ஒரு கையில் டீ கோப்பை, மறுகையில் அரிசி முறுக்கு தட்டுடன், ""அக்கா, தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்றபடி, "டிவி'யை "ஆன்' செய்தபடி, சோபாவில் வந்தமர்ந்தாள் மித்ரா.
""ஒனக்கும், தீபாவளி வாழ்த்துக்கள்,'' என, பதிலுக்கு வாழ்த்து சொன்ன சித்ரா, ""எதுக்கெடுத்தாலும், கமிஷன் வாங்குறதுலயே, மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்துறாங்க,'' என, சரவெடி போல் வெடித்தாள்.
""ஏன்கா, என்னாச்சு; கமிஷன் இல்லைன்னா, அவுங்களுக்கு வாழ்க்கையே இல்லையே,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.
""தன்னிறைவு திட்டத்துல, ஏற்றுமதியாளர் சங்கம் சார்புல, நொய்யல் கரையோரம் ரோடு போடுற வேலை துவங்கியிருக்கு. அடிக்கல் நாட்டு விழா நடந்ததுல இருந்து, அந்த வார்டு கவுன்சிலர் தொல்லை தாங்க முடியலை. ஒப்பந்ததாரரையும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் கமிஷன் கேட்டு நச்சரிச்சுட்டு இருக்காரு. பதில் கூற முடியாமல் வெறுத்துப்போன அதிகாரிகள், "இது, பொதுப்பணித்துறை வேலைங்க; நாங்க எதுவும் செய்ய முடியாது; வேணும்னா, சம்பந்தப்பட்ட மினிஸ்டரை பாருங்கனு அனுப்பிட்டாங்க.
""விடுவாரா கவுன்சிலர், வேலை நடக்கற இடத்துக்கு நேர்ல போயிருக்கார். அவரை பார்த்த வார்டு மக்கள், "குடிநீர் வரலை; கொசு தொல்லை'னு முற்றுகையிட ஓடி வந்திருக்காங்க. மக்கள் வர்றதை பார்த்ததும், "இப்ப கௌம்பறேன்; கமிஷன் இல்லாட்டியும் பரவாயில்லை. தீபாவளிக்காவது சீக்கிரமா பாருங்க'னு சொல்லிட்டு, பைக்கில் பறந்துட்டார். பொதுமக்கள் பங்களிப்பில் வேலை நடந்தாலும், இவுங்களுக்கு "படி'யளக்க வேண்டியிருக்கே என, பொதுப்பணித்துறையினர் நொந்து போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஆளுங்கட்சி நிதிக்குழு தலைவர், கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி செஞ்சாரே, அதுல, உள்குத்து ஏதாவது இருக்கா,'' என, கேட்டாள் மித்ரா.
""இருக்காமலா, குப்பை எடுக்கற தனியார் நிறுவனம், மாநகராட்சியின் முக்கிய புள்ளியை மட்டும் "லம்ப்'பா கவனிக்குது. கவுன்சிலருக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் தான் கெடைக்குது. 180 "லேபர்' பணியாற்றிய வார்டுல, இப்ப, 65 பேரே இருக்காங்க.
மக்களுக்கு பதில் சொல்ல முடியாம தவிக்கிறார். போக்குவரத்து தொழிற்சங்க செயலாளராக இருந்து, ஊழியர்களை மிரட்டி பணிய வைக்கும் இவரால, தனியார் நிறுவனத்தை மசியவைக்க முடியலை. அமைச்சர் வரைக்கும் விஷயம் போயிருக்கு. உடனே, "ரெவ்யூ' மீட்டிங் நடத்த ஏற்பாடு செஞ்சிருக்காங்க.
""கூட்டம் நடந்த அன்னைக்கு, காலை, 7:00 மணிக்கு, அமைச்சரை பார்க்க போயிருக்கார். அந்த நேரத்திலும், தனியார் நிறுவன அதிகாரி, அங்க இருந்திருக்காரு. கவுன்சிலரிடம் பேசியபோது, "ரெவ்யூ மீட்டிங்'கில் பேசுங்க; நீங்க பேசினால் பார்த்துக்கலாம்'னு சவால் விட்டிருக்காங்க. "மீட்டிங்' ஆரம்பிச்சதும், கவுன்சிலர்களை வெளியே போகச் சொல்லியிருக்காங்க. அதனால, நிலைக்குழு தலைவர்களும் கலந்துக்கல. சவால்விட்ட மாதிரியே, நடந்து போச்சேனு, ஆத்திரம் தாங்காம, தீக்குளிக்க முயற்சி பண்ணியிருக்காரு. ஒடம்பெல்லாம் புண்ணாகி, இப்ப, மருந்து போட்டுட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.
""தீக்குளிச்சிருந்தா, என்ன ஆயிருக்கும்? நெனைக்கவே பயமா இருக்குதுக்கா,'' என்றாள் மித்ரா.
""கேட்ட உனக்கே, இப்படி இருக்குனா, கலெக்டருக்கு எப்படி இருந்திருக்கும்? அமைச்சர் இருக்கறப்பவே இப்படி நடந்திடுச்சேனு ஆடிப்போயிட்டாரு. இவ்ளோ பிரச்னை நடந்துக்கிட்டு இருந்தும், "சிட்டி மம்மி' கண்டுக்காம இருந்திருக்காங்க. கவுன்சிலர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஆளுங்கட்சி கவுன்சிலர், "காட்டன்' முத்து கொலை செய்யப்பட்டு மூணு வருஷமாச்சு; இன்னும் கொலையாளி களை கண்டுபிடிக்கலையே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""எனக்கென்னமோ, உட்கட்சி விவகாரத்துல கொலை நடந்திருக்கும்னு நெனைக்கிறேன்; ஆளுங்கட்சிக் காரங்களும் கண்டுக்காம
இருக்காங்க. போலீஸ்காரங்களும் கண்டுக்கறதில்ல; சொந்தக்காரங்களும் விட்டுட்டாங்க,'' என சித்ரா சொல்ல, ""நீங்க மட்டும் மறக்காம, ஒவ்வொரு வருஷமும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க; வழக்கு, ஒரு இஞ்ச் கூட நகராம இருக்கே,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.
அரிசி முறுக்கு தட்டு காலியாகி இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE