செங்குன்றம்:மழையற்ற வறுமையால், கந்து வட்டி பிரச்னையில் சிக்கிய தொழிலாளி போல், வறண்ட புழலேரியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்த முதியவர், 'என் வயிற்றுக்காகத்தான் இதை எடுக்கிறேன். ஆனால், ஏரியும் சுத்தமாகுமில்லே' என்று, யதார்த்தமாய் கேட்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை நாகரிகமாக உணர்த்தினார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரி, மூலதனமான தண்ணீரை இழந்து, விறைத்து, வெடித்து கண்ணீரை வரவழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க, வறண்ட காலத்தில், ஏரியை முறையாக ஆழப்படுத்தவோ, அதில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு குப்பை கழிவுகளை அகற்றவோ அரசு, இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
போட்டியே இல்லாமல்...
ஆனால், அலட்சியவாதிகள் ஏரிக்குள் வீசும் பிளாஸ்டிக் பாட்டில்களை, தன் வாழ்வாதாரத்திற்காக சேகரிக்கும், பிச்சைமணியின் செயல் குறிப்பிடத்தக்கது.
துாத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமணி, 78. சில ஆண்டுகளுக்கு முன், பிழைப்பு தேடி சென்னை வந்தார். தனியார் நிறுவனங்களில் காவலாளியாக வேலை செய்தார்.
தனி மனிதன் என்பதால், வேலை செய்யும் இடங்களில் தங்கி விடுவார். மூப்பு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த வேலையும் பறிபோனது. வயிற்றுக்கு தெரிந்த ஒரே கேள்வி பசி. அதற்கு விடையளிக்க, பெரிய பையில், பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, அதை, பழைய பொருட்கள் விற்பனை கடைகளில் விற்க துவங்கினார்.
அதற்கும் ஆங்காங்கே போட்டி தான். ஆனாலும், கிடைத்த வருவாயால், பசியாறினார். நீண்ட துாரம் நடந்த களைப்பால், சமீபத்தில், புழலேரிக்கரை மீது ஓய்வெடுத்தார்.வறண்ட ஏரியை பார்க்க வந்த சிலர், அப்போதும், ஏரியை குப்பை தொட்டியாக்கும் அலட்சியத்தில், பிளாஸ்டிக் பாட்டில்களை வீசினர். அதைக்கண்ட அவர் உற்சாகமானார். போட்டியே இல்லாமல் பொருள் சேர்க்கும் களம் கண்டார். ஓய்வு போதும் என்று ஏரிக்குள் இறங்கியவருக்கு, துாக்க முடிந்த அளவு, தேவையான பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடைத்தன.
ரூ. 200 வருமானம்:
'இது உங்களுக்கு சிரமமாக இல்லையா 'என்று அவரை கேட்டபோது, 'வெறிச்' என்று அடித்த எதிர் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிரித்தபடி, ''இதிலென்ன தம்பி இருக்கு'' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:இங்க, ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடைக்கின்றன. கொஞ்ச நாளா… இந்த ஏரிதான் என்னோட முதலாளி. ஒரு நாளைக்கு, 10 முதல் 20 கிலோ பாட்டில்கள் கிடைச்சிடும். ஒரு கிலோ பாட்டில், 10 ரூபாய்க்கு வாங்குறாங்க.சாப்பாட்டுக்கும், டீ செலவுக்கும் தாராளமா இருக்கு. எனக்கு, இன்னொரு சந்தோஷமும் கிடைக்குது. இங்க இருக்கிற பிளாஸ்டிக் பாட்டில்களை எடுப்பதால், ஏரியும் கொஞ்சம் சுத்தமாகுமில்லே.
அலட்சியம்:
நீர்நிலை, உயிரினங்களோட எதிரி பிளாஸ்டிக். ஆனால், நம்ம ஜனங்க வீட்டு கிணறு, குழாய்களை பாதுகாப்பா வைக்கிறாங்க; ஏரி, குளங்களை பாழாக்கிடுறாங்க. இது என்ன நியாயம்? நாளைக்கு இந்த ஏரி, அவங்களோட பிள்ளைகளுக்கும் உதவுமில்லையா?இவ்வாறு அவர் கூறினார்.பின், மூட்டையை சுமந்தபடி உற்சாகமாக நடந்தார்.
அவரது நடையில், சுற்றுச்சூழல் காக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கம் தெரிந்தது. அவர் கேட்ட கேள்வி நம் சந்ததியின் எதிர்கால பாதுகாப்பில், நாம் காட்டும் அலட்சியத்தை சுட்டி காட்டுவதாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE