கா...புதுசா பயப்படுற?'' என்று மிரள்வது போல் விழித்தாள் மித்ரா.
''இப்பிடித்தான், இதே ஓட்டல்ல ஸ்டாலின் சாப்பிடுறப்ப, ஒரு போலீஸ் ஆபீசர் 'வேவு' பார்க்க வந்து, ரெண்டு போலீசுக்கு இடையில, அடிதடி ஆயிருச்சு''
''கேள்விப்படாத விஷயமா இருக்கு...''
''ஸ்டாலின் தன்னோட கட்சி நிர்வாகிகளோட உட்கார்ந்து, சாப்பிட்டுட்டு இருந்தப்போ, இந்த ஏரியா இன்ஸ்பெக்டர், 'மஃப்டி'ல வந்து, பக்கத்துல சத்தமில்லாம நின்னுட்டு இருந்திருக்காரு. ஸ்டாலினை தனியாப் பார்க்க நின்னாரா, என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக்கேக்க வந்தாரான்னு தெரியலை''
''யாரு...வெளியூரு போயி, கடா வெட்டி, பூஜை பண்ணி, திரும்ப வந்தாரே...அந்த ராசகுமாரனா?''
''அவரே தான். யாரோ ஒருத்தரு, ரொம்ப நேரமா, ஸ்டாலின் பக்கத்துல நின்னுட்டு இருக்காரேன்னு, பி.எஸ்.ஓ., வந்து அவரை விசாரிச்சிருக்காரு. அதுக்கு, அவரோட பாணியில, ஏதோ 'தெனாவட்டா' பதில் சொல்லிருக்காரு. உடனே, அவருக்கும், ஸ்டாலினோட பந்தோபஸ்துக்கு வந்த இன்ஸ்பெக்டருக்கும் கை கலப்பாயி, ரெண்டு பேரும் சட்டையப் பிடிச்சிக்கிட்டாங்க''
''அச்சச்சோ...யாரும் தடுக்கலையா?''
''சட்டையப் பிடிச்சிக்கிட்ட 'ஸ்டேஜ்'ல, கட்சிக்காரங்க தடுத்துட்டாங்க. அதுக்குள்ள, ஏரியால உளவு பாக்குற எஸ்.ஐ.,க்கும், ஸ்டாலினோட வந்த எஸ்.ஐ.,க்கும் அடிதடியே ஆயிருச்சாம்'' என்றாள் சித்ரா.
''அது சரி...கோயம்புத்துார்ல ஸ்டாலினுக்கு எப்பிடி இருந்துச்சாம் வரவேற்பு?'' என்றாள் மித்ரா.
''பெரிய 'மாஸ்'ம் இல்லை. மோசமும் இல்லை. ஆனா, உடன் பிறப்புகள்
ரொம்பவே உற்சாகமா தெரியுறாங்க'' என்றாள் சித்ரா.
''அவுங்க உற்சாகமா இருக்காங்க. ஆனா, ஆளும்கட்சியில இருக்கிற சீனியர்க எல்லாம், 'கட்சியில மரியாதையே இல்லை'ன்னு குமுறுறாங்க. இதனால, சீனியர்கள் பல பேரையும் கூட்டிச் சேர்க்குற வேலையில, ராமநாதபுரத்துல இருக்கிற கட்சிக்கார நிர்வாகி ஒருத்தரு, தீவிரமா இறங்கிருக்காராம். அநேகமா, பிரச்னை சீக்கிரமே சென்னையில வெடிக்கும்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''ராமநாதபுரத்துல, ஆளும்கட்சிக்குள்ள வேற ஒரு பிரச்னை இருக்கு. அந்த ஏரியாவுல மெஜாரிட்டியா இருக்கிற கம்யூனிட்டி ஆளுங்களுக்கு பொறுப்பு கொடுக்காம, ராவணனுக்கு டிரைவரா இருந்து, திடீர்னு கவுன்சிலரான அண்ணாச்சி ஒருத்தருக்கு பொறுப்பைக் கொடுத்திருக்காங்களாம். அந்த சமூகத்துக்காரங்க, ஏதோ ஒரு 'டிராக்'ல சின்னம்மாவைப் பார்க்க 'டிரை' பண்றாங்க'' என்றாள் சித்ரா.
''குறிப்பிட்ட கம்யூனிட்டிக்கு முக்கியத்துவம் தரணும்னு சொல்லித்தான், மாநகர் மாவட்டத்தை மாத்துனாங்க. புது 'மாவட்டம்', பதவிக்கு வந்த பிறகு, வாயை திறக்கவே மாட்டேங்கிறாராம். பேசுனா, நமக்கும் பதவி போயிரும்னு பயப்புடுறாரோ என்னவோ?'' என்றாள் மித்ரா.
