கோடநாட்டுல அம்மா... கோவையில வதந்தி பரவுது சும்மா!| Dinamalar

கோடநாட்டுல அம்மா... கோவையில வதந்தி பரவுது சும்மா!

Added : அக் 23, 2015
Share
சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் வரும் தோழியை வரவேற்க, கோவை விமான நிலைய வளாகத்தில் சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர்.''போன வாரம், கொச்சின் ஏர்போர்ட் போயிருந்தேன்க்கா. அங்கயிருந்து, எல்லா நாட்டுக்கும் 'டைரக்ட் ஃப்ளைட்' அல்லது 'கனெக்ஷன் ஃப்ளைட்' இருக்கு. இங்கயிருந்து துபாய்க்கே போக முடியாது. இதுல இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ன்னு பெருசா பேரு'' என்று
கோடநாட்டுல அம்மா... கோவையில வதந்தி பரவுது சும்மா!

சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் வரும் தோழியை வரவேற்க, கோவை விமான நிலைய வளாகத்தில் சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர்.
''போன வாரம், கொச்சின் ஏர்போர்ட் போயிருந்தேன்க்கா. அங்கயிருந்து, எல்லா நாட்டுக்கும் 'டைரக்ட் ஃப்ளைட்' அல்லது 'கனெக்ஷன் ஃப்ளைட்' இருக்கு. இங்கயிருந்து துபாய்க்கே போக முடியாது. இதுல இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ன்னு பெருசா பேரு'' என்று வெறுப்பாய்ப் பேசினாள் மித்ரா.
''டிஎம்கே பீரியட்ல, ஜி.ஓ., போட்டது. இன்னிக்கி வரைக்கும், நிலம் கையகப்படுத்தித் தரலை. அப்புறம் எப்பிடி 'எக்ஸ்டன்ட்' பண்றது. சாகப்போறப்ப சங்கரா சங்கராங்கிறது மாதிரி, 'லேண்ட் அக்யூசேஷன்' வேலைகளை, இப்போ 'ஸ்பீட்' பண்றாங்களாம்'' என்றாள் சித்ரா.
''பத்துத் தொகுதியையும் மொத்தமா அள்ளுனதுக்கு, எத்தனை வேலைய இங்க செஞ்சிருக்கணும். ஒருத்தரை ஒருத்தர் போட்டுக் கொடுத்து, பதவியைக் காலி பண்றதுலயே காலம் ஓடிருச்சு'' என்றாள் மித்ரா.
''ஆளும்கட்சி உள்ளடியைப் பத்திச் சொல்றியா...கோடநாடுக்கு ஹெலிகாப்டர்ல போன 'அம்மா'வை வரவேற்க, கவர்மென்ட், தனியார்னு ஒரு சுவரு விடாம விளம்பரம் பண்ணாங்களே. அதுல நடந்த உரசல் பத்தி, சி.எம்., காதுக்கே தகவல் போயிருச்சாம். சீனியர்ஸ் மூலமா, சிலரை 'வார்ன்' பண்ணதா தகவல்'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை. ஆனா, அவுங்க கோடநாடு வந்ததுலயிருந்து, திடீர் திடீர்னு, புதுசு புதுசா வதந்தி கிளம்பிட்டே இருக்கு. 'அவரு பதவியைப் பறிச்சிட்டாங்க', 'அவருக்கு துறைய மாத்திட்டாங்க', 'அவரை வாசல்ல நிக்கக்கூடாதுன்னு துரத்தி விட்டுட்டாங்க'ன்னு.. ச்சும்மா அண்ணாமலை சைக்கிளாட்டம் வதந்தி, ரெக்கை கட்டிப்பறக்குது''
''ஆமா மித்து! கோடநாடு போக கோயம்புத்தூர் ஏர்போர்ட்டுக்கு வந்த அம்மாவுக்கு அமைச்சர்க எல்லாம் 'பொக்கே' யும், மத்தவுங்க, சால்வையும் கொடுத்திருக்காங்க. அப்போ, பழைய 'டவுன்டாடி' கொடுத்த சால்வையையும் வாங்கிக்கிட்டதா, அவுங்க ஆளுங்க, ஆனந்தக் கூத்தாடுறாங்க''
''இதுல சந்தோஷப்படுறதுக்கு என்ன இருக்கு? ஆளும்கட்சியில, கட்சிப்பதவியும் இப்போ 'மியூசிக் சேர்' மாதிரி ஆயிருச்சு. நாலு வருஷத்துல நாலு 'மாவட்டம்' மாறிட்டாங்க. இப்போ, இதயதெய்வம் மாளிகைக்குப் போனா, ஏதோ தெலுங்கு தேசம் கட்சி ஆபீசுக்குப் போன மாதிரி, சுந்தரத்தெலுங்கு தான் சூப்பரா கேக்குது'' என்றாள் மித்ரா.
