சிக்குனது பத்து லட்சம்... சிக்காத வசூல் எக்கச்சக்கம்!| Dinamalar

சிக்குனது பத்து லட்சம்... சிக்காத வசூல் எக்கச்சக்கம்!

Added : அக் 27, 2015
Share
முகவரி மாற்றத்துக்காகக் கொடுத்த ரேஷன் கார்டை வாங்குவதற்காக, தெற்கு சிவில் சப்ளை தாசில்தார் ஆபீஸ் முன்பு காத்திருந்தாள் மித்ரா. அலைபேசி அலற...அழைத்தது சித்ரா.''என்னடி...இன்னும் உனக்கு அட்ரஸ் சேஞ்ச் பண்ணித்தரலையா?'' என்று அழுத்தமாய்க் கேட்டாள். ''ஆமாக்கா! எப்ப வந்து கேட்டாலும், நாளைக்கு வாங்கன்னு துரத்தி விடுறாங்க'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் காசு
சிக்குனது பத்து லட்சம்... சிக்காத வசூல் எக்கச்சக்கம்!

முகவரி மாற்றத்துக்காகக் கொடுத்த ரேஷன் கார்டை வாங்குவதற்காக, தெற்கு சிவில் சப்ளை தாசில்தார் ஆபீஸ் முன்பு காத்திருந்தாள் மித்ரா. அலைபேசி அலற...அழைத்தது சித்ரா.
''என்னடி...இன்னும் உனக்கு அட்ரஸ் சேஞ்ச் பண்ணித்தரலையா?'' என்று அழுத்தமாய்க் கேட்டாள்.
''ஆமாக்கா! எப்ப வந்து கேட்டாலும், நாளைக்கு வாங்கன்னு துரத்தி விடுறாங்க'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் காசு தராதவுங்களுக்கான டயலாக். வடமாநிலத்துக்காரங்களுக்கு, எந்த ரிக்கார்டு இல்லாட்டாலும், மூவாயிரத்துல இருந்து அஞ்சாயிரம் ரூபா வாங்கிட்டு, புது ரேஷன் கார்டை வாரி வழங்குறாங்க. உள்ளூர்க்காரங்க எத்தனை டாக்குமென்ட் கொடுத்தாலும், காசு தரலைன்னா, கார்டு கிடைக்காது. எனக்குத் தெரிய, ரேஷன் கார்டுக்கு இவ்ளோ லஞ்சம், வேற எந்த ஆட்சியிலயும் பார்த்ததேயில்லை'' என்றாள் சித்ரா.
''இதெல்லாம் இந்த கலெக்டர் கண்டுக்கவே மாட்டாங்களா? நினைச்சாலே மனசு கொந்தளிக்குதுக்கா'' என்றாள் மித்ரா.
''நீ ஏன் இவ்ளோ 'டென்ஷன்' ஆகுற. டோக்கனை வச்சு, ஆர்.டி.ஐ.,யில கேள்வி கேப்போம்'' என்று 'ஐடியா' கொடுத்தாள் சித்ரா.
''சரிக்கா! என்கிட்ட வண்டியில்லை. நான் நடந்தே, அண்ணா சிலை 'சிக்னல்' வந்துர்றேன். நீ அங்க வந்திரு. அக்ரி யுனிவர்சிட்டி போகணும்'' என்றாள் மித்ரா.
அடுத்த கால் மணி நேரத்தில், 'சிக்னல்' அருகே சிட்டாய் வந்து நின்றாள் சித்ரா. பின்னால், மித்ரா ஏறிக்கொள்ள, பாலம் நோக்கிப் பறந்தது, வண்டி.
''சிக்னல் மேட்டர்ல, காசு விளையாடுது மித்து...சிக்னலுக்கு மூணு பிளஸ் ரெண்டு வருஷம், பஸ் ஷெல்டர்க்கு 15 பிளஸ் 5 வருஷம்னு அனுமதியை வாரி வழங்கிருக்காரு இளந்தாரி ஆபீசர். கலெக்டர், போலீஸ் கமிஷனர் எல்லாரும் கொந்தளிச்சதால, மறுபடியும் ரோடு சேப்டி கவுன்சிலுக்குப் போகுதாம். மூணு வருஷத்துக்கு மட்டும் தான், அனுமதி கொடுக்கப் போறாங்க'' என்றாள் சித்ரா.
''அப்பிடியே கொடுத்தாலும், கார்ப்பரேஷனுக்கு வருஷத்துக்கு 14 லட்ச ரூபா தான, வருமானம் கிடைக்கும். பல கோடி ரூபா, கான்ட்ராக்ட்காரங்க, ஆபீசர்ஸ், அரசியல்வாதிங்க பாக்கெட்டுக்குப் போகப்போகுது'' என்றாள் மித்ரா.
''சிட்டிக்குள்ள 'சிக்னல்' விளம்பரங்கள்ல மட்டுமே, வருஷத்துக்கு 8 கோடி ரூபா வருமானம் கெடைக்கும்னு ஆர்.டி.ஐ., தகவலே சொல்லுது. ஆனா, மூணு வருஷத்துல கார்ப்பரேஷனுக்கு 41 லட்ச ரூபா தான் கட்டப்போறாங்க. இதுக்குப்பதிலா, கவர்மென்ட்டே, வருஷத்துக்கு பத்துப் பதினைஞ்சு லட்சத்தை, சிட்டி போலீஸ்க்குக் கொடுத்து, இதை மெயின்டெயின் பண்ணச் சொல்லலாமே''
''இதுக்காக 'ஃபண்ட்' கேட்டு, கவர்மென்ட்டுக்கு லெட்டர் எழுதி, வருஷம் தாண்டிருச்சு. வந்த பாடில்லை. அரசாங்கம் காசு கொடுத்தா, விளம்பரம் மூலமா, அரசியல்வாதிகளும், ஆபீசர்களும் பல கோடி ரூபா சம்பாதிக்க முடியாதுல்ல''
''அதுக்கு தான் மித்து, அந்த ஆபீசர்க்கு ஒவ்வொரு கம்பெனியும் 30 லட்ச ரூபா கொடுத்திருக்காங்களாம். ஒன்றரை கோடி வாங்குன பிறகு தான், கவுன்சிலுக்கு தீர்மானம் போயிருக்கு'' என்றாள் சித்ரா.
''இது வேறயா...சரவணம்பட்டியில ஒரு பெரிய கட்டிடத்துலயும், இவரோட பேருல ஒன்றரை கோடி ரூபா வசூல் நடந்திருக்காம். பழைய 'டவுன்டாடி'யோட கூட்டணி போட்ட சாமி ஆபீசர் இருந்தப்பவே, அவுங்க மூணு பிளஸ் ரெண்டுன்னு அஞ்சு 'சி' கொடுத்துட்டாங்களாம். ஆனா, இப்ப இருக்கிறவரு, 'அது வேற கை'னு 'டயலாக்' பேசிட்டு, ஒன்றரையை வாங்கிட்டதா தகவல்'' என்றாள் மித்ரா.
''போன வாரம், ஒரு ஆபீசர் வீட்டுக்கு, கார்ப்பரேஷன் ஓ.ஏ.,'பைக்'ல கொண்டு போன 10 லட்ச ரூபா, ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல போலீஸ்ட்ட சிக்கிருச்சு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''என்னக்கா....கோடநாட்ல 'அம்மா' இருக்கிறப்பவே இப்பிடி நடக்குது. கொடுத்து விட்டது யாரு?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''ஏற்கனவே விஜிலென்ஸ்ல மாட்டுன ப்ரியமான லேடி இன்ஜினியர் தான்''
''ஓ...போலீஸ் என்ன பண்ணுனாங்களாம்?''
''விஷயம் வெளிய தெரிஞ்சா, கவர்மென்ட்டுக்கு அசிங்கம்னு, பணத்தைக் கொடுத்து விட்டாங்களாம். போலீஸ்ல மாட்டுன அந்த கார்ப்பரேஷன் ஓ.ஏ., திடீர்னு ஒரு வாரம் லீவுல போயிட்டு வந்திருக்காரு''
''மித்து...கோயம்புத்துார் கார்ப்பரேஷன் 'ஆபீஸ் செட்டப்' பத்தி, மாஸ் செகரட்டரியே, கடுமையான அதிருப்தியில இருக்கார்னு கேள்விப்பட்டேன். சின்ன வயசுலயே, இப்பிடி காஞ்ச மாடு கம்மங்கொல்லையப் பார்த்தது மாதிரி, சகட்டு மேனிக்கு வசூல் பண்ணுனா, சர்வீஸ் முடியுறதுக்குள்ள ஜெயிலுக்குப் போயிருவாருன்னு, பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆபீசர்க பேசிக்கிறாங்க''
''சரி விடு...உப்பைத் தின்னா...தண்ணி குடிச்சு தான தீரணும்'' என்றாள் சித்ரா.
''குடிக்கிற தண்ணின்னதும் வேற ஞாபகம் வந்துச்சு. இதுவரைக்கும், நம்ம கார்ப்பரேஷன்ல 'ஆட்டோ டிசிஆர்'ல தான், வாட்டர் கனெக்ஷனுக்கு 'அப்ளை' பண்ணச் சொல்லிருந்தாங்க. ஒரு மாசத்துக்கு பரிட்சார்த்த முறையில, மறுபடியும் 'மேன்வல்'லா, விண்ணப்பிக்க அனுமதி கொடுத்திருக்காங்க'' என்றாள் மித்ரா.
''கடைசி காலத்துல கவுன்சிலர்க, வசூல் பண்றதுக்கு வசதி பண்ணித் தர்றாங்களோ?''
''அதுக்கு மட்டுமில்லை. ஏற்கனவே, 'எக்ஸ்டென்ஷன்' ஏரியாக்கள்ல, கவுன்சிலர்களே ஆயிரத்துக்கு மேல திருட்டு கனெக்ஷன் கொடுத்திருக்கிறதா, கார்ப்பரேஷன் பிளம்பர்களே சொல்றாங்க. அதெல்லாமே, இந்த ஒரு மாசத்துல லீகல் கனெக்ஷனாக்கிருவாங்க''
''மித்து...நம்ம கார்ப்பரேஷன்ல இருக்கிற குணமான கவுன்சிலர் பண்ணுன வேலை தெரியுமா...அவரோட வார்டுல இருக்கிற ஒரு கம்பெனிக்கு, இரும்பு ஏத்திட்டு வந்த லாரி, இ.பி., கம்பிய அறுத்து விட்ருச்சாம். அங்க வந்த கவுன்சிலரு, அந்த லாரியோட ஆர்.சி., இன்வாய்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு, ஒரு லட்ச ரூபா கொடுத்தாத்தான் தருவேன்னுட்டாராம்''
''என்னக்கா...இது அராஜகமா இருக்கு?''
''மீதியைக் கேளு...தர மாட்டேன்னு சொன்னா, பெரிய சிக்கல் பண்ணிருவேன்னு மெரட்டிருக்காரு. வேற வழி இல்லாம, ஒரு லட்ச ரூபா கொடுத்துட்டு, ஆர்.சி.,புக்கை வாங்கிட்டுப் போனாங்களாம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...ஆர்.சி.,புக்னு சொன்னதும், பேருல பணத்தை வச்சிருக்கிற ஆர்.டி.ஓ., ஞாபகம் வந்துச்சு. ஆட்டோக்காரங்கள்ட்ட 110 ரூபாய்க்குப் பதிலா, கறாரா 550 ரூபா வாங்குறதா நாம பேசுனோமே. அவரு அரண்டு போயி, 'இனிமே நீங்க 110 ரூபா கொடுத்தாப்போதும். ஏன் இப்பிடி 'அம்மா' பேரெல்லாம் இழுத்து விடுறீங்க'ன்னு கெஞ்சி அனுப்பி வச்சாராம்'' என்றாள் மித்ரா.
''எவ்வளவோ கெஞ்சியும், ஒரு விதவைட்ட இருந்து, 150 கேபிள் கனெக்ஷனைப் பறிச்சு, வேற ஆபரேட்டருக்குக் கொடுத்துட்டாராம், சம்மந்தப்பட்ட தாசில்தாரு'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...நானும் கேள்விப்பட்டேன். அரசு கேபிள்ல, இப்போ பயங்கர கலெக்ஷன் நடக்குதாமே. ஒரு 'ஃபாரின்' பாட்டில் அல்லது ஒரு கனெக்ஷனுக்கு இவ்ளோன்னு வசூல் நடக்குதாம்'' என்றாள் மித்ரா.
''வசூல் மேட்டர் இன்னொண்ணு...தெலுங்குபாளையம் ஏரியாவுல, எல்.இ.டி., லைட்டைத் திறந்து வைக்கிற விழாவுக்காக, அந்த ஏரியா பகுதிக் கழகச் செயலாளரு, செம்ம வசூல் பண்ணிருக்காரு. அவரு அடிச்ச பேனர்கள்ல, புது மாவட்டம் பேரு இல்லியாம். அவரோட எதிர் கோஷ்டியான கவுன்சிலரு, புது மாவட்டம் பேரைப் போட்டு 'பிளக்ஸ்' அடிச்சு கலக்கிட்டாரு. ஆனா, விழாவுக்கு வந்தது, பழைய மாவட்டம் தான்'' என்றாள் சித்ரா.
''வசூலைப் பத்திச் சொன்னியே...ஆர்.டி.ஓ., போலீஸ், கமர்சியல் டாக்ஸ் செக் போஸ்ட்கள்ல, தீபாவளி வசூல் செமயாப் போயிட்ருக்காம். ஸ்டேஷன்கள்ல, ராமநாதபுரம் தான் வசூல்ல டாப்ல இருக்காம். பீளமேடு, காட்டூர், சிங்காநல்லுார், ஆர்.எஸ்.புரம் எல்லாம் அப்புறம் தான் வருதாம்'' என்றாள் மித்ரா.
''மித்து...ஜி.எச்.,'கிளீனிங்' வேலையில, மறுபடியும் தில்லுமுல்லு ஆரம்பிச்சிருச்சு. தினமும் 60 பேரை வேலைக்கு வச்சிக்கிட்டு, 200 பேர் வர்றதாக் கணக்குக் காமிக்கிறாங்களாம். அதுக்கு தான், 'பயோ-மெட்ரிக்' அட்டெனன்ஸ் பண்ண விடாம, இடையூறு பண்ணிட்டே இருக்காங்க'' என்றாள் சித்ரா. எதிரில் வந்த போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும், பேச்சை மாற்றினாள் மித்ரா.
''அக்கா...சரவணம்பட்டி ஏரியாவுல, அந்த 'தொழில்' பண்ற வீடுங்க அதிகமாயிட்டே இருக்கிறதா, ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' குவியுது. அந்த ஏரியா போலீஸ் ஆபீசரே, ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டுக்குப் போறாராம். அதுக்காகவே, எப்பப் பார்த்தாலும், 'மப்டி'யிலேயே திரியுறாராம்'' என்றாள்.
வண்டி, வேளாண் பல்கலைக்குள் நுழைந்தது. இருவரும் அமைதியானார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X