இரண்டாம் உலக மனிதர்கள்!| Dinamalar

இரண்டாம் உலக மனிதர்கள்!

Updated : அக் 19, 2015 | Added : அக் 19, 2015 | கருத்துகள் (7)
 இரண்டாம் உலக மனிதர்கள்!

இன்றைய சமூக சூழ்நிலையில், தனிமனித உணர்வை அலைபேசி ஆட்டிப் படைப்பது போன்று, எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் தனிமனிதனை இதுவரை ஆட்டிப் படைக்கவில்லை.
பொருளாதார சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த பின்லாந்து நாட்டை, பேரழிவில் இருந்து காப்பாற்றி தலைநிமிர வைத்த ஓர் அபூர்வமான கண்டுபிடிப்புதான் இந்த அலைபேசி. ஆனால் இன்று நம் நாட்டின் இளைய சமூகத்தினரிடம் 'இணையதள போதை' என்ற படுகுழியில் தள்ளி அவர்களது வாழ்க்கையை சுனாமியாக தாக்கிக் கொண்டிருக்கிறது.கார், ரயில், விமானம், தொலைபேசி, டேப் ரிக்கார்டர், தொலைக்காட்சி போன்ற ஒரு அறிவியல் கண்டுபிடிப்புதான் அலைபேசி. ஒரு நாட்டின் சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு இக்கண்டுபிடிப்புகள் மிகப்பெரும் பங்காற்றி உள்ளன. ஆனால் கட்டுக்கடங்கா அலைபேசி மோகம் நம்மை இன்று 'சைபர் உலகம்' என்ற இரண்டாம் உலகத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது.


உண்மையான தேடல் இல்லை :

அதிநவீன தகவல் தொழில்நுட்ப சாதனம் என பெருமையாக பேசப்படும் இணையதளம் வழியான 'பேஸ்புக், யூ டியூப், டுவிட்டர், ஸ்கைப், வாட்ஸ் ஆப்' போன்ற அமைப்புகளில் உண்மையிலேயே உருப்படியான தேடல்கள் நடக்கிறதா? இதன் மூலம் எந்த ஒரு இந்திய இளைஞனும் 'அறிவு ஜீவியாக' மாறியதற்கான சான்று இதுவரை இருக்கிறதா? இதற்கு மாறாக தனிமனிதனின் வக்ர எண்ணங்களை துாண்டக்கூடிய பலான விஷயங்கள், விஷமச்செய்திகள், படங்கள், அர்த்தமில்லாத ஜோக்குகள், ஜாதிய மத மற்றும் அரசியல் காழ்ப்புணர்வுகளைத் துாண்டக்கூடிய வதந்திகள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை பரப்பும் சாதனமாக, இது உருவாகி வருகிறது.
24 மணி நேரமும் இந்த அலைபேசி வைத்துக் கொண்டும், அதில் எதையாவது தேடிக்கொண்டும் நம் இளைஞர்கள் மனநோயாளியாக மாறி வருகிறார்கள்.இளைஞர்களிடம் மட்டுமே இருந்த இந்த 'அலைபேசி போதை' இன்று நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது. ஒருவரது அலைபேசி, இன்று ஒரு 'அந்தரங்க' பொருளாக மாறிவிட்டது. கணவனின் அலைபேசியை மனைவியோ, மனைவியின்அலைபேசியை கணவனோ,தந்தையின் அலைபேசியை குழந்தைகளோ உபயோகிக்க முடியாது. தப்பித்தவறி இந்த நிகழ்வுகள் நடந்தால் அக்குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது.


விந்தை நோய்கள்:

இத்தகைய சூழலில் இந்த 'அலைபேசி போதை' சைபர் போபியோ, நோமோ போபியோ, சைபர் குற்றங்கள், சைபர் திருமணங்கள், சைபர் விதவை போன்ற விந்தையான நோய்களையும், நிகழ்வுகளையும் உருவாக்கி உள்ளது.'சைபர் போபியோ' என்பது ஒரு விதமான பதட்டமான சூழ்நிலை. இந்நிலையில் ஒருவர், 'எமது அலைபேசி எப்பொழுதும் தொலைந்துவிடும்; அந்த அலைபேசியில் ஏதாவது ஒரு கெட்ட விஷயம், செய்தி வெளிவந்துவிடும்' என்ற பதட்டம் அவரை ஆட்டி வைக்கிறது. இந்த பதட்டம் தனி மனிதனுக்கு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகள், பெரிய வர்த்தக நிதி நிறுவனங்களுக்கும் உண்டு.'நோமோ போபியோ' என்பது ஒருவரால் ஒரு நிமிடம் கூட தன்னுடைய அலைபேசி இல்லாமல் இருக்க முடியாது. தாயின் விரல்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு குழந்தை எவ்வாறு துாங்குகிறதோ, அதே போன்று துாங்கும்போதும் கூட தங்களது அலைபேசியை கெட்டியாக பிடித்துக் கொண்டோ, அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்துக் கொண்டோ, துாங்குவார்கள்.

