சி.எம்., காதுக்கு போன சிக்னல் மேட்டர்... சீக்கிரமே வருமா 'ரீ டெண்டர்'

Added : நவ 03, 2015
Advertisement
சி.எம்., காதுக்கு  போன சிக்னல் மேட்டர்... சீக்கிரமே  வருமா 'ரீ டெண்டர்'

வெளியே மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மருத்துவமனையில், ரத்தப்பரிசோதனை ரிசல்ட் வாங்கக் காத்திருந்தாள் சித்ரா. அங்கே வந்த மித்ரா, பதட்டமாய் விசாரித்தாள்.
''என்னக்கா! ரிசல்ட் வந்துருச்சா...?''
''இன்னும் வரலை மித்து. காய்ச்சல் விட்டு விட்டு வர்றதால, பயமாயிருக்கு. தமிழ்நாட்டுலயே நம்ம ஊர்ல தான், டெங்கு, பன்றிக்காய்ச்சல் எல்லாமே அதிகமா 'ரிப்போர்ட்' ஆகுது. அதனால, எதுக்கும் இப்பவே 'பிளட் டெஸ்ட்' பண்ணிருவோம்னு தான் வந்தேன்'' என்று சோர்வாய்ப் பேசினாள் சித்ரா.
''மழையில நரகமாயிருச்சு ஊரு. எங்க பார்த்தாலும் வெள்ளம், டிராபிக். கோடிகளைக் கொட்டிக் கட்டுன மழை நீர் வடிகால்ல என்னாச்சுன்னே தெரியலை. குப்பை அள்ளுறதுலயிருந்து, கொசு மருந்து வரைக்கும் 'கோல் மால்' வேலைதா நடக்குது. அப்புறம், டெங்கு, சங்கு எல்லாம் தானா வரும்!'' என்று கொதித்தாள் மித்ரா.
''கோடநாட்டுல 'அம்மா' இருக்கிறப்பவே, ஊரை இப்பிடி வச்சிருக்காங்களே. யாரு மித்து, இதெல்லாம் கேக்குறது?'' என்றாள் சித்ரா.
''அதை விடு...சி.எம்., கோடநாட்ல இருக்கப்பவே, கோயம்புத்தூர்ல நடுரோட்டுல அரிவாள், தடியோட அராஜகம் பண்றாங்களே. எப்பிடிக்கா?'' என்றாள் மித்ரா.
''ராம்நகர் மேட்டரா....அங்க நடந்த விவகாரமே வேற மித்து...தனியா ஜாதிக்கட்சி நடத்துற எம்.எல்.ஏ., ஒருத்தரு, சில மாசங்களுக்கு முன்னால, கோவையில இருக்கிற ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு, தனக்கு வேண்டப்பட்ட ஒருத்தரை 'சர்ஜரி'க்காக அனுப்பி, அரசு காப்பீட்டுத் திட்டத்துல, அவருக்கு ஆபரேஷன் பண்ணச் சொல்லிருக்காரு''
''அந்த ஹாஸ்பிடல்ல, முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?''
''யெஸ்...அதே தான். கடுப்பான அந்த எம்.எல்.ஏ., இந்த ஹாஸ்பிடல் பேரைப் போட்டு, கொங்கு மாவட்டங்கள்ல, தாறுமாறா போஸ்டர் ஒட்டிட்டாரு. தகவல் தெரிஞ்சு, அந்த பெரிய டாக்டர் ஆடிப்போயிட்டாராம்''
''கூப்பிட்டு, 'செட்டில்' பண்ணிட்டாரா?''
''இல்லை. 'நம்ம ரெண்டு பேரும் ஒரே ஆளுங்க. எதுக்கு அடிச்சிக்கணும்'னு சமாதானம் பேசிருக்காரு. ஆனா, அவரு ஒத்துக்கலையாம். அப்புறம், பெரிய டாக்டர், மணமான சீனியர் மந்திரியைப் பிடிச்சு, அந்த எம்.எல்.ஏ., தலைவரை 'ஆஃப்' பண்ணிருக்காரு. அதோட தொடர்ச்சி தான், ராம்நகர்ல நடந்த கலவரம்'' என்றாள் சித்ரா.
''பிரச்னைய முதல்ல ஆரம்பிச்சதே, அந்த ஹாஸ்பிடலோட தொடர்புடைய 'மெடிக்கல் ரெப்' பசங்க தான்னு, அந்த தலைவரு சொல்றாரு. நிஜமாவா?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''அது தெரியலை. ஆனா, இவரோட ஆளுங்க பண்ணுனது, அப்பட்டமான அராஜகம். மூணு லேடி போலீஸ் ஆபீசர் வந்த பிறகும், கெட்ட வார்த்தை பேசிக்கிட்டே தடிகளை வச்சு, பசங்களை அடிச்சிருக்காங்க. அதுல ஒருத்தன், ஒரு லேடி போலீஸ் ஆபீசரைப் பார்த்து, மோசமா பேசிருக்கான். எவ்ளோ தைரியம்னு போலீஸ்காரங்க கொந்தளிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''புது போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மீசையெல்லாம் பெருசா வச்சுக்கிட்டு, தோற்றத்துலயே மெரட்டுறாரு. என்ன செய்யுறாருன்னு பார்ப்போம்'' என்றாள் மித்ரா.
