Uratha sindhanai | தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?| Dinamalar

தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?

Updated : அக் 18, 2015 | Added : அக் 18, 2015 | கருத்துகள் (30)
தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?

மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

இளமை காலத்தில் மாணவர்கள் அதிகப்படியான நேரத்தை பள்ளியில் தான் செலவிடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்று விடுவதாலும், தனிக்குடும்பங்களாக வாழ்வதாலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களுக்கே அதிகம் உள்ளது.ஆனால், இன்றைய மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்; யாரும் தங்களை உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது என, நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள், 'தற்கொலை' என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆசிரியர்கள் தான். இன்றைக்கு ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், அதே நேரத்தில் கல்வி அதிகாரிகளின், 100 சதவீத தேர்ச்சி என்ற நிலையை எட்டியாக வேண்டிய கட்டாயம் என, இருதலைக் கொள்ளி எறும்புகளாக ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால், 'சிறைத் தண்டனை' என ஒரு செய்தி வந்தாலும் வந்தது, ஆசிரியர்களின் மரியாதை அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இச்செய்தியைப் பார்த்த, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, 'இனிமே எங்க மேலே கை வைக்க முடியாது' என பேசிக் கொண்டனர் என்பதே இதற்கு சாட்சி.மாணவர்களை அடிக்கக் கூடாது என நினைப்பது தவறில்லை. ஆனால், அதை ஏன் ஊடகங்களில் வெளியிட்டு மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்? ஆசிரியர்களுக்கு மட்டும் சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுக்கலாமே. அவ்வாறு செய்யாததன் விளைவு பொய்யான புகார்கள், பாலியல் தொந்தரவு உள்ளிட்டவை, மிரட்டல்கள், தற்கொலை முயற்சிகள்.சமீபத்தில், மதுரையில் உள்ள கிராமப் புற நடுநிலைப் பள்ளி மாணவியர் சிலர், பேன் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். காரணம் கேட்டால், தலைமை ஆசிரியர் திட்டியதால் என்கின்றனர். இதனால் அந்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

மற்றொரு மாவட்டத்தில், மாணவரை ஆசிரியர் அடித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. திட்டினாலும், அடித்தாலும் ஆசிரியர்களுக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கினால், மாணவர்கள் திருந்துவது எப்போது? மாணவரை திருத்துவது யார்?அந்தக் காலத்தில் நாம் ஆசிரியர்களிடம் அடிவாங்கவில்லையா? அப்படியே அடி வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து சொன்னால், நம்மிடம் பெற்றோர் கேட்கும் முதல் கேள்வி, 'நீ என்ன செஞ்ச?' என்பதாகத் தானே இருக்கும். நம்மை நல்வழிப்படுத்த பெரியோர் கொடுக்கும் சில தண்டனைகள் எப்படி குற்றமாகும்? சின்னஞ்சிறுவராய் இருக்கும்போதே திருத்தினால் தானே உண்டு. 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பர். அப்படிப்பட்ட சூழலில் ஆசிரியர்களின் திட்டுதல் மற்றும் அடித்தல் என்பது பழி வாங்கும் நோக்கில் செய்யப்படும் தண்டனை அல்ல என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையே ஏன் இந்த பிளவு என்பதை சற்று ஆராய்ந்தால் சில உண்மைகள் புலப்படும்.ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேக்கம் அளிக்காமல், தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ளது.

முன்பு கல்வியில் அடிப்படை திறன்கள் மாணவர்களுக்கு தெரியவில்லை என்றால், ஆரம்ப வகுப்புகளிலேயே வடிகட்டி தேர்ச்சி அளிப்பர். பெயிலாக்கி மீண்டும் படிக்க வைப்பர். அதனால், பெரியவர்களாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது, பாடப்பகுதிகளை புரிந்து கொள்ளும் திறனை பெறுவர். இதனால், ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் பணி சிரமம்
இல்லாமல் இருந்தது.

ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக உள்ளது. 8ம் வகுப்பு வரை மாணவன் பள்ளிக்கு வருகிறானா, இல்லையா... படிப்பானா, இல்லையோ... 'பாஸ்' என்ற நிலை வந்தது விட்டது. அதனால், மாணவனுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவனுக்கும், பெற்றோருக்கும் கல்வியின் மேல் சிரத்தை இல்லாமல் போய் விட்டது. அதனால், அம்மாணவன் படிப்பை தவிர, மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்கள் உயர் வகுப்புகளுக்கு செல்லும்போதும், 10ம் வகுப்பில் பொதுத் தேர்வை சந்திக்கும்போதும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எட்டு ஆண்டுகள் வரை படிப்பில் கவனம் செலுத்தாமல், 'பாஸ்' செய்து கொண்டே வந்தவன், கடைசியில் இரண்டு ஆண்டுகளில் வெற்றிக் கோப்பையை எட்டுவதற்குள் விழி பிதுங்குகிறான். அவனை, 'பாஸ்' என்ற நிலைக்கு கொண்டு வர ஆசிரியர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

100 சதவீத தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை படிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். தேர்ச்சி காண்பிக்கவில்லை என்றால் வேறு பள்ளிகளுக்கு மாற்றம், விளக்கம் கொண்டுக்க வேண்டிய கட்டாயம் போன்ற பல இடர்பாடுகளை தலைமை ஆசிரியரும், பாட ஆசிரியர்களும் சந்திக்கின்றனர். இந்த முரண்பாட்டை கல்வித் துறை அதிகாரிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும், பெற்றோர் கொடுக்கும் அளவுக்கதிகமான சுதந்திரம், மாணவர்களை தவறான பாதைக்கு திசை திருப்பி விடுகிறது. இதனால் மாணவர்கள், 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என அலைகின்றனர். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறி விடுகின்றனர். போதை பழக்கம், தவறான சேர்க்கை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.எனவே, சமுதாயம் சிறந்தோங்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் கண்டிப்பு மிக மிக அவசியம் என்பதை கல்வித் துறையும், பெற்றோரும் உணர வேண்டும்.
sr.shanthi39@gmail.com
- எஸ்.ஆர்.சாந்தி -
சமூக ஆர்வலர்



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X