தலைவர்களை காவு வாங்கும் காங்கிரஸ் தலைமை

Added : நவ 30, 2010 | கருத்துகள் (4)
Share
Advertisement
- ஆர்.ரங்கராஜ் பாண்டே - தனது குடும்பத்தைத் தாண்டி யாரும், தலைமைப் பதவிக்குப் பேசப்படவே கூடாது என்பது, காங்கிரஸ் பெருந்தலைவர் இந்திராவின் "பாலிசி.' அதற்காகவே, மாநிலங்களில் முளைத்த குட்டிக் குட்டித் தலைவர்களைக் கூட தலையெடுக்க விடாமல் தடுத்தார். கேரளாவில் கருணாகரன் அதற்கு ஓர் உதாரணம். "தான் விரும்பியது தான் நடக்க வேண்டும்; அதனால் கட்சியே கலகலத்தாலும் சரி' என்பது

- ஆர்.ரங்கராஜ் பாண்டே - தனது குடும்பத்தைத் தாண்டி யாரும், தலைமைப் பதவிக்குப் பேசப்படவே கூடாது என்பது, காங்கிரஸ் பெருந்தலைவர் இந்திராவின் "பாலிசி.' அதற்காகவே, மாநிலங்களில் முளைத்த குட்டிக் குட்டித் தலைவர்களைக் கூட தலையெடுக்க விடாமல் தடுத்தார். கேரளாவில் கருணாகரன் அதற்கு ஓர் உதாரணம்.



"தான் விரும்பியது தான் நடக்க வேண்டும்; அதனால் கட்சியே கலகலத்தாலும் சரி' என்பது அவரது கொள்கை. காங்கிரசின் தேசியத் தலைவராக இருந்த காமராஜ், ஜனாதிபதி பதவிக்கு நீலம் சஞ்சீவ ரெட்டியை முன்னிறுத்த, வி.வி.கிரியை மறைமுகமாக ஆதரித்த இந்திரா, "எம்.பி.,க்கள் எல்லாரும் "மனசாட்சிப்படி' ஓட்டளிக்க வேண்டும்' என, மனசாட்சியே இல்லாமல் காங்கிரசுக்குத் துரோகம் செய்தார்.அந்தப் பாரம்பரியம் தான் காங்கிரசில் இன்னும் தொடர்கிறது. அன்னை இந்திராவின் இடத்தைப் பிடிக்கிறாரோ இல்லையோ, அவரது குணத்தை அழுத்தமாகப் பிடித்துவிட்டார், அவரது அருமை மருமகள் சோனியா. அதற்கான சாட்சி தான், சரத் பவார், பிரணாப் முகர்ஜி போன்ற செல்வாக்கான தலைவர்களைப் புறந்தள்ளிவிட்டு, சீதாராம் கேசரி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் போன்ற, தனிப்பட்ட செல்வாக்கில்லாதவர்களின் நியமனம். இதன் தொடர்ச்சி தான், ஜெகன் மோகன் ரெட்டியின் ராஜினாமா.


ஆந்திராவின் வலுவான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்தவர் யெதுகிரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி. சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியை வீழ்த்தி, 2004ம் ஆண்டு ஆந்திராவில் மீண்டும் காங்கிரசின் ஆட்சியை அமைத்தவர். 22 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் காங்கிரசுக்கு மறுவாழ்வு கொடுத்த தேர்தல் அது.

வெற்றியும் சாதாரணமானது அல்ல. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 185 இடங்களைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. அதற்கு, ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரை ஒரு பெருங்காரணமாக இருந்தது என்பதை, யாரும் மறுக்க முடியாது. அதோடு நிற்காமல், 2009 சட்டசபை தேர்தலில் வென்று, இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். மத்தியில் தற்போது அமைந்துள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, சொந்தக் கட்சியில் இருந்து 33 எம்.பி.,க்களை அனுப்பிய பெருமை ராஜசேகர ரெட்டியைச் சேரும்.


ஒய்.எஸ்.ஆர்., இறந்தபோது, அவரது வீட்டுக்கு நேரில் சென்று, கேலன் கேலனாக கண்ணீரை உதிர்த்தவர் சோனியா. அடுத்த நாளே, அவரையும், அவரது குடும்பத்தையும் அடியோடு மறந்து, ரோசய்யாவை முதல்வராக்கினார்.தந்தை இறந்த பிறகு, தனயன் தான் அடுத்த தலைவராக வேண்டும் என ஸ்தாபிப்பதல்ல என் விருப்பம். விசுவாசமானவர்களுக்கும் துரோகம் செய்யத் தயங்காதவர் சோனியா என்பதையும், மாநில அளவில் கூட தலைவர்கள் உருவாவதை ஜீரணிக்க முடியாதவர் என்பதையும் நிரூபிப்பதே என் நோக்கம்.

ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்கியிருந்தால், ஒய்.எஸ்.ஆருக்கு மாநிலம் முழுக்க உருவாகியிருந்த செல்வாக்கின் அடிப்படையிலும், அவரது துர்மரணம் ஏற்படுத்தியிருந்த சோகத்தின் காரணமாகவும், எந்தவிதமான எதிர்ப்பும் இருந்திருக்காது. ஆனால், சோனியா அப்படிச் செய்யவில்லை.


"ஜெகனுக்கு அந்த அளவு வயதும், பக்குவமும் வரவில்லை' எனக் கருதியிருந்தால், அவரை முதல்வராக்கியிருக்க வேண்டாம்; உள்துறை, நிதி, அது இது என ஏதாவது ஒரு முக்கியமான துறையைக் கொடுத்து, குறைந்தபட்சம் ஒரு மந்திரியாக்கி இருக்கலாம். சோனியா அதைச் செய்யவில்லை."ஒய்.எஸ்.ஆர்., ஒன்றும் உத்தமரில்லை; அவர் ஊழல்வாதி; காங்கிரஸ் கட்சி ஓர் அப்பழுக்கற்ற அரசாட்சி கொடுக்க விரும்புகிறது' எனக் கருதியிருந்தால், பதவியில் இருந்தபோதே அவரை வெளியேற்றியிருக்கலாம். அதையும் சோனியா செய்யவில்லை. "ரெட்டி என்ற பெரிய சமுதாயத்தின் செல்வாக்கால் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. கட்சியின் கொள்கைகளால் தான் முதலிடம் பிடித்தது. அதை நிரூபிப்பதற்காகத் தான் ரோசய்யாவை முதல்வராக்கினேன்' என்பது அவரது கூற்றாக இருந்தால், மீண்டும் இன்று கிரண் ரெட்டியை கொண்டு வந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், சோனியா அதைத் தான் செய்தார்.


கட்சியோ கவர்ன்மென்ட்டோ, ஆங்காங்கே குட்டித் தலைவர்கள் இருந்தால், நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என்பது நடைமுறை உண்மை. ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தனி மனித செல்வாக்கு தலையெடுக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் சோனியா. இது, அவருக்கு மட்டுமல்ல; கட்சிக்கே கேடு என்பது போகப் போகத் தெரியும். இன்று இருக்கும் நிலைமைக்கு ஜெகன் மோகனால் காங்கிரசுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட முடியாது. ஆனால், மெஜாரிட்டி அரசாக இருந்த காங்கிரஸ் ஆட்சி, மைனாரிட்டி ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை, காங்கிரசை எதிர்த்தே தன் கட்சியை வளர்த்த சிரஞ்சீவியை வைத்து முட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமைக்கு, கட்சித் தலைமை தள்ளப்பட்டுள்ளது.ஆந்திராவில் காங்கிரசின் வீழ்ச்சிக்கும், சந்திரபாபு நாயுடுவின் எழுச்சிக்கும் இந்த நிகழ்ச்சி வித்திடும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அதை சோனியா உணர்வதற்குள், அம்மாநிலத்தில் ஆட்சி போயிருக்கும்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dennis - kuwait,குவைத்
07-டிச-201014:42:41 IST Report Abuse
Dennis அரசியல் ஒன்றும் அரசாங்க பதவியல்ல. அப்பன் மரணத்க்குப் பின் மகன் பொறுப்பேற்க. இனியாவது குடும்பம் ஆள்வதை விடுத்து திரமையானவர்ஹள் ஆளட்டும் நம்மை
Rate this:
Cancel
சிவா - தூத்துக்குடி,இந்தியா
02-டிச-201016:23:17 IST Report Abuse
சிவா ஜெயா வை பின்பற்றுகிறார் போலும்
Rate this:
Cancel
Radhakrishnan - Melbourne,ஆஸ்திரேலியா
02-டிச-201007:22:21 IST Report Abuse
Radhakrishnan நல்ல கட்டுரை. சோனியாவின் அருமை மகன் ராகுல் குறிப்பாக பழங்குடியினருடன் சோறு சாப்பிடுவது, பேருந்தில் பயணிப்பது, இத்யாதி கூத்துக்களை அடித்தார் பீகார் தேர்தலில், .....அந்தோ பரிதாபம் மக்கள் வைத்தார்கள் ஆப்பு............ஆந்திராவை பொறுத்த மட்டில் பாண்டேவின் ஆய்வை பாராட்டுகிறேன். இன்னும் சொல்ல போனால் சோனியா இந்தியாவை அழிப்பதற்கே பிறந்த ஒரு பெண்மணி. அதை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X