இளம் சிறார் குற்றங்கள்: எங்கே இருக்கிறோம் நாம் !| Dinamalar

இளம் சிறார் குற்றங்கள்: எங்கே இருக்கிறோம் நாம் !

Added : அக் 13, 2015 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இளம் சிறார் குற்றங்கள்: எங்கே இருக்கிறோம் நாம் !


''ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டுமென்றால் அம்மா, அப்பா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்ற மூன்று பேர் முக்கியம். நல்ல குணமான வாழ்வு வேண்டுமெனில், இவர்களால்தான் வழிகாட்ட முடியும். மூவரும் சேர்ந்து
பதினைந்து வயதிற்குள் ஒரு குணமான குழந்தையாக மாற்றாவிட்டால், பிறகு கடவுளோ, பிசாசோ, எந்த அரசுச்சட்டமோ அவர்களை மாற்ற முடியாது”.
- ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் யார் இளம் சிறார் குற்றவாளிகள்? பிறக்கும்பொழுதே மரபணுக்கள் மற்றும் உளவியல் காரணங்களால் துாண்டப்படுகிறார்களா? அல்லது வாழ்ந்த சமூக சூழல், வளர்ந்த குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு காரணிகளால் துாண்டப்படுகிறார்களா?
டில்லியில் 2012- -ல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக வைத்த நிர்பயா சம்பவம், அதனைத் தொடர்ந்து மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவம் மட்டுமின்றி பல்வேறு வன்முறைகளிலும் 18வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையடுத்து மேற்கண்ட கேள்விகள் எழுப்பப்பட்டன,
கல்விக்கூடம், குடும்பம் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை எனக் கண்டித்ததால், சென்னை மாணவர் ஆசிரியையைக் கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை அறிவோம். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் 'அக்னிபாத்' என்ற திரைப்படத்தில் வரும் கொலை செய்வது போன்ற காட்சியினை திரும்ப திரும்ப பார்த்துள்ளான். சினிமாவில் வரக்கூடிய வன்முறைக் காட்சிகள் இளஞ்சிறார் வன்முறையில் ஈடுபடுவதற்கு முக்கிய துாண்டுகோல் என்பதனை அறியமுடிகிறது. சமீபத்தில், சென்னையில் நடந்த கொலையில்,பணம் மற்றும் மதுவுக்காக கூலிப்படையுடன் இணைந்து 17- வயது மாணவனும் கைதாகி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.
ஒரு புறம், வசதி படைத்தவர்கள் குழந்தைகளுக்கு எல்லை மீறியசுதந்திரம் கொடுப்பதுடன், அன்றாட நடவடிக்கைகளை கவனிக்காமல் தீய வழிகளில் நடப்பதற்கு காரணமாகிவிடுகிறார்கள். மற்றொரு புறம், வறுமையின் காரணமாக வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தன்னுடைய வயதான பெற்றோரின் கண்காணிப்பில் விட்டுச்சென்ற 4 வயது குழந்தைக்கு, தாய்மாமனே மது ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்தகொடூரமும் அரங்கேறியுள்ளது. மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்குள்ளேயே ஆசிரியையிடம் தகராறு செய்யும் மோசமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
யார் குற்றவாளி
ஒருவனுடைய உடலமைப்பில் காணப்படும் 16- விதமான மாற்றங்கள்தான், அவன் குற்றவாளி என்பதற்கான அடையாளம் என இத்தாலிய குற்றவியல் அறிஞரான சீஸர் லம்ப்ரசோ கூறுகிறார். குற்றவியல் அறிஞர் என்ரிகோபெர்ரி கூறும்போது, ”உடற்கூறினை வைத்து மட்டுமே ஒருவரை குற்றவாளி எனக்கூறிவிடமுடியாது” குற்றவாளிகளை 1) பிறப்பிலேயே குற்றவாளி, 2) அவ்வப்பொழுது குற்றம் புரிபவன் 3) தீவிர உணர்ச்சி வசப்பட்ட நிலையில் குற்றம் புரிபவன் 4) மன நலம் குன்றிய நிலையில் குற்றம் புரிபவன் 5) குற்றச்செயலில் ஈடுபடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் என வகைப்படுத்துகிறார்.
