கிவி: ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும், உக்ரைன் நாட்டின், செர்னோபில் அணு உலை விபத்தால் கால்கள் இன்றி பிறந்த பெண், பளு துாக்குதலில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ரஷ்ய நாட்டு உதவியுடன், உக்ரைனில் அமைக்கப்பட்ட, செர்னோபில் அணு உலை, 1986, ஏப்ரல் 26ல், பயங்கரமாக வெடித்தது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு, ரஷ்யாவில் இருந்து, ஐரோப்பா முழுதும் பரவியது. இந்த விபத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்; மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இன்று வரை கதிர்வீச்சின் தாக்கம் காணப்படுவதால், குழந்தைகள் ஊனமுடன் பிறக்கின்றன. செர்னோபில் விபத்து நடந்து நான்கு ஆண்டு களுக்கு பின், பெலாரசில் பிறந்தவர் தாத்சியானா ஜிவாத்ஸ்கோ. பிறக்கும்போதே, கைகளில் மூன்று விரல்களுடன் பிறந்ததால், அவரது பெற்றோர் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்றனர்.
ஆசிரமத்தில் இருந்து, தாத்சியானாவை ஒரு தம்பதி தத்தெடுத்து வளர்த்தது.சிறு வயதில், கால்கள் இல்லாததால், முழங்காலால் நகர்ந்து சென்ற தாத்சியானாவுக்கு, செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. பின், தன்னுடைய ஊனத்தை மறந்து, விளையாட்டில் கவனம் செலுத்தினார். துவக்கத்தில், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற இவர், பளு துாக்குவதிலும் சாம்பியனானார். தற்போது, 25 வயதாகும், தாத்சியானா, பளு துாக்கும் போட்டியில் வெற்றி பெற்று பட்டம் பெற்றுள்ளார். இந்த சாதனையால், தாத்சியானா உலகம் முழுதும் பிரபலமடைந்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE