காட்சி கலாசாரத்தின் அடிமைகள்

Added : நவ 01, 2015 | கருத்துகள் (25) | |
Advertisement
திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களிடம் மணமக்கள் சிலர், தாங்கள் முதலிரவில், படுக்கையறையில் இருக்கும் அந்தரங்க காட்சிகளையோ அல்லது மண நாளில் தங்களை அரைகுறை ஆடையுடனோ புகைப்படம் எடுத்துத் தரும்படி கேட்பதாக, ஒரு செய்தியை சமீபத்தில் படித்தேன்.இந்த செய்தியைப் படித்து நான் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடைய வில்லை. ஏனென்றால், இந்த நாட்டில், கற்பனையே செய்ய
காட்சி கலாசாரத்தின் அடிமைகள்

திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களிடம் மணமக்கள் சிலர், தாங்கள் முதலிரவில், படுக்கையறையில் இருக்கும் அந்தரங்க காட்சிகளையோ அல்லது மண நாளில் தங்களை அரைகுறை ஆடையுடனோ புகைப்படம் எடுத்துத் தரும்படி கேட்பதாக, ஒரு செய்தியை சமீபத்தில் படித்தேன்.

இந்த செய்தியைப் படித்து நான் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடைய வில்லை. ஏனென்றால், இந்த நாட்டில், கற்பனையே செய்ய முடியாத, எந்த விஷயங்கள் வேண்டுமானாலும் நடக்கிறது; ஒட்டுமொத்த சமூகமுமே, மிகப்பெரிய பைத்திய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை இதுபோன்ற செய்திகள் வெளிப்படுத்துகின்றன. மணமக்கள் அப்படி தங்களிடம் கேட்டபோது தாங்கள் அதிர்ச்சிஅடைந்ததையும், அதைச் செய்ய மறுத்து விட்டதையும், அந்த புகைப்படக்காரர்கள் தெரிவிக்கின்றனர். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் பரவலான பின், தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்வது என்ற மோகம், சமூகம் முழுக்க மிக ஆழமாக ஊடுருவி விட்டது. முன்பெல்லாம், கேமரா வைத்திருப்பது ஒரு கலை உணர்வு, அழகுணர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தது.

கேமரா வைத்திருப்பவர், இயற்கை காட்சிகளையோ, வாழ்வின் அபூர்வ தருணங்களையோ தேடித்தேடிச் சென்று படம் எடுப்பர். 'பிரின்ட்' போடுவதில் துவங்கி, அதை கலையாக மாற்றுவதில் கவனம், தேர்வு, அணுகுமுறை எல்லாமே இருந்தது. ஆனால், டிஜிட்டல் கேமராக்களும், மொபைல்போன் கேமராக்களும் எல்லாருடைய கைகளுக்கும் எளிதில் கிடைத்த பின், இந்த உலகில் எல்லாருமே புகைப்படக்காரர்களாகி விட்டனர்.

புகைப்படம் எடுப்பதில் இருக்கக்கூடிய, புறவயமான அழகியல் பார்வை எதுவும் தேவைப்படாமல், பார்க்கிற எல்லாவற்றையும் படம் எடுப்பது அல்லது இடைவிடாமல், தன்னைத்தானே படம் எடுப்பது என்ற நோய், மிகக் கடுமையாக உலகளாவிய பிரச்னையாக இன்று மாறிவிட்டது. சாலையில் ஒரு கொடூரமான விபத்து நடந்தால்கூட அல்லது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொலை செய்து கொண்டிருந்தால் கூட, அதை உடனடியாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்பதைத் தவிர, அதைப் பற்றிய எந்தப் பதைப்பும் இல்லாத ஒரு சமூகமாக நாம் மாறிவிட்டோம்.தன்னைத்தானே இடைவிடாமல் புகைப்படம் எடுப்பதும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும், அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாகவே மாறிவிட்டது.

'செல்பி' எனப்படும், தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் முறை, மொபைல்போன் கேமரா வருவதற்கு முன்பே இருந்திருக்கிறது. 'டைமர்' பொருத்தப்பட்ட கேமராக்களை ஓடச்செய்துவிட்டு, அதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது, நீண்டகாலமாக இருந்தது தான். ஆனால், அது அப்போது ஒரு மனநோய் அல்ல. புகைப்படம் என்பது, வாழ்வின் அரிதான சந்தர்ப்பமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று, இடைவிடாமல் எடுக்கப்படும், 'செல்பி'க்கள், சுயமோகத்தின் உச்சக்கட்டம்! தன்னைத் தவிர வேறு எதன் மீதும் எந்த கவனமும் இல்லாத, ஒரு பரிதாப நிலையை இது உருவாக்கிவிட்டது. செல்பி எடுத்துக்கொள்ளும் போது மாடியிலிருந்தோ, பாலங்களிலிருந்தோ விழுந்து இறப்பவர் பற்றிய செய்திகள் வருகின்றன. ஒருவர் ரயிலின் முன் செல்பி எடுக்கப் போய், ரயில் மோதி இறந்த செய்திகூட வந்தது.

இப்போது, செல்பி எடுப்பதற்கு கைகளின் நீளம் போதாது என, அதற்கான நீண்ட குச்சிகளும் விற்பனைக்கு வந்துவிட்டன. அதனுடன், பொது இடங்களில் அலைபவர்களைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது. இப்படி தினமும், நுாற்றுக்கணக்கில் எடுக்கும் புகைப்படங்களை, யாருக்கும் திரும்பப் பார்ப்பதற்குக்கூட அவகாசம் இருக்கிறதா என, தெரியவில்லை. அந்த அளவிற்கு தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், வாழ்வதை விட, அதைப் பதிவு செய்வது தான், பொது உளவியலாக மாறி வருகிறது.

இதனுடைய ஆபத்தான உச்சக்கட்ட விளைவு தான், அந்தரங்கமான தருணங்களைப் படம் பிடிப்பது. தன்னைத்தானே கண்ணாடியில் அந்தரங்கமாகப் பார்த்துக் கொள்வது என்பது, மனித மனதில் எப்போதும் இருக்கக்கூடிய, ஓர் ஆசை தான். ஆனால், தன்னையோ தன்னுடைய அந்தரங்கமான உறவின் தருணங்களையோ படம் பிடிப்பது, ஒரு விதத்தில் தற்கொலைக்கு சமமானது. நிர்வாணத்தையோ அல்லது அந்தரங்கமான உறவுகளையோ திருட்டுத்தன மாகப் படம் பிடிப்பவர்கள் இருக்கின்றனர்.

ஆனால், சிலர் தாங்களே தங்களை அப்படி விரும்பி படம் எடுத்துக் கொள்வது என்ன வகையான மனச்சிக்கல்? ஓர் அந்தரங்கமான தருணத்தை, தன் மனதில் தேக்கி வைத்துக் கொள்ள முடியாத கற்பனை வறட்சி கொண்ட ஒரு சமூகம், எல்லாவற்றையும் காட்சியாகப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறதா? இதன் விளைவுகள் பயங்கரமானவை. தங்கள் அந்தரங்க உறவு களையோ, தோற்றங்களையோ விளையாட்டாகவும், ஒரு பாலியல் இன்பத்திற்காகவும் சுயமாகப் படம் எடுத்துக் கொண்டவர்கள், பின் மோசமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

ஒரு நல்ல உறவின் போது எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகள் பின், அந்த உறவுகள் கசந்து விடுகிறபோது, ஒருவர் இன்னொருவரை மிரட்டுவதற்கோ பல்வேறு வகைகளில் அடிமைப்படுத்துவதற்கோ பயன்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல கொலைகளும், தற்கொலைகளும்கூட நடந்திருக்கின்றன. விளையாட்டாக மொபைல் போன் கேமராக்களில் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள், தவறுதலாக வேறு நபர்களுடைய கைக்குச் சென்று, அவை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, சரி செய்யவே முடியாத பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்படுகிற எதையும் பாதுகாப்பது மிகவும் கடினமானது. அது சுலபமாக இன்னொருவரால் கைப்பற்றப்படக்கூடியது.