''அங்க... பதவியேற்பு விழாவுக்குப் போன மகளிரணிக்காரங்களைக் கண்டுக்கவே இல்லைன்னு அக்காக்கள் எல்லாம் பக்காவா புலம்புறாங்க'' என்றாள் சித்ரா.
''ஆளும்கட்சியில எப்பிடி அடிச்சிக்கிட்டாலும், தேர்தல் நேரத்துல தீயா வேலை பாத்துருவாங்க. ஆனா, 'எங்க கட்சியில ஸ்டாலின் மட்டும் தான் பாடுபடுறாரு, மாவட்டங்களெல்லாம் எதுக்கும் லாயக்கில்லை'ன்னு உடன் பிறப்புக, இப்பவே 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிட்டாங்க''
''மித்து...ஸ்டாலின் இங்கயிருக்கிற ஒரு கார் மியூசியத்துக்கு வந்துட்டுப் போன பிறகு, அந்த மேனேஜ்மென்ட் நடத்துன ஸ்கூலை கார்ப்பரேஷன் 'சீல்' வச்சிட்டாங்க தெரியுமா?''
''இல்லக்கா...ஏற்கனவே, போன மாசம் முப்பதாம் தேதியே, 'மாஸ்' செகரட்டரி, இதுக்கு ஆர்டர் போட்டாராம். ஆறாம் தேதியே, அந்த ஸ்கூலுக்கு நோட்டீஸ் போயிருச்சாம். அதுக்கு அப்புறம் தான ஸ்டாலின் வந்தாரு''
''ஏற்கனவே, அவர் அங்க வரப்போறது தெரிஞ்சே நோட்டீஸ் கொடுத்திருக்கலாம். ஏன்னா....அவரு வந்து போன பிறகு தான, நடவடிக்கை எடுத்திருக்காங்க''
''இதுவாவது பரவாயில்லை. அம்பது வருஷத்துக்கு முன்னாடியே குத்தகைக்கு விட்டது. 30 சென்ட் இடம் தான். கோவைப்புதூர்ல 'பார்க்'குக்கு ஒதுக்குன, கார்ப்பரேஷன் 'ரிசர்வ் சைட்'ல 40 சென்ட் இடத்தை அப்பட்டமா ஆக்கிரமிச்சு, ஏதோ ஒரு குடில் பேருல ஸ்கூல் நடத்துறாங்க. அதை எடுக்கிறதுக்கு மட்டும், கார்ப்பரேஷனுக்கு கவர்மென்ட் அனுமதி தரலையா?'' என்று கொதித்தாள் சித்ரா.
''அப்டின்னா, இதுல அரசியல் இருக்குன்னு சொல்றியாக்கா?'' என்று அப்பாவியாய்க் கேட்டாள் மித்ரா.
