விழிப்புடன் இயங்குவோம்... விபத்தை தவிர்ப்போம்| Dinamalar

விழிப்புடன் இயங்குவோம்... விபத்தை தவிர்ப்போம்

Added : அக் 27, 2015 | கருத்துகள் (5)
 விழிப்புடன் இயங்குவோம்... விபத்தை தவிர்ப்போம்


இந்தியாவில் 2014 ல் சாலை விபத்துக்களில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உத்தரபிரதேசத்தில் 16 ஆயிரத்து 284, தமிழகத்தில் 15 ஆயிரத்து 191, மகாராஷ்டிராவில் 12 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துக்களில்
இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விபத்துகள் ஏன் அதிவேகம், சாலை விதிகள், போக்குவரத்து சின்னங்களை மதிக்காதது, முறையற்று வாகனத்தை இயக்குதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், போதிய ஓய்வின்மை, துாக்கமின்மை, அலைபேசியில் பேசி கொண்டு வாகனம் இயக்குதல் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. நான்கு வழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக செல்லும்போதும், சாலையின் குறுக்கீடுகள் உள்ள இடங்களில் வேகத்தை குறைக்காமல் செல்வதாலும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
வேக அளவு என்ன அரசால் அனுமதிக்கப்பட்ட வேகஅளவு டிரைவரையும் சேர்த்து ஒன்பது நபர்கள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு மணிக்கு 100 கி.மீ., டிரைவரையும் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்யும் வாகனத்திற்கு வேகம் மணிக்கு 80 கி.மீ., சரக்கு வாகனங்களுக்கு மணிக்கு 80 கி.மீ., டூவீலர்களுக்கு மணிக்கு 80 கி.மீ., மூன்று சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 60 கி.மீ., ஆகும். அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு அதிகமாக செல்லும்போது வாகனம் டிரைவர் கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
சொந்த வாகனங்களில் குளிர்சாதன வசதி உள்ளது. அதிவேகமாக செல்வதை உணர முடியவதில்லை. வேகம் காட்டும் கருவியை பார்த்தால் மட்டுமே அதிவேகமாக செல்வதை உணர முடியும். எனவே டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே வாகனத்தினை செலுத்த வேண்டும். சாலையின் தன்மை, சாலை போக்குவரத்தின் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாதுகாப்பான வேகத்தில் இயக்க வேண்டும்.
4 வழிச்சாலை கவனம் நான்குவழி சாலையில் செல்லும் வாகனங்கள் சாலையின் மத்திய தடுப்புச்சுவரை ஒட்டிச் செல்லக்கூடாது. ஏனென்றால் வாகனத்தை சிறிது வலதுபக்கம் திருப்பும்போது தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தடுப்புச்சுவரில் சிறிது இடைவெளி விட்டு வாகனத்தை செலுத்த வேண்டும். வாகனங்கள் திரும்புவதற்காக கொடுக்கப்பட்ட இடைவெளிகளிலும், கிராமச்சாலைகள் சந்திக்கும் இடம் மற்றும் சாலையின் ஓரத்தில் கிராமங்கள் உள்ள இடங்களிலும் வாகனத்தை பாதுகாப்பான வேகத்தில் செலுத்த வேண்டும்.
ஏனெனில் மற்ற வாகன ஓட்டிகளினாலோ, பாதசாரிகளினாலோ குறுக்கீடு ஏற்படும்போது விபத்தின்றி வாகனத்தை நிறுத்த முடியும். நகர்புற சாலைகளில் போக்குவரத்து அதிகம். எனவே 30 கி.மீ., வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது.
சின்னங்களை கவனி சாலையில் மூன்று விதமான சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்திரவு சின்னங்கள்: இச்சின்னங்கள் வட்டவடிவில் காண்பிக்கப்பட்டிருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் உத்தரவு சின்னங்களில் கூறப்பட்டுள்ளதை மீறக்
கூடாது. அவ்வாறு மீறினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.எச்சரிக்கை சின்னங்கள்: சின்னங்கள் முக்கோண வடிவில் இருக்கும். சாலையின் நிலை மற்றும் தடைகளை முன் கூட்டியே தெரிவிப்பதற்காகவும், எச்சரிக்கை செய்வதற்காகவும் கொடுக்கப்பட்ட சின்னமாகும். சாலையில் இச்சின்னங்களை பார்த்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் வாகனத்தை இயக்க வேண்டும்.
தகவல் சின்னங்கள்: இச்சின்னங்கள் சதுரம் மற்றும் செவ்வக வடிவில் இருக்கும். சாலையில் செல்லும்போது தகவல்
சின்னங்களை பார்த்து (இச்சின்னங்களில் சாலைகளில் உணவுவிடுதி, பெட்ரோல் பங்க் மற்றும் முதலுதவி எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும்) அதற்கு ஏற்றவாறு வாகன
ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.தானியங்கி சின்னங்கள்: நகரில் தானியங்கி சிக்னல் மற்றும் போலீஸ் துறையினரால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சாலை சந்திப்பு சிக்னல்களையும், போக்குவரத்து போலீசாரின் அறிவுரைகளையும் கடைப்பிடித்து வாகனத்தை இயக்க வேண்டும். சிக்னல்களில், நிறுத்த கோட்டிற்கு முன்பாகவே, வாகனத்தை நிறுத்த வேண்டும்.
சாலையில் செல்லும் போது, வாகனத்தை இடதுபுறமாகவோ அல்லது வலது புறமாகவோ திருப்புவதற்கு முன்பாக குறைந்த பட்சம் 100 அடிக்கு முன்பாகவே சிக்னல் (சைகை) காண்பித்து வாகனத்தை திருப்பினால், பின்புறம் வரும் வாகன ஓட்டிகள் நம் வாகனத்தின் மீது மோதாமல், பாதுகாப்பாக இயக்க ஏதுவாக இருக்கும்.
மது அருந்தி வாகனம் ஓட்டும் பொழுது, மூளையின் செயல்பாடு முழுமையாக செயல்படாத காரணத்தால், ஓட்டும் பொழுது முடிவு எடுக்கக்கூடிய காலத்தின் அளவு அதிகமாகிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே மது அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது.
பகலில் குறிப்பாக மதியம் 2 முதல் மாலை 4 மணி வரை, இரவில் குறிப்பாக 2 மணி முதல் அதிகாலை 4 வரையிலும் ஏற்படும் விபத்துக்கள் துாக்கமின்மையால் ஏற்படுகிறது. மதிய நேரங்களில் டிரைவர் மதிய உணவை சாப்பிட்டவுடன், குளிர்
சாதன வசதியுடன் ஓட்டும் பொழுது துாக்கம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறான நேரங்களில், டிரைவர் தொடர்ந்து வாகனத்தை இயக்கக்கூடாது. சிறிதுநேரம் ஓய்வு எடுத்து பின் வாகனத்தை செலுத்த வேண்டும்.
அதேபோல் இரவு நேரங்களில் 2 மணிக்கு மேல் வாகனத்தை ஓட்டும் பொழுது துாக்கம் வரும். உடல் சோர்வடையும். உடனே டிரைவர் வாகனத்தை மற்ற வாகனங்களுக்கு இடையூறு
இல்லாத வகையில் இடதுபுறமாக நிறுத்தி ஓய்வு எடுத்து பின் வாகனத்தை இயக்க வேண்டும்.'டிம்' லைட் அவசியம் இரவில் எதிர்புறம் வாகனங்கள் வருவதை பார்த்தவுடன், டிரைவர் தன்னுடைய முகப்பு விளக்கை 'டிம்' செய்தால் சாலையில் தனக்கு முன் செல்லும் வாகனங்ளை தெளிவாக அறிய முடியும். எதிர்வரும் வாகன டிரைவருக்கு சாலையில் செல்லும் வாகனங்களை பார்க்க ஏதுவாக இருக்கும். எதிர்திசையில் வரும் வாகன டிரைவர்களும் முகப்பு விளக்கை 'டிம்' செய்து வாகனத்தை செலுத்தும்போது இரு வாகனங்களும் விபத்தில் இருந்து தப்பும்.
உடல்நிலை, மனநிலை, வாகனத்தின் நிலை அனைத்தும் சரியான நிலையில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும். அலைபேசி பேசாமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, கோபப்படாமை ஆகியவற்றை கடைப்பிடித்து சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகளை சகோதரர்களாக நினைத்து வாகனத்தை இயக்க வேண்டும். சாலை விதிகளை மதித்து, வாகனங்களை இயக்கி விபத்தில்லா தமிழகம் உருவாக்குவோம்.
- என்.ரவிச்சந்திரன்,வட்டார போக்குவரத்து அலுவலர் (செயலாக்கம்), மதுரை,99424 61122

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X