ஆனால், இந்த அபாயங்கள் எல்லாம் தெரிந்தால் கூட, அதைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், இந்த ஆபத்தான மரண விளையாட்டில் பலரும் இறங்குகின்றனர். அதற்கு விலையாக, தங்கள் வாழ்வையே கொடுக்கின்றனர். இதன் அடுத்தகட்ட மனநோயின் வெளிப்பாடு தான், ஒரு புகைப்படக்காரரை வைத்து, தங்களை அந்தரங்கமாகப் படம் எடுத்துக் கொள்ளக் கூடிய துணிச்சல்!

வாழ்க்கை மற்றும் அனுபவம் என்பது, கேமராக்களில் பதிவு செய்யக்கூடிய வெற்றுக் காட்சிகள் அல்ல. அது நம் சிந்தனையாக ஆளுமையாக மாற வேண்டும். அதிலிருந்து நாம் பெறுகிற படிப்பினைகள், நம்மை புதிய அனுபவங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய, ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் இருப்பது நம் மேலோட்டமான போலித் தோற்றங்கள் மட்டுமே. அந்தத் தோற்றங்களை இவ்வளவு ஆவேசமாக உற்பத்தி செய்து கொண்டே போவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வாழ்க்கையை நேரடியாக வாழ்வதற்கும், அதன் அனுபவங்களை நம் மனதின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்வதற்கும் பதில், எல்லாவற்றையும் காட்சிகளாகப் பதிவு செய்துவிட்டு, அவற்றை அத்தோடு மறந்து விடுகிறோம். இந்த காட்சிக் கலாசாரம், சுயவழி பாட்டு கலாசாரம் என்பது, நமக்கு சிறந்த அடையாளங்களைத் தருவதற்கு பதில், நம்மை எந்த அடையாளங்களும் இல்லாதவர்களாக மாற்றி
விடுகிறது என்பது தான் உண்மை.
இ-மெயில்: manushyaputhiran@gmail.com
- மனுஷ்ய புத்திரன் -
கவிஞர், அரசியல் விமர்சகர், உயிர்மை ஆசிரியர்

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannadasan - Singapore,சிங்கப்பூர்
26-நவ-201511:30:13 IST Report Abuse
Kannadasan ஒரு ஊழல் பெருசாளியை பின்பற்றும் நீ எல்லாம் பேசுறத கேக்க வேண்டிருக்கு.. என்ன செய்றது.. இந்த நாடும் நாட்டு மக்களும் அந்த நிலமையில் தான் இருக்காங்க.
Rate this:
Cancel
Palay PS. Maniyan - chennai,இந்தியா
19-நவ-201513:06:18 IST Report Abuse
Palay PS. Maniyan மிஸ்டர் மனுஷ்ய புத்திரன் - கவிஞர், அரசியல் விமர்சகர், உயிர்மை ஆசிரியர் அவர்களே செல்பி எடுப்பதை பற்றி கருத்து கூரும் முன் மாபெரும் ஊழல் செய்து அதில் ஒரு பங்கில் வந்த தி மு க டிவி யில் தன் முகத்தை கண்பித்து சுய விளம்பரம் செய்து தமிழனின் தன்மானத்தையும், உம்முடைய திறமையையும் அடகு வைத்து கொண்டிருக்கும் உங்கள் டிவி மோகமும் அந்தரங்க காட்சி செல்பி எடுப்பதும் ஒன்றுதான். இனிமேலாவது ஊழல் குடும்பத்தில் இருந்து தப்பித்து தனக்கென்று ஒரு பாதையை வகுத்து மாற்று வழியில் தனது திறமையை வெளிபடுத்த வேண்டுகிறேன்
Rate this:
Cancel
TAMILMANI - TRICHY,இந்தியா
16-நவ-201513:37:35 IST Report Abuse
TAMILMANI செல்பி பற்றி எழுதும் தங்கள் டிவி கிடைத்தால் போதும் என்று அலையும் உங்களை போன்ற எழுத்தாளர்கள் பேசிய நாட்டை பழங்காலத்துக்கு தள்ளதிர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X