''ஊருக்குள்ள இப்பிடி பல பேரும் 'நானும் ரவுடி தான்'னு இறங்கிட்டா, ஊரு என்னத்துக்கு ஆகுறது மித்து?'' என்றாள் சித்ரா.
''இவுங்க மட்டுமா... 'பிரஸ்'ங்கிற பேர்லயே, சில பேரு, கட்டிடங்களைக் காலி பண்ணித் தர்றேன்னு ஆளுங்களை வச்சு மெரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு போலீஸ் ஆபீசர்கள்ட்ட 'ரெகமண்டேஷன்'க்கும் போறாங்க'' என்றாள் மித்ரா.
''நானும் சில விஷயங்கள் கேள்விப்பட்டேன் மித்து. இப்போ, ஓட்டல், பேக்கரிகளை குறி வச்சு, ஒரு 'குரூப்' கெளம்பியிருக்கு. சாம்பார்ல எலி கிடந்துச்சு. சாப்பாட்டுல பூரான் இருந்துச்சுன்னு சொல்லி, காசு கேட்டு மெரட்டி, பணம் பறிக்கிறது தான் இந்த கும்பலோட வேலை'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...பத்துப் பதினைஞ்சு நாளாத்தான் அடுத்தடுத்து இந்த மாதிரி புகாரா வருது. ஆனா...இல்லாத விஷயத்தைச் சொல்லி எப்பிடிக்கா மெரட்ட முடியும்?'' என்றாள் மித்ரா.
''செத்த பல்லி, பூரான்னு எதையாவது ரெடி பண்ணி, சத்தமில்லாமக் கொண்டு போயி, சாப்பாட்டுல வச்சிட்டு, கூட்டத்துல எந்திரிச்சு, 'சவுண்ட்' கொடுக்குறது. கடைக்காரங்க, 'வாங்க பேசிக்கலாம்'னு கூப்பிட்டா, அம்பதாயிரம் கொடுங்க, ஒரு லட்சம் கொடுங்கன்னு பேரம் பேசுறது'' என்றாள் சித்ரா.
''எங்கேயாவது அப்பிடி, பணம் பறிச்சிருக்காங்களா?''
''அது தெரியலை. ஆனா, கலெக்ட்ரேட் பக்கத்துல இருக்கிற கேரளா பேக்கரியில, பப்ஸ்ல புழு இருக்குன்னு, 'டுபாக்கூர் பிரஸ்'காரங்க சில பேரு, மெரட்டி, காசு கேட்ருக்காங்க. பேக்கரிக்காரங்க, ஸ்டேஷன் போக...அங்க ஒரு அம்பதாயிரம் பறிச்சிட்டு, 'அவுங்க கேக்குறதைக் கொடுத்துருங்க'ன்னு சொல்லிட்டாங்களாம். வேற வழியில்லாம, அம்பதாயிரம் கொடுத்திருக்காங்க''
''அதை முதல்லயே கொடுத்திருந்தா, அம்பதாயிரம் மிச்சமாயிருக்கும்ல'' என்று சிரித்தாள் மித்ரா.
''மித்து...ஓட்டல்ன்னு சொன்னதும், எனக்கு தொட்டிபாளையம் பிரிவுல ஒரு எம்.எல்.ஏ., திறந்து வச்ச ஓட்டல் ஞாபகம் வந்துச்சு. அந்த ஓட்டலோட ஓனரு, அம்பது, அறுபது லட்ச ரூபா வசூல் பண்ணிட்டு 'எஸ்கேப்' ஆயிட்டாரு'' என்றாள் சித்ரா.
குறுக்கிட்ட மித்ரா, ''ஆளும்கட்சி எம்.எல்.ஏ., திறந்து வச்சதா?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள்.
''இல்லை. அவர் ஒரு காம்ரேட். அவரே திறந்து வச்சிருக்கார்னு, பல பேரு நம்பி, பணத்தைக் கொடுத்திருக்காங்க. அவரு, வலுவா 'கலெக்ஷன்' பண்ணிட்டு, ஓடிட்டாரு. கொடுமை என்னன்னா, இதே ஆளுதான், ஆனைமலையிலயும் ஒரு ஓட்டல் திறந்து, அங்கயும் இதே மாதிரி வசூல் பண்ணிட்டு 'எஸ்கேப்' ஆனவராம். அந்த ஓட்டலையும், இதே எம்.எல்.ஏ.,தான் திறந்து வச்சிருக்காரு''
''எம்.எல்.ஏ.,வைப் பத்திப் பேசவும், நம்மூர்ல 'சேலஞ்ச்' பண்ற எம்.எல்.ஏ.,வுக்கு வலது கரமா வலம் வர்ற நகைக்கடைக்காரரு ஞாபகம் வந்துச்சு''
''இலக்கிய அணிப் பதவியையும் பறிச்சாங்களே... அவரா'' என்றாள் சித்ரா.
