"பிள்ளைகள் எல்லாம், "தாயை' தேடி ஓடோடி வருவாங்கனு நெனைச்சா, எதிர்பார்த்த கூட்டத்தையே காணோம்,'' என்றவாறே, ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவரை வரவேற்று, "டீ' கொடுத்த மித்ரா, ""எந்த தாய்? எந்த பிள்ளைகள்? என்ன கூட்டம்? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்,'' என்றாள்.
"டீ'யை அருந்திய சித்ரா, ""தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்துல வைர விழா நடந்துச்சுல்ல; நானும் போயிருந்தேன். எல்லா சங்கத்துக்கும் முன்தோன்றிய சங்கமாச்சே. ஊரே திரண்டு வரும்னு எதிர்பார்த்தேன். மத்திய அமைச்சர், தமிழக அமைச்சர்கள் வந்திருந்தாங்க. கட்டடம், சிலை திறப்பு நிகழ்ச்சி வரை, தொழில் துறையினர் நிறைய பேர் இருந்தாங்க. கூட்டம் நடந்தபோது, அரங்கத்துக்குள், 100 பேர்தாங்க இருந்தாங்க. விழாவுல முழுமையா இருந்து சிறப்பிக்க வேண்டிய தொழில்துறையினரோ, வந்தாச்சு; போயாச்சுங்கற கதையா தலையை காட்டிட்டு, "எஸ்கேப்' ஆயிட்டாங்க.
""வழக்கமா, ஒவ்வொரு அமைச்சரையும், தேடிப்போய் கோரிக்கைகளை கொடுப்பாங்க. ஆனா, அத்தனை அமைச்சர்கள் வந்தும், விழாவுல ஒரு கோரிக்கையையும் வைக்கலை. "சங்கத்துல இளைஞர்கள் எழுச்சி பெறாததே இதுக்கு காரணம்; தாயா புள்ளையா பழகுன பலருக்கும், அழைப்பிதழே கொடுக்கலை'னு பலரும் வருத்தப்பட்டதை கேட்க முடிஞ்சது,'' என, ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள், சித்ரா.
""என்னாச்சு, "சிட்டி மம்மி' ரொம்ப அமைதியா இருக்காங்க, செயல்வீரர் கூட்டத்திலும் பேச மாட்டேனு பிடிவாதம் பிடிச்சாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""கூட்டம் நடக்கறது சம்பந்தமா, சரியான தகவல் சொல்லலை. அவருக்கு முன்னாடி பேசினவங்க, பேரை சொல்லாம விட்டுட்டாங்கனு பேசிக்கிறாங்க. கடுப்பான அவர், பேச மறுத்துட்டாங்க. "பேசுங்க'னு நிர்வாகிகள் பிடிவாதமா "மைக்'கை கையில் திணித்ததும், "புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என, சுருக்கமா பேசிட்டு, ஒக்கார்ந்துட்டாங்க,'' என்று சித்ரா முடிப்பதற்குள், ""இப்படியே போனா, மோதல் போக்கு இன்னும் அதிகரிக்குமே,'' என, கவலைப்பட்டாள் மித்ரா.
""இன்னொரு விஷயமும் சொல்றேன் கேளு. "சைமா' வைர விழா நிகழ்ச்சியில் சிறப்பு மலர் வெளியிட்டாங்க. அதுக்கு, "சிட்டி மம்மி'யிடம் வாழ்த்து மடல் வாங்கியிருக்காங்க. மடலில், அவரது புகைப்படத்துக்கு பதிலா, ஈரோட்டுக்காரர் புகைப்படத்தை அச்சிட்டிருக்காங்க. இதிலும் சதி வேலை நடந்திருக்குமோன்னு விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. அதனால, அவர் விழாவுக்கே வரலை; விசாரிச்சா, சென்னையில் இருப்பதா, சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""காவல் துறை உயரதிகாரி, "அப்செட்' ஆயிட்டாராமே,'' என, மித்ரா கேட்க, ""அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, திருப்பூர் புறநகர் பகுதியை சேர்ந்த, சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட அனைத்து போலீசாரையும், ஓரிடத்துக்கு வரவழைச்சு, ரெண்டு மணி நேரம் புத்திமதி சொல்லியிருக்காங்க. எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடமளிக்கக்கூடாது; பணியை நேர்மையா செய்யணும்னு அறிவுரை சொன்னாங்க. அதுக்கு நேர்மாறா, சீட்டாட்ட கும்பலை விரட்டி விட்டுட்டு, லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி, பங்கிட்டுக் கொண்டதில், மூன்று போலீஸ்காரங்களுக்கு தொடர்பு இருந்ததை கேள்விப்பட்டதும், ஆடிப்போயிட்டாங்க. முழுமையா விசாரிச்சிருக்காங்க. உண்மைன்னு தெரிஞ்சதும், தயவு தாட்சண்யமின்றி, துறை ரீதியா, "சஸ்பெண்ட்' செய்தது மட்டுமின்றி, கைது செஞ்சு, சிறையிலும் தள்ளிட்டாங்க. இருந்தாலும், அவுங்களோடு புகைப்படம், வெளிச்சத்துக்கு வராம பார்த்துக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""குற்றவாளி என உறுதியானபிறகு, புகைப்படத்தை வெளியிடுறதில் தப்பில்லையே,'' என, மித்ரா மடக்க, ""புகைப்படத்தை வெளியிட்டால், தண்டனை முடிஞ்சு வெளியே வந்தாலும், ஊருக்குள் நடமாட முடியாதே; அந்த கரிசனத்துக்காக, வெளிச்சத்துக்கு காட்டாம, ரொம்ப கவனமா, "டீல்' செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE