பொது செய்தி

தமிழ்நாடு

'சாகித்ய அகடாமி' விருதை திருப்பித் தருவது அரசியல் நாடகம், கோவை எழுத்தாளர்கள் அலசல்

Added : அக் 30, 2015
Advertisement

கன்னட எழுத்தாளர் கல்புர்கியின் கொலை, உ.பி. தாத்ரி இக்லாக் படுகொலை சம்பவம் ஆகியவை, இந்திய எழுத்தாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தயுள்ளது. இதன் விளைவாக தங்களின் படைப்பு திறமைக்காக வழங்கப்பட்ட உயர்ந்த இலக்கிய விருதான, சாகித்ய அகடாமி விருதை, திருப்பி கொடுத்து தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், சில எழுத்தாளர்கள்.குறிப்பாக, முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல், அசோக் வாஜ்பேய், மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப், குஜராத்தி எழுத்தாளர் கணேஷ்தேவி உள்ளிட்ட பலர் இவ்விருதை திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழகத்தில், சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.கோவையில் இவ்விருதை பெற்றுள்ள எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர்கள் சிற்பி, புவியரசு மற்றும் இலக்கிய திறனாய்வாளர் கோவை ஞானி ஆகியோரிடம் கருத்து கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:எழுத்தாளர் நாஞ்சில்நாடன் (சாகித்ய அகடாமி விருது பெற்றவர்):சாகித்ய அகடாமி விருது, படைப்பு திறமையை பாராட்டி வழங்கப்படும் பரிசு. எந்த ஒரு அரசியல் கட்சியின் நிதியில் இருந்தும் கொடுப்பதில்லை. விருதை திருப்பி அளிப்பது, முற்போக்கு எழுத்தாளர்களின் அரசியல் நாடகம். இதில், நடுநிலை எழுத்தாளர்களை உள்ளே இழுத்து, பகடைக்காய் ஆக்கக் கூடாது. எழுத்தாளர்கள் பெற்ற சாகித்ய அகடாமி விருதை, எந்த நோக்கத்துக்காவும் திருப்பி கொடுக்க தேவையில்லை.அப்படி கொடுப்பதால் எந்த நீதியும் கிடைத்து விடாது. விருதை திரும்ப கொடுத்துவிட்டால் போதுமா? அதன் மூலம் பெற்ற பெயரையும், புகழையும் எப்படி திரும்பக் கொடுப்பது? எழுத்தாளர் கல்புர்கியின் கொலை கண்டனத்துக்குரியது.கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (இரண்டுமுறை சாகித்ய அகடாமி விருதை பெற்றவர்):சாகித்ய அகடாமி, மத்திய அரசு அமைப்பு அல்ல. அது தன்னாட்சி பெற்ற தனி அமைப்பு. அதன் செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது. அதே போல் அரசின் செயல்பாடுகளில், சாகித்ய அகடாமியும் தலையிட முடியாது. இதற்கு முன் எத்தனையோ பிரச்னைகள் நடத்திருக்கின்றன. நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது கூட, சாகித்ய அகடாமி எந்த கருத்தும் சொன்னதில்லை. ஆனால், இப்பிரச்னையில் எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்தால் அகடாமி கருத்து தெரிவிப்பது அவசியம். இதற்காக, விருதை யாரும் திருப்பி கொடுக்க தேவையில்லை.கவிஞர் புவியரசு (இரண்டு முறை சாகித்ய அகடாமி விருதை பெற்றவர்):பெற்ற விருதை திருப்பிக் கொடுப்பது, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எடுக்கும் முடிவு. எழுத்தாளர்களுக்கு அநீதி நடக்கும்போது சக எழுத்தாளர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்கக் கூடாது. அதற்கான கண்டனத்தை எழுத்தின் வாயிலாக பதிவு செய்யவேண்டும். விருதை திருப்பி தருவது முறையாக இருக்காது.இந்த சூழ்நிலையில் சாகித்ய அகடாமி எழுத்தாளர்களின் கருத்தை அறிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு எழுத்தாளர் பின்னாலும் ஒரு அரசியல் இருப்பதால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை.கோவை ஞானி (இலக்கிய திறனாய்வாளர்): எழுத்தாளர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை; மிரட்டப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள் என்ற நிலை உருவாகி இருப்பதை அறிந்து, வடமாநில எழுத்தாளர்கள், தாங்கள் வாங்கிய சாகித்ய அகடாமி விருதை திருப்பிக் கொடுத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.தமிழக எழுத்தாளர்கள் அப்படி எல்லாம் திருப்பி கொடுத்து விடமாட்டார்கள். அவர்களுக்கு விருது மிக முக்கியம். இலங்கையில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட போதும், எழுத்தாளர் பெருமாள்முருகன் ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட போதும், சாகித்ய அகடாமி விருது பெற்றவர்கள் மவுனமாகதான் இருந்தனர். எழுத்தாளனுக்கு எது நடந்தாலும் இவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். விருதை திருப்பி கொடுப்பதால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட போவதில்லை. குறைந்தபட்சம் இதற்கு எதிரான கண்டனத்தையாவது இவர்கள் எழுதவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X