இரவு நேரங்களில் அடிக்கடி எழுந்து அலைபேசியினை பார்த்துக் கொள்வார்கள். அலைபேசி மணி அடிக்காவிட்டாலும், எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருப்பது போலவும், அதில் அடிக்கடி குறுந்தகவல்கள் வருவது போலவும் பிரமை இவர்களுக்கு உண்டு.அடிக்கடி தங்கள் அலைபேசி ஒழுங்காக இயங்குகிறதா, நெட்வொர்க் சரியாக உள்ளதா என்று தேவையில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதுவும் ஒருவகையான மனச்சிதைவுதான்.


இணையதளத்தில் குடும்பம்:

இணையதளம் மூலமாக புதிய உறவுகளைத் தேடி வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல் பல அருவருக்கத்தக்க விஷயங்களையும், பொய்களையும் சொல்லி, நெருங்கி பழகி தங்களது அந்தரங்களைப் பகிர்ந்து கொண்டு நேரிலே பார்க்காமல், திருமணம் செய்து கொள்வது 'சைபர் மேரேஜ்'.'சைபர் மேரேஜூக்கு' பின் இவர்கள் இணையதளத்திலேயே குடும்பம் நடத்துவது, சமையலறை, குளியலறை மற்றம் படுக்கையறை விஷயங்களை பகிர்ந்து கொள்வது, தனிக்குடித்தனம் நடத்துவது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இணையதளத்திலேயே விவாகரத்து பெற்று 'சைபர் விதவை' என்ற அந்தஸ்தை பெறுகின்றனர். இரண்டாம் உலகத்தில் இவை எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


ரயில் பயணங்களில்...:

ஒரு காலத்தில் ரயில் பயணங்கள் இனிமையாக இருக்கும். நீண்ட துார பயணங்கள் மனித உறவுகளை பல்வேறு வகைகளில் வளப்படுத்தியது உண்டு. புதிய உறவுகள், வியாபாரத் தொடர்புகள், நட்பு வட்டாரம்,சில நேரம் திருமணபந்தங்களை கூட ரயில் பயணங்கள் உருவாக்கி உள்ளன. இன்றைய சூழ்நிலையில் ரயில் பயணங்கள் ஆபத்தாகி வருகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு செயல்கள் ரயில் பயணங்களில் நடைபெறுகின்றன. ஏனென்றால், ரயில் பயணங்களில் யாரும், யாரிடமும் பேசுவது கிடையாது. ரயிலில் ஏறி உட்கார்ந்தவுடன் தங்களுடைய அலைபேசியில் உள்ள இரண்டாம் உலகத்தில் மூழ்கி விடுகின்றனர்.அண்மையில் பெண் அதிகாரி ஒருவர், ஓர் இரவு நேர ரயில் பயணத்தின்போது தாக்கப்பட்டு உடைமைகளை இழந்துள்ளார். இந்த நிகழ்வு நடந்தபொழுது, அந்த பெட்டியில் இருந்த அனைவருமே தங்களது காதுகளில் ஒயர்களை மாட்டிக்கொண்டு இரண்டாம் உலகத்தில் தங்களை மறந்துள்ளனர்; அப்படியே சிலர் துாங்கியுள்ளனர்.குடிப்பழக்கம் எவ்வாறு அடித்தட்டு மக்களின் வாழ்வை பாழாக்கியுள்ளதோ, அதே போன்று நன்கு படித்த நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களை இந்த 'போதை' சீரழித்துக் கொண்டிருக்கிறது.அலைபேசி போன்ற விஷயங்கள் ஒரு சாதாரண அறிவியல் சாதனமே அன்றி 'சகலரோக சஞ்சீவி நிவாரணி' அல்ல என்ற விழிப்புணர்வு மட்டும் தான் இந்த பேரழிவிலிருந்து நம்மைத் தடுக்க முடியும்.'அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி வாழ்க்கையின் அளவுகோலாக இருந்தால் எங்கும் எதிலும் நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் நிச்சயம் கிட்டும்.- டாக்டர். மு.கண்ணன்,முதல்வர், சரசுவதி நாராயணன் கல்லுாரி,மதுரை.
99427 12261

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X