''ஒருவன் தான் சார்ந்த சமூகத்தில் பலதரப்பட்ட குழுவினருடன் பழகும் போது குற்றச்செயல்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறான்” என்று அறிஞர் எட்வின் சதர்லாண்ட் விளக்கம் அளிக்கிறார். நவீன காலக்கட்டத்தில் குடும்ப வறுமை, பிளவுபட்ட குடும்பம், மது,போதை பழக்கம், எளிதில் ஆபாசப்படங்கள் கிடைப்பது, சக நண்பர்களின் துாண்டுதல், சினிமா, ஊடகங்கள் போன்றவைதான் இளஞ்சிறார்கள் தவறான பாதையில் செல்வதற்கு காரணங்களாக அமைகின்றன.
மேலை நாடுகளில் சில ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில், ஆறு வயது சிறுவன் சக வயதுசிறுமியை துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி உயிரிழந்திருக்கிறார். அவனது தந்தை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக, சிறையில் இருந்ததால் தாயின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறான். சோடா பாட்டில்களும் ஒயர்களும் சிதறிக்கிடக்கும் வீடு, உடைந்த கண்ணாடி ஜன்னல்கள், வெளிச்சமே இல்லாத அறை, அங்குதான் அவனது 8- வயது சகோதரனும் இவனும் இரவு துாங்குவார்களாம். அந்த சிறுமியை கொன்றது அவனை உருவாக்கிய குடும்ப சூழல்தான். இப்படி ஒருபுறமிருக்க, ஈராக், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறுவர்களுக்கும் அதிநவீன துப்பாக்கிகளைக் கொடுத்து, எதிரிகளின் தலைகளைத் துண்டிப்பது போன்று பயிற்சியளித்து வருவது சர்வதேசஅளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளி விபரம்
2003ல் நாடு முழுவதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் பதிவான இளஞ்சிறார் குற்றவழக்குகளின் எண்ணிக்கை 17,819. அடுத்த 10 ஆண்டுகளில், 31,725 ஆக பதிவாகியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதே ஆண்டில் நாடு முழுவதும் பதிவான இளஞ்சிறார் வழக்குகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 31.4 சதவீதம் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் கைதான சிறார்களின் சதவீதம் 66.3. இவர்கள் அனைவரும் 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே.
தமிழ்நாட்டிலும் நான் ஆய்விற்காக கூர் நோக்கு இல்லங்களுக்கு சென்று, சிறார்களிடம் நேர்காணல் செய்த போது கொலை, பாலியல் வல்லுறவு வழக்குகளின் கீழ் வந்தவர்கள் அனைவருமே 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் பலர் சமூக விரோத கும்பலின் துாண்டுதலினால் செயல்பட்டவர்கள்.
சீர்திருத்த காலத்தினை சீக்கிரமே முடித்துவிட்டு, வெளியே வந்து விடலாம் என்பதனை மனதில் வைத்தே, இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது. இந்திய ராணுவத்திடம் பிடிபட்டாலும் 18- வயதுக்குட்பட்டவர் எனில் சிறார் நீதி மன்றத்தின் மூலம் தண்டனை குறைவாக கிடைக்கும் என்ற தந்திரத்தை சமீபத்தில், லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாதிகள் பின்பற்றி வருவது அம்பலமாகி உள்ளது.பெரியவர்களுடன் சேர்ந்தே வன்முறையில் ஈடுபடும் 16 முதல் 18 வயது நிறைவடையாதோரின் எண்ணிக்கை, டில்லி நிர்பயா வழக்கில் இருந்தே அதிகரித்து வருகிறது. சமீபகாலமாகவே சீர்திருத்த இல்லங்களில் சிறார்கள் காவலாளிகளை தாக்கிவிட்டு தப்பி ஓடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
புதிய மசோதா சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா2014 என்ற புதிய மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி, 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் புரிந்துள்ள குற்றங்கள் கொடூர குற்றமாக இருப்பின் அவர்கள் சிறார் என்ற மன நிலையில் செய்தனரா அல்லது இளைஞர் என்ற மன நிலையில் செய்தனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்புவதா அல்லது பெரிய குற்றவாளிகளைப் போன்று தண்டிப்பதா?என்பதை சிறார் சீர்திருத்த வாரியம் முடிவு செய்யும். புதிய திருத்தத்தின் படி 7-ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ தண்டனை என்கிற பெயரில் பெரியவர்களோடு சேர்த்து சிறை வைக்காமல், அதே கால அளவில் இவர்களுக்கென்றே தனிப்பட்ட முறையில், மறு வாழ்வினை ஏற்படுத்த, திறந்த வெளிச்சிறையில் தொழிற்பயிற்சி அளிக்கலாம்.