''எல்லாமே அரசியல் தான். நம்மூர்ல ஊழல்ல ஊறிப்போன யுனிவர்சிட்டிக்கு, புதுசா ஒருத்தரை எடுக்க கமிட்டி போட்ருக்காங்க. ஆனா, கண்ணியமான கல்வியாளரையா நியமிக்கப்போறாங்க...ஏதாவது, அரசியல் செல்வாக்கு இருக்கிற ஒருத்தருக்கு தான், பதவி கிடைக்கப்போகுது?'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...இப்போ மூணு கோடிக்கு பேரம் நடக்கிறதா தகவல்''
''என்ன மித்து...போன தடவையே, 101வது வார்டு கவுன்சிலருக்கு அஞ்சு கோடி ரூபா கொடுத்துதான் இந்த பதவிய வாங்குனாருன்னு அப்பவே பேசிக்கிட்டாங்க. நீ என்னடான்னா, இப்போ மூணு கோடிங்கிற...கணக்கு இடிக்குதே!''
''அதான்...அந்த பதவியோட மதிப்பையே, அவர் தரை மட்டமாக்கிட்டுப் போயிட்டாரே. அதனால, அதுக்கான லஞ்ச மதிப்பும் கொறைஞ்சிருக்கும்'' என்று சிரித்தாள் மித்ரா.
''ஆனா, அம்மாவே சொன்னாலும், 'லஞ்ச ரேட்'டை குறைக்க மாட்டேன்னு ஒரு ஆர்.டி.ஓ., சவால் விட்ருக்காராம் தெரியுமா...?'' என்றாள் சித்ரா.
''அவுங்க அமைச்சரையே தூக்குன பிறகும், ஆட்டம் தீரலையா...யாரந்த மாமனிதர்?'' என்றாள் மித்ரா.
''பேர்லயே பணம் வச்சிருக்கிற ஆர்.டி.ஓ., தான். ஆட்டோ டிரைவர்க ஆர்.சி.,புக்ல, பேரு, அட்ரஸ் மாத்துறதா இருந்தா, 110 ரூபா மட்டும் தான் வாங்குவாங்க. ஆனா, இவரு 550 ரூபா இல்லேன்னா கையெழுத்துப் போட மாட்டேன்னு 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லிட்டாராம்''
''இதையெல்லாம் கேக்க யூனியன்காரங்க வர மாட்டாங்களா?''
''விஷயத்தை முழுசாக்கேளு. ஆட்டோக்காரங்க எல்லாம், ஆளும்கட்சி வி.ஐ.பி.,ட்ட சொல்லப்போறதா சொல்லி இருக்காங்க. அதுக்கு தான், அவரு அந்த 'டயலாக்' விட்ருக்காரு''
''இவரு இப்பிடின்னா, ஊருக்கு நடுவுல இருக்கிற ஆர்.டி.ஓ., 'நான் ரொம்ம்ம்ப நல்லவன்'னு காமிக்கிறதுக்காக, கார்ப்பரேஷனுக்கு குப்பை அடிக்கிற டிப்பர் லாரியெல்லாம் எப்.சி., பண்ணலைன்னு பிடிச்சு வச்சிக்கிட்டாராம்''
''அது சரி...அரசு உபரி நிலத்தை, தனியார் நிலம்னு அத்தாட்சி கொடுத்த தாசில்தாரைப் பத்திப் பேசுனோமே. அதைப் பத்தி ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த, டி.ஆர்.ஓ., ஆர்டர் போட்ருக்காரு. விசாரிச்சப்போ, தாசில்தாரு, வி.ஏ.ஓ., ரெண்டு பேருமே, 'நான் பணம் வாங்கலை. அவரு தான் வாங்குனாரு'ன்னு மாத்தி மாத்திச் சொல்லிருக்காங்க. ஆர்.டி.ஓ.,மேடம், என்ன அறிக்கை தரப்போறாங்களோ? வர வர அரசு நிலங்களுக்கு பாதுகாப்பே இல்லாமப் போச்சு'''' என்றாள் சித்ரா.
