தமிழிசை தந்த 'நல்லதோர் வீணை'| Dinamalar

தமிழிசை தந்த 'நல்லதோர் வீணை'

Updated : நவ 02, 2015 | Added : நவ 02, 2015
தமிழிசை தந்த 'நல்லதோர் வீணை'

தமிழிசை வளர்ச்சியில் பாரதியின் பங்கு முக்கியமானது. பாரதி கவிஞர் மட்டுமல்ல, இசைக் கலைஞரும் கூட என்பது பலருக்குத் தெரியாத செய்தி. பாரதி தாமே மெட்டமைத்துப் பாடித் தம் மனைவிக்கும் பெண்களுக்கும் கற்றுக்கொடுத்த பாடல்களை இன்று வரை பாடி வருகிறோம். பாரதி இசையமைத்துப் பாடிய பாடல்களின் பண்ணழகு, சில பாடல்களுக்குப் புதிய வகையில் அவர் அமைத்த மெட்டுகள் ஆகியவை அசாதாரணமானவை. மிகவும் எளிதான சிந்து முதலிய பழைய மெட்டுக்கள் கூட அவர் பாடல்களில் புதிய தோற்றம் கொண்டு ஒளி வீசுவதை ஒரு சிலரே அறிய முடியும்.
இன்று 'மெல்லிசை' யாகவும், முற்றிலும் 'கனத்த' கர்நாடக இசையாகவும் திரைப்படங்களிலும் கச்சேரி மேடைகளிலும் பாடப்படும் பாரதி பாடல்களில் மிகச் சிலவே, கவிதையின் பொருளையும் பண்ணழகையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.
பாரதியின் சாதனை :'தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன்' என்பது நாவுக்கரசரின் மொழி. ஆம்... தமிழிசை வளர்த்தவர்களுள் நாவுக்கரசர் போன்றே பாரதியாரும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.முத்தமிழில் ஒன்றான இசைத் தமிழில் பாரதி மிகுந்த ஈடுபாடு கொண்டவர். விடுதலையைப் பாட வந்த பாரதியார், தாம் பாடிய பாடல்களை இசைப் பாடலாக எழுதியுள்ளார்.
நாடறிந்த இசைப் பாடல்மெட்டுக்களில் பொருந்துமாறு பாடல்களை இசையமைத்துப் பாடிய பாரதியாரைத் தமிழிசையின் முன்னோடி என்றும் கூறலாம்.சுப்பிரமணிய பாரதியார் எட்டயபுரத்தில் இருந்தபோது, அங்கே சமஸ்தான இசைப் புலவர் சுப்பராம தீட்சிதருடன் நெருங்கிப் பழகி, இசை பற்றிய பல உண்மைகளைக் கண்டுணர்ந்தார். பின், காசிக்குச் சென்று வடநாட்டு இசையைப் பயின்றார். அதோடு புதுச்சேரியில் இருந்த போது மேனாட்டு இசையையும் கேட்டு மகிழ்ந்துள்ளார்.
தாய்மொழிக்கு உயிர் :பாரதியார் தம் 'பாஞ்சாலி சபதம்' முகவுரையில், 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகின்றான்' என்று கூறுகின்றார்.
சங்கீத விஷயம், தாள ஞானம், ஆர்மோனியம், தம்பூரா, வீணை, பொய்த் தொண்டை, பெண்ணின் பாட்டு என்னும் ஏழு பகுதிகளாக, பாரதியாரின் இசை பற்றிய கட்டுரைகள் அமைந்துள்ளன. அக்கட்டுரைகளின் மூலமாகவும் பாரதியாரின் இசைக் கோட்பாட்டினை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.அவர் விரும்பிக் கேட்ட பாடல்களை - ஓசைகளை - ஒலிகளைப் பட்டியலிட்டுக் காட்டும் வகையில் 'குயில் பாட்டு' பாடல், குயிலே உரைப்பது போன்ற பாரதிக்குயில் மொழிவதைப் பார்க்கலாம்.
''கானப்பறவை கலகல எனும் ஒசையிலும்காற்று மரங்களிடைக் கொட்டும் இசைகளிலும்ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் நெல்லிடிக்குங்கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினுலும்சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்...நெஞ்சைப் பறி கொடுத்தேன்'என்று குயில் இசையில், பதினான்கு வகை இசையைப் பட்டியலிடுகிறது. தாளமும் பண்ணும் மேலும், 'தாளம், தாளம், தாளம்,தாளத்திற்கோர் தடையுண்டாயின்கூளம் கூளம் கூளம்பண்ணே, பண்ணே, பண்ணே,பண்ணிற்கேயோர் பழுதுண்டாயின்மண்ணே, மண்ணே, மண்ணே...'என்று தமிழிசையின் உயிர் நாடியாக விளங்குகின்ற தாளமும் பண்ணும் செம்மையுற அமையவில்லையெனில் அது பயனற்றது என உரைக்கிறார்.
