மருந்தே உணவு அன்று! நஞ்சே உணவு இன்று!| Dinamalar

மருந்தே உணவு அன்று! நஞ்சே உணவு இன்று!

Updated : அக் 20, 2015 | Added : அக் 19, 2015 | கருத்துகள் (6)
 மருந்தே உணவு அன்று!  நஞ்சே உணவு இன்று!

ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருக்கும் உணவுகள் செயற்கையான கலப்படம் மூலமாக, நச்சுத்தன்மை அடைகின்றன. இயற்கையான காய்கறி, பழங்கள் கூட, அதிக விளைச்சலுக்காக பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்களை சேர்ப்பதால் வளரும் போதே ரசாயனத் தன்மையுடன் வளர்கின்றன.

கொள்ளை லாபம் விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள், நாம் தினசரி பயன்படுத்தும் பேஸ்ட் முதல் குழந்தைகள் உணவு வரை ரசாயனத்தை கலந்து விற்பனை செய்கின்றன.
சின்ன அளவில் இருந்த சாதாரண நோய்களை, ரசாயனத்தை பயன்படுத்தி ஆட்கொல்லி நோய்களாக வளர்த்துக் கொண்டிருக்கிறோம். மருந்தே உணவு என்று சொன்ன நம் முன்னோர்களுக்கு பதிலாக, இன்று நஞ்சே உணவு என்று சொல்லுமளவிற்கு ரசாயனக் கலப்பு,
உச்சத்தை அடைந்திருக்கிறது.


ரசாயனத்திற்கு கட்டுப்பாடு உண்டா :

ரசாயன நுாடுல்ஸ் முதல் பிளாஸ்டிக் அரிசி வரை உணவுக் கலப்படங்கள் இப்போது நுட்பமானவைகளாக மாறியுள்ளன. உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களுக்கு கட்டுப்பாடு ஏதாவது உண்டா? அப்படி அனுமதி பெற்று கலக்கப்படும் ரசாயனங்கள் பரிசோதிக்கப்பட்டவைதானா. 'பிரிசர்வேடிவ்' என்னும் பராமரிப்பு ரசாயனங்கள், 'நியூட்ரிலைசர்' என்னும் சமன்படுத்திகள், செயற்கை மணம், சுவை கூட்டும் ரசாயனங்கள், நிறம் மாற்றிகள்... இப்படி எண்ணற்ற ரசாயனங்கள் உணவு தயாரிப்பில் பயன்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப் பட்ட ரசாயனங்கள், நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.நேரடியான ரசாயனங்களை மருந்துகளாக கையாள்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. உடலுக்குள் செல்லும் ஒவ்வொரு பொருளையும் தீவிரமாக ஆய்வு செய்து அதன் தன்மை கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் அவை சந்தைக்கு வரவேண்டும்.


பரிசோதிப்பது எப்படி :

மருந்து தன்மையுள்ள பொருளை முதலில் கண்டுபிடித்து, அதன் வேதியியல் கலவையைப் பிரித்தெடுப்பார்கள். மருத்துவ குணமுள்ள வேதிப்பொருளை மட்டும் அடையாளம் கண்டு, அதன் தன்மை குறித்த ஆய்வுகள் துவங்குகின்றன. இப்படி பிரித்தெடுக்கப்பட்ட வேதிப்பொருளை நச்சுத் தன்மை கண்டறியும் மூன்று கட்ட சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். முதலில் ஆய்வுக்கூடத்தில் எலிகளுக்கு வாய் வழியாக வேதிப் பொருள் கொடுக்கப்பட்டு, நான்கு மணி நேர பரிசோதனை செய்யப் படுகிறது. இது உடனடிப் பரிசோதனை. பின், குறுகிய கால பரிசோதனையாக, எலிகளுக்கு 28 நாட்கள் வேதிப்பொருட்கள் கொடுக்கப்படும். மூன்றாவது
கட்டமாக, மூன்று மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எலிகளுக்கு மருந்து கொடுக்கப் பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. எலிகள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு அளவுகளில் வேதிப்பொருள் கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எலிகளின் உள்ளுறுப்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன.இந்த விலங்குகளின் ஆய்வுகள் வழியாக வேதிப்பொருளின் அளவை நிர்ணயிக்கிறார்கள். எந்த அளவு வேதிப்பொருள் விலங்குகளால் பாதிப்பின்றி செரிக்க முடியும் என்பது கண்டறியப்பட்டு, இறுதியில் மனித வழி ஆய்வுகள் துவங்குகின்றன. மேற்கண்ட வழிகளில் விலங்கு வழி ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, ஒரு வேதிப்பொருளிற்கு சுமார் 920 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.