இளம்பிஞ்சுகளின் மனதில் வன்முறை எனும் நஞ்சு பாயாமல் இருக்க வேண்டுமாயின், பெற்றோர் குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பு காட்டி அரவணைக்க வேண்டும். ஆரம்ப பள்ளியிலிருந்தே ஆசிரியர்கள் நல்லொழுக்கங்களை போதிப்பது மட்டுமல்லாமல், பிரச்னைகளை அறிந்து மன நல ஆலோசகர்களாகவும் விளங்க வேண்டும். ஊடகங்களும், சினிமாவும் வன்முறை, ஆபாசங்களை நீக்கி குழந்தைகளின் மனதில் நல்லெண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துவது அவசியம். -முனைவர்.டி.முருகேசன் சமூகவியல் ஆய்வாளர், மதுரை 97861 97688

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
26-நவ-201510:16:25 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமையான கட்டுரை. குழந்தைகள் அதிக நேரம் இருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் கையை சட்டம் கட்டிவிட்டதே. என் அப்பா ஆசிரியரிடம் கொண்டு விட்டு அடித்து சொல்லிகொடுங்கள் என்பார். இன்று வீட்டிலுள்ள மூத்தோர்கள் அடித்தாலே பொறுக்காத பெற்றோர்கள்.. எதோ உலகத்தில் இல்லாமல் இவர்கள் மட்டுமே குழந்தைகளை பெற்ற மாதிரி .
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
14-அக்-201513:52:52 IST Report Abuse
mrsethuraman  சிறுவர்களை சீரழிப்பதில் வீடியோ கேம்ஸ்,செல்போன்,இணைய தளம் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
14-அக்-201511:36:37 IST Report Abuse
s. subramanian பெற்றோர்களுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு என்பதில் நிறைய உண்மை உள்ளது, பள்ளியில், நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கோணத்திலேயே வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பது உண்மை, அங்கு ஒழுக்கம் பெயரளவில் மட்டுமே உள்ளது, இதுக்கு ஏற்றர்போல் சில தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என்ற பெயரில் பள்ளிகளை பற்றியும் ஹிந்தி சமஸ்க்ரிதம் படிக்க சொல்லிவிட்டார்கள் என்ற பெயரில் சில பெரியவர்கள் நடத்து விவாதங்கள், ஆசிரியர்களின் உடை பற்றிய சர்ச்சைகளை பேசுதல் என அங்கேயும் தவறான வழிநடத்தல்கள் தான் என்பது உண்மை. ஆக, பள்ளியில் நாம் ஒழுக்கத்தை மாணவர்கள் கற்கிறார்கள் என எந்த பெற்றோரும் நம்ப வேண்டாம் என்பதே என் எண்ணம், அங்கயும் சிலரால் அரசியல் வந்துவிட்டது, நம் பிள்ளைகளின் ஒழுக்கத்தை நாம் சொல்லிகொடுப்பது மட்டுமில்லாது நாமும் ஒழுக்கமாய் இருப்பதே முதல் படி,,,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X