சிறு வயது முதலே தேவாரம், திவ்விய பிரபந்தம், திருப்புகழ் போன்ற சமயம் சார்ந்த இசைப் படைப்புகளில் மனத்தைச் செலுத்தியிருக்கிறார்.
இசை பற்றி பாரதி :1916-ல் சுதேசமித்திரன் நாளிதழில் 'சங்கீத விஷயம்' என்ற தலைப்பில், பாரதி, 'தமிழ் மக்களுக்கு விளங்கும் விதத்தில் தமிழிசையை வித்துவான்கள் மேடைக் கச்சேரிகளில் பாடவேண்டும். ஒரு சில தெலுங்குப் பாடல்களையே திரும்பத் திரும்ப பாடுவதைத் தவிர்க்க வேண்டும். இசையும் பொருளும் ஒன்றியிருக்க வேண்டும். கவிதையின் சுவை அறிந்து பாடவேண்டும்' என்று கூறுகிறார்.
பாரதியார் தாம் இயற்றிய சில பாடல்களுக்குச் ஸ்வரக்குறிப்பும் தந்துள்ளார். 'குயில் பாட்டு' காதல் காதல் காதல் என்னும் பாடலுக்கும், சின்னஞ்சிறு கிளியே என்னும் பாடலுக்கும் பாரதியார் இசைக் குறிப்பைக் கொடுத்துள்ளார்.அவர் ஸ்வரக்குறிப்பு தந்துள்ளபாடல்கள்:1.காக்கைச் சிறகினிலே (யதுகுல காம்போதி)2.காலா உன்னை (சக்ரவாகம்)3.நின்னைச்சில வரங்கள்(ஹனுமத்தோடி)பாரதியாரின் இசைப் பாடல்களை மூன்று வகைகளில் காணலாம்.1. அவரே இசை அமைத்த 'முருகா முருகா', 'காலா உன்னை' போன்றவை.2. நாட்டுப்பாடல் இசையமைப்பில் பாடிய கும்மி, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு காவடிச் சிந்து போன்றவை.3. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர பாடல்களின் அமைப்பில் 'ஒய் திலகரே' போன்றவை.மேனாட்டு இசையமைப்புப் போல மெட்டமைந்த 'விடுதலை விடுதலை விடுதலை' போன்ற பாடல்களை நான்காவது வகையாகவும் கொள்ளலாம்.
விருப்பமான ராகங்கள்:தற்போது, பாரதியார் பாடல்களை இசைவாணர்கள் அவரவருக்கு விருப்பமுள்ள ராகங்களில் பாடுகின்றனர். பாரதியார் பயன்படுத்தியுள்ளதாக நுால்களில் காணப்படும் ராகங்கள் நாட்டை, நாட்டைக் குறிஞ்சி, கரகரப்பிரியா, தன்யாசி, ஆனந்த பைரவி, யதுகுல காம்போதி, செஞ்சுருட்டி, காம்போதி, பிலகரி, கேதாரம், தோடி, ஆபோகி, சக்ரவாகம், சரசுவதி, வராளி, கமாஸ், சங்கராபரணம், பைரவி, பூபாளம், புன்னாகராளி, யமுனாகல்யாணி ஆகியவை.பாரதியார் கும்மி, நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு முதலிய நாட்டுப்புற பாடல்கள் வகைகளிலும் பாடல்கள் புனைந்துள்ளார்.
இசைக்கருவிகளின் இசையையும் சுவைத்து மகிழ்ந்த பாரதி, அவற்றில் தமக்குள்ள ஈடுபாட்டைத் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இயற்றிய 'வேய்ங்குழல்' என்னும் பாடல் அதற்கு நற்சான்று.
'வீணையடி நீயெனக்கு மேவும் விரல்நானுனக்கு' என்று வீணையாகத் தம் காதலி கண்ணம்மாவை உருவகித்தும், 'நல்லதோர் வீணை' என தம்மையே உருவகித்தும் பாடுகிறார்.
பாரதி தமக்கு முன்பிருந்த இலக்கியங்களில் உள்ள இசை நுட்பங்களை அறிந்து மரபினைப் போற்றி தமிழிசையை வளர்த்துள்ளார். ராகம், தாளம் பற்றிய குறிப்புக்களோடு மெட்டுக்கள், சுரதாளக் குறிப்புகள், தக்ககாரம் முதலியவற்றின் துணையோடு பாரதியின் பல பாடல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இதில் பாரதியின் இசைத் திறனை இனிதே உணரலாம்.
-- முனைவர் தி.சுரேஷ் சிவன்,இசைத்தமிழ் ஆராய்ச்சியாளர்.94439 30540

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X