''அவரே தான். போன வாரம், சிட்டிக்குள்ள ஒரு 'செயின்' கடையில, ஐ.டி.,'ரெய்டு' நடத்துனாங்களே. அப்போ, இவரும், குண்டான குமாரு ஒருத்தரும் சேர்ந்து தான், அந்த செயின்கடைக்காரர்ட்ட பஞ்சாயத்து பண்ணிருக்காங்க. கடைசியில, அம்பது லட்ச ரூபா வாங்கி 'பங்கு' போட்டுக்கிட்டதா தகவல்'' என்றாள் மித்ரா.
''இவுங்களை மாதிரியே, செல்வபுரம் ஏரியாவுல, கார்ப்பரேஷன் ஏ.இ., ஒருத்தரும், கவுன்சிலர் ஹஸ்பெண்ட்டும் சேர்ந்து 'காட்டு'த்தனமா வசூல் பண்ணி 'பங்கு' போடுறாங்க'' என்றாள் சித்ரா.
''ஊரெல்லாம் 'பங்காளி'க ராஜ்யமாயிருச்சு'' என்று சிரித்தாள் மித்ரா.
''மேட்டரைக்கேளு...சிட்டிக்குள்ள இன்னும் 'யுஜிடி கனெக்ஷன்' கொடுக்கவே ஆரம்பிக்கலை. ஆனா, இவுங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து, 100 வீடுகளுக்கு மேல, 'இல்லீகல் கனெக்ஷன்' கொடுத்திருக்காங்க. வாட்டர் கனெக்ஷனுக்கு கணக்கே இல்லியாம். இதெல்லாம், பெரிய ஆபீசர்க்குத் தெரியுமாம்'' என்றாள் மித்ரா.
''பாவம்...அவருக்குத் தெரியாமலே, பல ஆபீசர்களோட 'புரமோஷன் லிஸ்ட்' மேல போயிருக்காம். அந்த ஆபீசர்கள் எல்லாருமே, வேலையே பார்க்காம, காசு பண்றதுல பலே கில்லாடிங்க. இடையில, 'இன்சார்ஜ்'ஜா இருக்கிறப்போ, லேடி ஆபீசர் பண்ணுன வேலையாம்'' என்றாள் மித்ரா.
''மித்து...சிக்னல் 'டெண்டர்' விவகாரம், சி.எம்., காது வரைக்கும் போயிருச்சாமே?'' என்றாள் சித்ரா.
''ஆனா...ஏதோ பொய் சொல்லி சமாளிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்க்கா'' என்றாள் மித்ரா.
''டிஎம்கேகாரங்க நல்லா சம்பாதிச்சிட்டு இருந்தாங்க. நாங்க தான் 'ஸ்டீம்லைன்' பண்ணிருக்கோம்னு அடிச்சு விட்ருக்காங்க. ஆனா, 'ரீ டெண்டர்' வந்தாலும் வரும்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''அக்கா...கார்ப்பரேஷன் அக்கவுன்ட்ஸ் செக்ஷன்ல இருக்கிற 'கிளார்க்' ஒருத்தருக்கு 'கப்பம்' கட்டாம, எந்த 'பில்'லுமே 'ஓகே' ஆவுறதில்லைன்னு கான்ட்ராக்டர்க புலம்புறாங்க. ஆபீசர்களை 'கரெக்ட்' பண்ணி வச்சிருக்கிறதால, ஏழு வருஷமா அவரை மாத்தலையாம்'' என்றாள் மித்ரா.
''மித்து....இதே மாதிரி, பி.ஐ.டபிள்யு.,ல எஸ்.எஸ்.ஐ., ஒருத்தரு, ஏழு வருஷமா அசையாம இருக்காரு. கரெக்டா, 'பார்'கள்ல இருந்து கலெக்ஷன் பண்ணி, ஆபீசர்களுக்குக் கொடுத்துர்றதால, அவரை அசைக்க முடியலையாம்'' என்றாள் சித்ரா.
''மக்கள்ட்ட நல்ல பேரெடுத்துக்கிட்டிருந்த எஸ்.பி.,சுதாகரையும், டி.சி.,ரம்யா பாரதியையும் ரொம்பச் சீக்கிரமே மாத்திட்டாங்க. ஆனா, சிட்டில வசூல் சாதனை படைக்கிற போலீஸ் ஆபீசர்களை மட்டும் ஏன் மாத்தலையோ?'' என்று மித்ரா கேட்கும்போதே, 'சித்ரா...சித்ரா' என்று பெயர் சொல்லி அழைக்க, 'ரிசல்ட்' வாங்க எழுந்து ஓடினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X