கால்நடை வளர்ப்புத்தொழிலில் அதிக லாபம் பெற, மானாவாரி நிலங்களில், கால்நடைகளுக்கான தீவனப்புல் வளர்த்து பயன்பெறலாம். இதுகுறித்து உடுமலை, தோட்டக்கலைதுறை உதவி இயக்குனர் இளங்கோவன் அறிக்கை: கால்நடைகளுக்கான தீவனங்கள் வளர்ப்பதற்கு மானாவாரி நிலங்கள் மிகவும் பொருத்தமானது. வறட்சிகளை தாங்கி வளரும் புற்களான நீலக் கொழுக்கட்டைப்புல், கொழுக்கட்டைப்புல், மார்வில் புல், ரோட்ஸ் புல் மற்றும் ஆஸ்திரேலிய புல் போன்றவற்றை பயிரிட்டு, 3 முதல், 5 அறுவடைகளில் ஒரு எக்டருக்கு, 25 முதல், 40 டன் வரை மகசூல் பெறலாம்.மானாவாரி பகுதியில் பலவகை பயறு வகை தீவனப் பயிர்கள் வளர்க்கலாம். கால்நடைகளுக்கு தீவனப்புல் எப்படி அவசியமோ அதே போன்று பயறுவகை தீவனங்களும் அவசியமானது. குதிரைமசால், வேலிமசால், காராமணி, அவரை, சென்ரோ டெஸ்மோடியம் மற்றும் கல்பபோ முதலியவை முக்கியமான தீவனப்பயிர்கள். தீவனப்பயிர்களை தனித்தனியே சாகுபடி செய்வதைவிட, ஊடுபயிர்களாக வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம். அகத்தி, முருங்கை, முள் இல்லா மூங்கில், அரசு, வாகை, துாங்குமூஞ்சி, வேம்பு, மலை வேம்பு, வெள்வேல், கருவேல், குடைவேல், ஆல், பலா, இலுப்பை, உதியன், பிளார், புளி, இலந்தை, இலுப்பை, வேங்கை, நாவல், மஞ்சக்கடம்பு மற்றும் நெல்லி போன்றவை இந்த பகுதிகளுக்கேற்ற தீவன மரங்கள். தீவன மரங்களின் இலைகளை கழித்து தழை தீவனத்தில் மர இலைகளை, 30 சதவீதம் வரையும் கால்நடைகளுக்கு தரலாம்.எத்தனையோ தாவரங்கள் இருந்தும் ஏதும் திட்டமிடாமல், சிலவகை பயிர்களையும் மேய்ச்சல் நிலத்தில், எப்போதோ மழைக்கு வளர்ந்த சத்துகுறைந்த புற்களை நம்பி கால்நடை வளர்ப்பு செய்வதால் லாபம் பெறமுடிவதில்லை. வாய்ப்புள்ள இடங்களில் தீவன மரங்கள் மற்றும் தீவனப்புல் வளர்த்தால் கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிக லாபம் பெறமுடியும்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE