"பி.என்.,ரோட்டுல நடந்த, நம்ம ஊரு... துள்ளி விளையாடு நிகழ்ச்சிக்கு போயிருந்தியே; எப்படி இருந்துச்சு,'' என, கேள்வி கேட்டபடி, சோபாவில் வந்தமர்ந்தாள் சித்ரா.
"படுஅமர்க்களமா இருந்துச்சுக்கா. திருப்பூர்காரங்க, பொழுதுபோக்க இடமில்லாம தவிக்கிறது, பட்டவர்த்தனமா தெரிஞ்சது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, வயசு வித்தியாசமின்றி, ஜாலியா "என்ஜாய்' பண்ணுனாங்க. "கிட்டத்தட்ட, 30 வருஷமா இந்த ஏரியாவுல குடியிருக்கேன்; ஜனங்க சந்தோஷமா, ஜாலியா இருக்கிறதை பார்க்கும்போது, மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு'ன்னு, அந்த ஏரியாக்காரரு ஒருத்தர், "சர்ட்டிபிகேட்' கொடுத்தாரு,'' என, பெருமிதமாக சொன்னாள் மித்ரா.
"அதெல்லாம் சரி, மாநகராட்சியில, தனியார் நிறுவனம் குப்பை அள்ளும் விவகாரம் பெரிசாயிட்டே இருக்குதாமே,'' என, ரூட்டை மாற்றினாள் சித்ரா.
"நம்மூர் மட்டுமின்றி, எந்த ஊரா இருந்தாலும் சரி, குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வே ஏற்படுத்த மாட்டாங்க. ஏன்னா, குப்பையில, பல கோடி புரளுது. அதனால, அவ்ளோ சீக்கிரத்தில் தீர்வு ஏற்படுத்த மாட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"நம்மூர்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லவே இல்லையே,'' என, சித்ரா துருவ, ""அதுவாக்கா, குப்பை அள்ளும் தனியார் நிறுவனம், ஒப்பந்தம் செய்றப்போ, தினமும், 730 பேர், வீடு வீடா குப்பை சேகரிப்பாங்கனு சொல்லியிருந்தாங்க. ஆனா, 350 பேர் கூட வேலையில இருக்க மாட்டாங்க. வீடு வீடா குப்பை வாங்கினாலும், வீதியில இருந்து எடுத்துட்டுப் போறதுல பிரச்னை ஆகிடுது. இருந்தாலும், குப்பைக்கு எடை போட்டு, தினமும் "பில்' வாங்கிட்டு இருக்காங்க. ஆளும்கட்சி கவுன்சிலருங்க, தனியார் நிறுவனத்துக்கு எதிரா போர்க்கொடி தூக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, தனியா "மீட்டிங்' நடத்த ஏற்பாடு செஞ்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"இதுக்கு முன்னாடி, மகளிர் சுய உதவிக்குழு மூலமா, குப்பை அள்ளுனாங்க. ஒவ்வொரு குழுவும், அந்தந்த ஏரியா கவுன்சிலர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துச்சு. குப்பையில, பல லகரம் சம்பாதிச்சாங்க. அதனாலதான், தனியாருக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இப்பவும், குடைச்சல் கொடுக்குறாங்கன்னு நெனைக்கிறேன்,'' என, பழங்கதையை எடுத்து விட்டாள் சித்ரா.
"நீங்க சொல்றதும், சரிதான். ஈமு கோழி மோசடி நிறுவன சொத்து திருடுபோன வழக்கில், போலீஸ் ஏட்டையும் கைது செஞ்சு, ஜெயிலில் தள்ளிட்டாங்களே,'' என, மித்ரா கேட்க, "ஆமாப்பா, அந்த வழக்குல முக்கிய குற்றவாளிகள் மூணு பேரை ஏற்கனவே கைது செஞ்சு, சிறையில் தள்ளியிருந்தாங்க. போலீஸ் ஏட்டு மட்டும் தப்பிச்சிருந்தார். அவர், "மெடிக்கல் லீவு' எடுத்து, "எஸ்கேப்' ஆகியிருந்தார். சட்டச்சிக்கல் வரக்கூடும்னு நெனைச்சு, பல தரப்பிலும் விசாரிச்சு, கைது செஞ்சு, சிறையில் தள்ளியதோடு, "சஸ்பெண்ட்' உத்தரவும் பிறப்பிச்சிருக்காங்க. சட்டம் எல்லாத்துக்கும் பொதுவானதுதானே,'' என்றாள் சித்ரா.
"எஸ்.பி.,யையும், துணை கமிஷனரையும் வேறிடத்துக்கு மாத்திட்டாங்களே,'' என, மித்ரா கேட்க, "இட மாறுதலை எல்லா அதிகாரிகளுமே எதிர்பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. முதல்கட்டமாக, ரெண்டு பேர், "டிரான்ஸ்பர்' ஆகியிருக்காங்க.
அடுத்ததா யாருன்னு, அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு உலாவிக்கிட்டு இருக்கு. போலீஸ் கமிஷனரா? மாநகராட்சி கமிஷனரா? அல்லது கலெக்டரா? யாருக்கு "ஆர்டர்' வருமுன்னு, எதிர்பார்ப்பு உச்சகட்டத்துல இருக்கு. "டிரான்ஸ்பர் ஆர்டர்' வர்றதுக்குள்ள, எப்படியாவது, புதுசா கட்டியிருக்கிற, கலெக்டர் அலுவலகத்தை திறந்து, ஒரு நாளாவது, அங்க இருக்கற, இருக்கையில அமரணும்னு ஆசைப்படுறாரு. நடக்குமான்னு தெரியலை; பார்ப்போம்,'' என்றாள் சித்ரா.
"நம்மூருக்கு குஷ்பூ வரப்போறாங்களாமே,'' என, குஷியுடன் கேட்டாள் மித்ரா.
"ஆமாப்பா, த.மா.கா., சார்பில் மக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்துனாங்க; வாசன் வந்துட்டு போயிருக்கார். ஏகப்பட்ட கூட்டம்;
பலரும் கருத்து சொன்னாங்க. அதனால, காங்கிரஸ் தரப்புல மாநாடு ஏற்பாடு செஞ்சு, அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்பூவை வர வைக்கிறாங்க,''என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE