கெய்ரோ : 224 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், எகிப்தின் சியான் தீபகற்பத்தில் நொறுங்கி விழுந்தது. இந்த விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது . இந்நிலையில், இந்த விமானத்தில் இருந்த 7 ஊழியர்கள் மற்றும் 217 பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நொறுங்கி விழுந்த விமானத்தின் கறுப்புப்பெட்டியை எகிப்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், அந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என எகிப்தில் உள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
விமானம் விபத்திற்குள்ளானதை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் உறுதி செய்துள்ளார். இது குறித்து எகிப்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு பயணிகள் விமானம் சென்றுள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான துண்டிப்பை இழந்தது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து மேலும் விபரங்களை சேகரிப்பதற்காக எகிப்து பிரதமர் ஷெரீப் , அமைச்சரவை குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த விமானம் விபத்து குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவுக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு மீட்பு படையினரை உடனடியாக அனுப்பி வைக்க அவசரகாலத்துறை அமைச்சருக்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மோசமான விபத்துகள்
2005, ஆக.14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலி.
* அக்.22: நைஜீரியாவில் சர்வதேச விமான நிலையத்தில், விமானம் புறப்படும் போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலி.
* டிச.10: நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் பலி.
2006, மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் பலி.
* ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் பலி.
* ஆக.22: உக்ரைன் நாட்டில், புல்கோவோ ஏவியேஷன் என்டர்பிரைஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 170 பேர் பலி.
2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் பலி.
* ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம்., ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் பலி.
2008, ஆக.20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் பலி.
2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் பலி.
* ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
*மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் பலி.
2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
* ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
* ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
* டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
2015 பிப்., 5: தைவானில் "டிரான்ஸ் ஆசியா' நிறுவனத்தை சேர்ந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி.
* பிப்., 18: இந்தோனேசியாவின் ஏர் ஆசியா விமானம் நடு வானில் சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதில் 162 பேர் பலி.
* மார்ச் 24: ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலி.
* அக்., 31: ரஷ்ய விமானம், எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் பலி.