''நீ பாதுகாப்புன்னு சொன்னதும், இந்துக்கட்சியில இருக்கிற மீசைக்காரருக்குக் கொடுத்திருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வாபஸ் வாங்குனது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு''என்றாள் மித்ரா.
''ஏன் மித்து...அவரே வேணாம்னுட்டாரா?''
''இல்ல...அவருக்கு 'த்ரெட்' இருக்குன்னு துப்பாக்கி ஏந்துன போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தாங்க. இவரோட 'பைக்'ல, பின்னாடி உட்கார்ந்து, அந்த போலீஸ் எப்பவும் கூடவே வருவாரு. தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறதைக் காமிக்கிறதுக்காக, காது குத்து, கல்யாணம் எல்லாத்துக்கும் கூப்பிட்டுப் போவாரு. கடைசியில, கடன்காரங்கள்ட்டயும் அவரைக் காமிச்சு மிரட்டிருக்காரு''
''என்ன சொல்லி மெரட்டுனாராம்?''
''நான் சொன்னா, அவரு உங்களை சுட்ருவாருன்னு சொல்லிருக்காரு. அந்த போலீஸ் தெறிச்சுப்போயி, கோவில்பாளையம் ஸ்டேஷன்ல புலம்பித்தீர்க்க, விஷயம் எஸ்.பி., காதுக்குப் போயி, பாதுகாப்பை வாபஸ் வாங்கிட்டாங்க''
''மித்து...போலீஸ் போட்ருக்கிற சிட்டி விஜிலென்ஸ் கமிட்டியில இருக்கிற சில பேரு, வண்டில வர்றவுங்கள்ட்ட ஆயிரம், ரெண்டாயிரம்னு செம்ம வசூலைப் போடுறாங்களாமே. நிஜமாவா?'' என்றாள் சித்ரா.
''உண்மைதான்க்கா...முன்ன, போலீஸ்க்கு பிரண்ட்ஸ்ங்கிற பேர்ல உதவி பண்றதா, 'என்ட்ரி' ஆன சிலர், இப்போ போலீஸ் ஆபீசர்களைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு, 'தில்'லா 'கட்டப்பஞ்சாயத்து' பண்ணிட்டு இருக்காங்க. இப்போ, போலீஸ்க்கு உதவி பண்றதுக்காக, இந்த கமிட்டி அமைச்சிருக்காங்க. ஆனா, சில போலீஸ்காரங்க, தங்களுக்குத் தெரிஞ்சவுங்களை அதுல சேத்து விட்டுட்டு, செக்போஸ்ட்கள்ல நிக்க வச்சு, வசூல் வேட்டையாடுறாங்க''என்றாள் மித்ரா.
''இவுங்களை எல்லாம் தூக்கி சாப்பிடுறாரு, கன்ஸ்யூமர்க்கு வாய்ஸ் கொடுக்குறதாச் சொல்ற ஒருத்தரு. அவர் டார்கெட், இ.பி., ஆபீசர்களும், ஆர்.டி.ஓ.,க்களும் தான். அவரு, எப்பிடியெல்லாம் மிரட்டி வசூல் பண்றாருன்னு விசாரிச்சதுல, 'லோகத்துல இப்பிடியும் நடக்குமோ'ன்னு, நானே மெரண்டுட்டேன். இப்போ, பல ஆபீசர்கள் சேர்ந்து, கலெக்டர்ட்ட பெரிய புகார் பட்டியல் கொடுத்திருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா! நம்ம கார்ப்பரேஷன்ல இருக்கிற லேடி ஆபீசர் ஒருத்தவுங்க, அவுங்க வீட்டுக்காரரு பேருல, புதுக்கோட்டையில புதுசா பெட்ரோல் பங்க் வாங்கிருக்காங்களாம்'' என அடுத்த மேட்டரை மித்ரா ஆரம்பிப்பதற்குள், 'சில்க் ஏர்வேய்ஸ்' வந்து விட்டதற்கான அறிவிப்பு வந்ததும், இருவரும் எழுந்து, வருகைப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X