சுய தொழில் செய்யலாம்... இளைஞர்களே!| Dinamalar

சுய தொழில் செய்யலாம்... இளைஞர்களே!

Added : அக் 21, 2015 | கருத்துகள் (7)
 சுய தொழில் செய்யலாம்... இளைஞர்களே!


அரசுப் பணிக்காக போட்டித் தேர்வு அறிவிக்கப்படும் போதெல்லாம், பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஒரு காலிப்பணியிடத்திற்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவார்கள். பல லட்சம் பேர் எழுதும் போட்டித் தேர்வில், சில ஆயிரம் பேர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அப்படியென்றால் போட்டித் தேர்வில் தேர்வு செய்யப்படாதவர்கள் எல்லாம் ஜெயிக்க முடியாதவர்களா?
சமூகத்தின் பார்வை அப்படித்தான் இருக்கிறது. உண்மை அதுவல்ல. போட்டித் தேர்வில் புத்திசாலிகள் வெற்றி பெறுகிறார்கள். அதி புத்திசாலிகள் தாங்களாகவே ஒரு தொழில் தொடங்கி முதலாளி ஆகிவிடுகிறார்கள். இவர்கள் பல பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறார்கள். மேல் நாட்டு பழமொழி ஒன்று உண்டு.
“வாழ்க்கையில் லட்சிய வாதிகள்தான் தலைமை தாங்குகிறார்கள், மற்றவர்கள் அவர்களிடம் வேலை செய்கிறார்கள் ”
வாய்ப்புகள் ஏராளம் பத்தாயிரம் ரூபாய்க்குத் தொடங்கும் ஊறுகாய் தயாரிக்கும் தொழில் தொடங்கி பத்து லட்சம் ரூபாய்க்கு நீங்கள் தொடங்கும் தொழிற்சாலை வரை வங்கி கடனுதவி பெறலாம்.
தொழில் கல்வி படித்து படிப்புக்கேற்ற தொழில் செய்ய கடன் உதவி கேட்கும் போது அதற்கு கூடுதல் முன்னுரிமை கிடைக்கும். மற்றபடி எந்தப்படிப்பு படித்தாலும், எந்தத் தொழில் செய்யவும் வங்கிகளை உதவிகேட்டு அணுகலாம். மாவட்ட தொழில் மையம் ( டிக் ) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தை அணுகி தொழிற்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை அறியலாம். முதலில் உங்களுக்குத் தொழிலில் உள்ள ஆர்வம், அந்தத் தொழில் பற்றிய முன் அனுபவம் (ஏதேனும் இருந்தால்), தொழில் செய்து லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் தெரிந்து கொள்வார்கள். அதன் பிறகு உங்களுக்கு கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும்.
உண்மையில் உங்களுக்கு தொழில் கடன் வழங்குவதற்காக பல வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு முன் வருவார்கள். அது எப்போது நடக்கும் என்றால், அவர்களுடைய நேர்முகத் தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தொழிலில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள், உங்களின் உற்பத்திப் பொருளை சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள், லாபம் ஈட்டி கடன் அடைப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவை பற்றிய செயல்திட்டத்தை எழுத்துப் பூர்வமாக நீங்கள் நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டிவரும்.
ஆகவே செய்யப்போகும் தொழில் பற்றிய தொலைநோக்குப் பார்வை, லாபம் ஈட்டும் உத்திகள், உத்தேச வரவு செலவு ஆகியவைப்பற்றி தெளிவாக தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப் படையில்தான் உங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து வங்கிகள் முடிவு செய்யும்.
பொதுவாக தேவைப்படும் முதலீட்டில் 10 முதல் 15 சதவீதம் வரை உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். அதுபோலவே நீங்கள் பெறுகின்ற கடனில் 10 முதல் 15 சதவீதம் வரை அரசு கடன்
தள்ளுபடி வழங்கும். உங்கள் தொழில் நேர்த்தி, நேர்மையைப் பொறுத்து தொழிலை விரிவுபடுத்த தொடர்ந்து அதே வங்கியில் மேற்கடன்களைப் பெறலாம்.
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக மத்திய அரசு திட்டம் கொண்டு வந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்பும் இளைஞர்கள், மாவட்டத் தொழில் மையத்தை அணுகி சில எளிய முறைகள் மூலம் கடன் பெறலாம். வியாபாரம் செய்வதற்கும் கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற முடியும். கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்க மூன்று லட்சம் வரை கடன் பெற முடியும்.
தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு கடன் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்குகளில் படித்து முடித்தவர்கள் தொழில் செய்ய விரும்பினால், அவர்களுக்கு அதிகபட்ச கடன் உதவி அளிக்க தமிழக அரசு திட்டம் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாகவே ஐந்து லட்ச ரூபாய் கடன் உதவி பெற முடியும். இணையதளங்கள் மூலமாகவே இத்திட்ட விவரங்களை எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
கடன் உதவி பற்றி எளிமையாகச் சொல்லிவிட்டாலும், நடைமுறையில் விண்ணப்பதாரர்கள் எளிதாக கடன் பெற்றுவிட முடியாது. ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்குவதற்கு கூட, நீங்கள் பலமுறை அலைய வேண்டியது இருக்கும். அவர்களுக்கு தேவைப்படும் ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டித் தருவதற்கு
உங்களுக்கு பல நாட்கள் ஆகலாம். இந்தச் சிக்கல்களும், சிரமங்களும் உங்களுக்கு ஒரு முறைதான். கடன்பெற்று லாபகரமாக தொழில் செய்து அதை நீங்கள் திருப்பிச் செலுத்திவிட்டால் போதும்;அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறந்துவிடும். பிறகு கதவைத் தட்டி கடன் தருவார்கள்.
அரசு நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு சலிக்காமல், மனம் தளராமல் இளைஞர்கள் கடன் பெற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும். கடன் பெறும் போது இருக்கும் ஆர்வத்தையும், மன உறுதியையும் தொடர்ந்து தொழிலிலும் காட்ட வேண்டும். நாடு வளர்ச்சி அடையும் எத்தொழிலும் தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை, தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு முறையாக பயிற்சி தர சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தயாராக இருக்கிறது. கடன் பெறுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, கடன் வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன், தேவையான பயிற்சிகளை மேம்பாட்டு மையம் வழங்கும்.
கடன் பெற்று தொழில் தொடங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ள பயிற்சி இது. படிப்புக்கேற்ற அரசு வேலை கிடைக்கவில்லை என்று விரக்தி அடையாமல், சுய தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பளித்தால் நாடு வளர்ச்சி அடையும்.தொழில்கள் மூலமாகவே நாட்டின் வருமானத்தை அதிகரித்து பொருளாதார வளர்ச்சி பெற்றிட முடியும். பொருளாதார வளர்ச்சி ஆட்சியாளர்கள் கையில் மட்டுமல்ல; அது ஒவ்வொரு இளைஞர்கள் கையிலும் இருக்கிறது. எனவே சுய தொழிலில் ஈடுபட்டு முன்னேற இளைஞர்கள் முன்வர வேண்டும்.-ஆதலையூர் சூரியகுமார்எழுத்தாளர், மதுரை98654 02603We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X