ஒன்பது மாத ஆய்வு :

முதல்கட்ட மனித வழி ஆய்வில் குறைந்த அளவு வேதிப்பொருளை 20 முதல் நுாறு வரை, தேர்வு செய்யப்பட்ட ஆரோக்கியமான மனிதர்களிடம் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. ஒன்பது மாதங்கள் வரை இந்த ஆய்வு தொடர்கிறது. இரண்டாம் கட்டத்தில் குறிப்பிட்ட நோயாளிகளை தேர்வு செய்து, 100 முதல் 500 நோயாளிகளுக்கு வேதிப்பொருள் கொடுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் வரை மருந்தின் அளவை நிர்ணயிக்கும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் தொடரும். அப்புறம் நான்கு ஆண்டுகளில் 500 முதல் 5000 நோயாளிகள் பயன்படுத்தப்பட்டு வேதிப்பொருளின் செயல் தன்மை கண்டறியப்படுகிறது. எந்த நிறுவனம் இந்த ஆய்வுகளை மேற்கொண்டதோ, அந்நிறுவனத்தின் பெயரில் மருந்துக்கான உரிமை கிடைக்கிறது.இப்படி சந்தைக்கு வரும் மருந்துகள், டாக்டர்கள் வழியாக நோயாளிகளுக்கு கொடுக்கப்படுவது நான்காவது கட்ட ஆய்வு. ஒரு மூலப்பொருளில் இருந்து மருந்தாக மாறி, சந்தைக்கு வருவதற்கு எட்டு முதல் 16 ஆண்டுகள் வரை ஆகும். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒரு மருந்து உருவாகிறது. விலங்கு நன்னடத்தைக் குழு, மருந்து கட்டுப்பாட்டுத் துறை, சந்தைப்படுத்தும் நாடுகளின் துறைகள், ஆணையங்கள் போன்ற அமைப்புகளிடம், ஒவ்வொரு ஆய்வு கட்டத்திலும் அனுமதி பெற வேண்டும்.இவ்வளவு பொருட்செலவு, ஆய்வு, நுாற்றுக்கணக்கான விலங்குகள், மனிதர்களின் உயிர்ப் பலியையும் கடந்து சந்தைக்கு வருகிறது. ஆனால் அதன் பின்னும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. பக்க விளைவுகள் மனித உயிர்களைப் பாதிக்கும் போது, மருந்துகளை தடை செய்வதும் நடக்கிறது.


ஆய்வு இல்லாமல் :

இந்த வகைப் பரிசோதனைகள் ஏதாவது உணவிற்கு உண்டா? அது உணவு என்ற தலைப்பில் வருவதாலேயே அதில் கலக்கப்படும் வேதிப்பொருட்களைப் பற்றி கேள்விகள் எழுவதில்லை.
ஒரு வேதிப்பொருளை மருந்து என்ற பெயரில் விற்க வேண்டுமானால் 8 முதல் 16 ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் உணவு என்றால் இதுபோன்ற ஆய்வுகள் செய்யாமலேயே, ஒரு வாரத்தில் சந்தைப்படுத்த முடியும்.டப்பாவில் அடைத்து விற்கப்படும் எல்லா உணவுகளும் கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பின்பு தான் கடைகளுக்கு வர வேண்டும். வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும் உணவுகளும் பரிசோதிக்கப்பட வேண்டும். இதை கடைபிடித்தால், 'உணவே மருந்து என்கிற, நம் முன்னோர்களின் வாக்கைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், 'மருந்தற்ற உணவு' என்ற எளிய இலக்கை அடைய முடியும்.நம் சமையலறையை நஞ்சற்ற உணவின் மூலம் சரிசெய்தாலே, மருத்துவமனை செலவுகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியம் என்பது நம் உணவில் இருந்துதானே துவங்குகிறது.
- அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்,
-முதல்வர்,
கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர்,
கம்பம்.
healerumar@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X