''இதே பயம், தி.மு.க., மாவட்டங்கள்ட்டயும் இருக்கு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''அவுங்க மாவட்டப்பொறுப்புக்கு வந்தே, கொஞ்ச நாள்தான ஆகுது?'' என்றாள் மித்ரா.
''ஆனா, ஸ்டாலின்ட்ட ஏகப்பட்ட புகார் குவிஞ்சிருக்கு. கோயம்புத்துார்ல, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்களை அவர் பாத்துப் பேசுனப்ப, பி.எச்.டி., படிக்கிற ஒரு பையன், 'நீங்க, எங்களை நேர்ல சந்திக்க வர்றீங்க. மக்கள் பிரச்னைன்னா, உங்க தலைவரு, போராட்டத்தை அறிவிக்கிறாரு. இங்க இருக்கிற நிர்வாகிங்க, உள்ளூர் பிரச்னைக்கு எதிரா ஒரு போராட்டமும் நடத்தலியே'ன்னு நெத்தியடியா கேட்ருக்காரு''
''சபாஷ்! சரியான கேள்வி''
''இன்னும் சில பேரு, 'உள்ளூர் நிர்வாகிகள் ஒண்ணுமே கட்சி வேலை பாக்குறதில்லை. ஆளும்கட்சிக்காரங்களோட மறைமுக கூட்டணி வச்சிருக்காங்க'ன்னு சொல்லிருக்காங்க. இது எதுக்குமே ஸ்டாலின் நேரடியா பதில் சொல்லலை. ஆனாலும், உடன் பிறப்பு நிர்வாகிக, உதறல்ல இருக்காங்க''
''இதை மத்தவுங்க சொல்லித்தான் தெரியணுமா. ஒவ்வொரு தேர்தல்லயும் வாங்குற அடியிலயே தெரியாதா?''
''ஏன் மித்து... கட்சியோட மூத்த தலைவர் கோவைத்தென்றல் ராமநாதன், ரொம்ப முடியாம இருக்காராம். கோயம்புத்துார்ல வீதி வீதியா சுத்துன ஸ்டாலின், அவரைப் போய் சந்திக்கலையாமே'' என்று கேட்டாள் சித்ரா.
''அதான்....அவரு மக்களைத்தான் சந்திக்க வந்திருக்கேன்னு சொல்லிட்டாரே'' என்றாள் மித்ரா.
''எதுக்கு வர்றாரோ தெரியலை. ஆனா, ஊரை நல்லா சுத்துறாரு. நம்மூர்ல ஜி.டி. மியூசியத்துல அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்துன வண்டியைப் பாத்துட்டு, 'இதை ரோட்டுல ஓட்டிருக்கீங்களா'ன்னு கேட்ருக்காரு. அதுக்கு, ஜி.டி.கோபால், 'நம்மூர் ரோட்டுல இதை ஓட்ட முடியாது'ன்னு சொல்லிருக்காரு'' என்றாள் சித்ரா.
''அக்கா! நம்மூர்ல ஒரு கவர்மென்ட் சுவரைக் கூட விட்டு வைக்காம, ஆளும்கட்சிக்காரங்க வரைஞ்சு தள்ளிட்டே இருக்காங்க...கவனிச்சியா?''
''ஆமா...பார்த்தேன். வழக்கமா, ஆளும்கட்சிக்காரங்க பண்றது தான். ஆனா, நம்மூர்ல அரசு சுவர் விளம்பரமும், அனுமதியில்லாத பிளக்ஸ் பேனரும் ரொம்பவும் தான் ஓவரா இருக்கு. நம்மூருக்கு, பத்து டிராபிக் ராமசாமி வேணும்போலிருக்கு''
''நான் அதைச் சொல்லலை. சுவர் விளம்பரம் பண்றதுல, ஆளும்கட்சிக்குள்ளேயே அதகளமாயிருச்சு. கோடநாடுக்கு, ஒரு வேளை வண்டியில 'அம்மா' போனா, வழியில பார்ப்பாங்களேன்னு, நம்ம பழைய 'டவுன்டாடி' ஆளுங்க, கோத்தகிரி ரோட்டுல, ரெண்டு பக்கமும் வளைச்சு எழுதிருந்தாங்க. அதையெல்லாம் மாத்திட்டு, அருண்குமார் பேரை எழுத வச்சுட்டாங்களாம்'''
''பழைய 'டவுன்டாடி' மேட்டர் ஒண்ணு கேள்விப்பட்டேன்...மறுபடியும் 'என்ட்ரி' ஆவுறதுக்காக, ஒரு வாரமா, தினமும் காலையில 'கார்டன்' வாசல்ல நின்னு, 'அம்மா' காரைப் பாத்து கும்பிடு போட்ருக்காரு. திடீர்னு ஒரு நாள், வண்டி நின்னுருக்கு. நம்மளைத்தான் கூப்பிடப்போறாங்கன்னு இவரு நினைக்க, எஸ்.எஸ்.ஜி., ஆபீசரைக் கூப்பிட்டு, 'இனிமே நான் அவரை இங்க பாக்கக்கூடாது. அனுப்பி விடுங்க'ன்னு சொல்லிட்டு, கிளம்பிட்டாங்களாம்''
''அப்பிடின்னா...இன்னமும் அவுங்க கோபமா இருக்காங்களா?'' என்றாள் மித்ரா.
''சரி...அரசியலை விடு...மருதமலையில இருந்து போய், மேட்டுப்பாளையத்துல தண்ணியில இறந்துகிடந்தாரே; அவரைப் பத்தி, ஏதாவது தகவல் இருக்கா?'' என்றாள் சித்ரா.
''அசிஸ்டென்டா இருந்த அவரு, தன்னோட கல்வித்தகுதியை வச்சு, பி.ஆர்.ஓ., 'போஸ்ட்டிங்'கை வாங்க முயற்சி பண்ணிருக்காரு. அதுக்காக, முக்கியமான பொறுப்புல இருந்தவருக்கு, ஒரு பெரிய தொகையைக் கொடுத்தாராம். ஆனா, அவரு 'போஸ்ட்டிங்'கும் போடாம, பணத்தையும் திருப்பித் தராமப் போயிட்டதால, வெறுத்துப்போய், தற்கொலை பண்ணிட்டாரு'ன்னு ஒரு தகவல் பரவிட்டு இருக்கு'' என்றாள் மித்ரா.
''இது எதைப்பத்தியும் கவலைப்படாம, அந்த முக்கியமானவரு நம்ம 101வது வார்டு கவுன்சிலரைப் பிடிச்சு, வேற 'போஸ்ட்டிங்' வாங்க, தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்காராமே'' என்றாள் சித்ரா.
''ரோசமானவரைப்பத்தி இன்னொரு மேட்டர், அவரு...அவரோட சமூகத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருத்தரு வீட்டுக்கு, எப்பவோ ஒரு தடவை சாப்பிடப்போயிருக்காரு. அதை வச்சுட்டு, அந்த நகைக்கடைக்காரரு, பில்டிங் அப்ரூவல், போலீஸ் டிரான்ஸ்பர், திருட்டு கேசு, ரியல் எஸ்டேட் விவகாரம்னு வளைச்சு வசூல் பண்ணிட்டுத் திரியுறாராம். பேர்லயே 'குண்டு' வச்சிருக்கிற அவரைப் பத்தி, ஏகப்பட்ட புகாரு
குவியுது'' என்றாள் மித்ரா.
''அஞ்சு லட்ச ரூபா வாங்கிட்டு, அரசு நிலத்தை தனியார் நிலம்னு அத்தாட்சி கொடுத்த ரெவின்யூ ஆபீசரைத் தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''நாம ஏற்கனவே பேசுன ஆபீசர்தான... ஆம் ஐ கரெக்ட்?'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் மித்து! அவரு தான், போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டுல, அரசு உபரி நிலம் 44 சென்ட்டை, தனியார் இடம்னு அத்தாட்சி கொடுத்திருக்காரு. அதுக்காக, அஞ்சு லட்ச ரூபா வாங்குனதா தகவல். கடைசியில, ஜாயின்ட் 1 ரிஜிஸ்டர் ஆபீசுக்கு எப்பிடியோ தகவல் போயி, ரிஜிஸ்டர் பண்ணாம நிறுத்திட்டாங்க. இந்த மேட்டர், மாவட்ட மேடத்துக்குத் தெரிஞ்சும், இன்னமும் நடவடிக்கை எடுக்காம இருக்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''தீபாவளி வசூல் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சுக்கா. ஃபயர் சர்வீஸ்க்கும், போலீசுக்கும் தான் ஒரே போட்டியா இருக்கு'' என்று மித்ரா சொல்லும்போதே, சுடச்சுட காஃபி வந்தது. விரல் வைத்து, 'உஷ்' என்று, சைகை காட்டி, டம்ளரை ஆற்ற ஆரம்பித்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X