அமைதியான மனதினிலே..!| Dinamalar

அமைதியான மனதினிலே..!

Updated : நவ 06, 2015 | Added : நவ 05, 2015 | கருத்துகள் (3)
Share
அமைதியான மனதினிலே..!

மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக்கழிக்கிறது. ஏனெனில் அமைதியாக இருக்கிறபோதுதான் மனம் நிம்மதியாக
இருக்கிறது. நிறைவாக உணர்கிறது.

அமைதியற்றிருக்கிற மனம் எதையும் சாதிப்பதற்கியலாமல் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கும். எனவேதான் வீடும், நாடும் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம்.அமைதி என்பது சப்தமில்லாத சூழல் அல்ல. சப்தம் இல்லாத சூழலை நிசப்தம் என்று அழைக்கலாமே தவிர அமைதியான சூழல் என்று கருதமுடியாது. மொழியற்ற நிலைமை கூட மவுனம் தானே தவிர அமைதியாகாது. அமைதி என்பது வெளியே அல்ல உள்ளே இருக்கிறது. அமைதி மனம் சார்ந்தது.

அழகிய கவிதை :“அமைதியாகச் சிந்தித்துவிட்டு வாருங்கள்” என்றால் ஓசையில்லாத ஓர் இடத்தில் உட்கார்ந்து யோசிப்பதல்ல. “புறச்சூழல்களால் பாதிக்கப்படாதிருப்பது தான் உண்மையான அமைதி” என்பார் காந்தியடிகள். அமைதி என்பது இருப்பதும் அல்ல இல்லாததும் அல்ல; அது உணர்வு மட்டுமே. “அமைதி ஒரு அழகிய கவிதை. அது ஆக்கப்படுவதற்கு முன் இங்கே இல்லை. அதை கற்பனைசெய்யவும் முடியாது” என்று ஆங்கில அறிஞர் ஒருவர் சொல்கிறார்.

உலக மக்கள் அமைதியைத் தான் விரும்புகிறார்கள். பாதுகாப்பான வாழ்வுதான் இன்று பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அந்தப் பாதுகாப்பைப் போர்கள்தான் உறுதி செய்கின்றன என்பது விசித்திரமானது. தன்னுடைய படைபலம், ஆயுதபலம், அணுவின் பலம் போன்றவற்றை வைத்துத்தான் ஒவ்வொரு நாடும் அயல்நாடுகளை அச்சுறுத்தி வைத்திருக்கின்றன. போர்கள்தான் அமைதியை உறுதிசெய்கின்றன. எனவேதான் போருக்குப்பின் அமைதி என்று கூறுகிறோம்.
ஜப்பான் உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவைச் சீண்டும் விதமாக, அந்நாட்டுத் துறைமுகத்தில் குண்டுமழை பொழிகிறது. அதன் எதிரொலியாக அமெரிக்கா ஜப்பான் மீது மறுதாக்குதல் நடத்துகிறது. ஹிரோஷிமா-நாகசாகி அழிவுகள் குறித்து நமக்குத் தெரியும்.
உலகில் மிக அதிகமான மனித இழப்பு இந்தத் தாக்குதலால் தான் நிகழ்ந்துள்ளது. அச்சமில்லாத அமைதி உலக நாடுகள் மனித மேம்பாட்டுக்காகச் செலவழிப்பதைவிட அதிகமாகத் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக கோடிக்கணக்கான பில்லியன் டாலர்களைச் செவழிக்கின்றன. உலகையே துவம்சம் செய்துவிடக்கூடிய அணு ஆயுதங்கள் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ளனவாம். இந்த அச்சுறுத்தலால் உலகத்தின் பிறநாடுகளை மிரட்ட முடியுமே தவிர அச்சமில்லாத அமைதியை ஏற்படுத்த முடியாது. அதற்கு மனித மனங்கள்தான் தயாராக இருக்கவேண்டும். தீர்மானிக்க வேண்டும்.“கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்” என்று பாவேந்தர் பாடியது போரினால் அமைதி போய்விடும் என்பதால்தான். ”போரினால் அமைதி கெடும். அதற்குக் காரணமாக நான் இருக்கமாட்டேன்” என்று போர் முனையில் ஓர் இத்தாலிய ராணுவவீரன் போரிட மறுத்துத் துாக்கிலிடப்பட்ட வரலாறும் ஒன்றுண்டு.

மனதில் அமைதி வேண்டும். அந்த அமைதியை மனமே ஏற்படுத்த வேண்டும். உலக அமைதியில் மட்டுமல்ல உள்ளூர் அமைதியிலும் நமது மனமே அதிகமாய் ஒரு மந்திரச் சாவியை வைத்திருக்கிறது. அமைதியில்லாமல் தவிப்பதாக அங்கலாய்க்கிறவர்களில் பலர் குழம்பிய குட்டைகளாக இருப்பார்கள். ஆழம்குறைந்த குட்டைதான் என்றாலும் அது கலங்கியிருந்தால் அதன் அடியில் இருப்பது எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால் தெளிவாக இருக்கிற நீர்நிலை ஆழம் மிகுந்திருந்தாலும் அதன் அடியில் இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.

புத்தனின் வாசகங்கள் “குழப்பம் என்பது அமைதியின்மை எனினும் குழப்பத்தை அமைதியா கவே அணுக வேண்டும்” என்பார் .அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன். மனதில் போராட்டமும் குழப்பமும் மிகுதியாகிறபோது அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு புத்தபிரான் அருளி யிருக்கிற அற்புதமான வாசகங்கள் நமக்குப் பெரிதும் உதவும். “கண்களை மூடுவதற்குப் பதிலாக மனதை மூடவேண்டும்” என்பார் அவர். நம்மில் பலர் தியானத்திலும் தவத்திலும் கண்களை மூடிக்கொண்டிருப்போம். ஆனால் மனம் திறந்துகிடக்கும். அது ஊர் சுற்றும். அசிங்கங்களை பார்க்கும். மனதை மூடுவதுதான் மன அமைதிக்கான வழி.

அமைதியாக இருக்கிறவர்கள் ஆண்டவனின் அருளைப் பெற்றவர்கள். அவர்கள் தம்மை வருத்தாமலும் தவங்கள் இயற்றாமலும் வரம் பெறும் மாமனிதர்கள். அமைதியைப் பெறுவது எப்படி? அமைதியாக இருப்பது எப்படி? என்பதை அனுபவங்களால் மட்டுமே அறிந்து கொள்ளமுடியும்.

“பார்த்தது கோடி; பட்டது கோடி; சேர்த்தது என்ன சிறந்த அனுபவம்“ என்பார் கவியரசர் கண்ணதாசன். அமைதியின்மை என்பது பெரும்பாலும் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறபோதுதான் நேரும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு பிரச்னைகளுக்குள் சிக்கிக்கொண்டது எப்படி என்பதைப் புரிந்துகொண்டால் போதும்.

பிரச்னைகளால் அமைதியை இழக்கிறவர்கள் அவற்றை அணுகுகிற நுட்பத்தை அறிந்திருப்பதைப்போல, அவை தம்மை அணுகா வண்ணமும் பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. வந்த நோய்க்கு மருந்திருக்கிறது என்பதற்காக, வரட்டும் நோயென்று வரவேற்கக் கூடாது. வராமலேயே பார்த்துக்கொள்ள வேண்டும். இது பிணிகளுக்கு மட்டுமல்ல பிரச்சினைகளுக்கும் பொருந்தும்.மறப்போம் மன்னிப்போம் மன அமைதியை உறுதிசெய்கிற வழிகளில் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் ஒன்றாகும். அமைதியைப் பலர் அன்றாடம் இழப்பதற்கு அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதுதான் காரணம்.

'மறப்போம் மன்னிப்போம்' என்கிற மாபெரும் எண்ணத்தைப்போல அமைதி தருகிற அரிய வழி அறவழி வேறில்லை. உலகின் மிகச்சிறந்த மகான்கள் இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதினும் மேலாய் செய்தும் காட்டியிருக்கிறார்கள். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்“ எனும் வள்ளுவர்தம் வாழ்க்கை நெறி அமைதியான வாழ்க்கைக்கு அருந்துணை புரியும். “பகையால் பகைமையை அழிக்க முடியாது. அன்பால் மட்டுமே பகையை அழிக்க முடியும்” என்பார் புத்தபிரான்.

அழகானது அமைதி அமைதியாகவே உலகில் பல புரட்சிகள், சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அமைதியாகவே மனம் அனுபவிக்கிறது. ஆனந்தமடைகிறது. அமைதி அழகானது. ஆழமானது. தெய்வீகமானது. எல்லோருக்கும் தேவையானது. அமைதியாக நாம் இருக்க விரும்புவதைப் போல அடுத்தவர்க்கும் அதை நாம் அளித்து மகிழவேண்டும். மறுபரிசாக அவர்களும் அமைதியைத் தருவார்கள்.

சீனாவில் 'அமைதி' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அமைதியான நதி, ஆள் அரவமில்லாத பூங்கா, சலனமில்லாத குளம், சந்தடியில்லாத சாலை என்று பல்வேறு ஓவியங்கள் போட்டிக்கு வந்திருந்தன. ஆனால் போட்டியை அறிவித்த அரசன் இடிமின்னல், புயல், கடுமையான மழை, மரங்களின் பேயாட்டம், கடலின் சீற்றம், காட்டுவிலங்குகளின் கூக்குரல், தலைதெறிக்க ஓடும் மக்கள் காணப்படும் ஓவியத்தைப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கிறார். “அரசே இதுவா அமைதி?” என்று அமைச்சர் கேட்க “அமைச்சரே! ஓவியத்தைச் சற்று உற்றுப்பாருங்கள். பதட்டமான இந்தச் சூழலிலும் அமைதியாக ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டிருக்கிறது.

புறச்சூழல் எப்படியிருந்தாலும் அமைதியாக அப்பறவை நமக்கு உணர்த்துவது அமைதி புறத்திலில்லை அகத்திலென்று புரிகிறதா?” என்ற அரசரிடம் 'ஆம்' என்று ஒப்புக்கொள்கிறார் அமைச்சர்.அமைதி வெளியே இல்லை; நம் அகத்தில்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.-ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர். 94441 07879

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X