உயிர் உள்ளவரை உடற்பயிற்சி:நாளை உலக சர்க்கரை நோய் தினம் | Dinamalar

உயிர் உள்ளவரை உடற்பயிற்சி:நாளை உலக சர்க்கரை நோய் தினம்

Added : நவ 13, 2015 | கருத்துகள் (4)
Advertisement
உயிர் உள்ளவரை உடற்பயிற்சி:நாளை உலக சர்க்கரை நோய் தினம்

உலக அளவில் அதிக மக்களை பாதிக்க கூடிய, அதிக மக்களால் பேசப்படக் கூடிய நோய் சர்க்கரை நோய். 2000ம் ஆண்டு உலக அளவில், 17.10 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.தலை சிறந்த சர்க்கரை நோய் வல்லுனர்கள் 2030ல், 36.6 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என்று முன்கூட்டியே நிர்ணயித்தனர். ஆனால், நடந்ததோ வேறு. 17 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2013ம் ஆண்டிலேயே 38.2 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.சர்க்கரை நோயைப் பொறுத்தவரை, உலகத்தின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது.
சர்க்கரை நோயின் வளர்ச்சி, கணக்கிட்டதை விட மிக அதிகமாகவும், வேகமாகவும் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் 60 சதவீதம் சர்க்கரை நோயாளிகள், நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. 'கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோய்', ஒரு நோயே அல்ல. 'கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய்', புற்று நோயை விடக் கொடிய நோயாகும்.
அனைத்து செல்களுக்கும் பாதிப்பு :இந்நோய் உடலில் உள்ள அனைத்து தசைகளையும், அனைத்து செல்களையும் பாதிப்படையச் செய்கிறது. இந்தக் கொடிய நோய் வராமல் தடுக்க முடியுமா? வந்தவுடன் இதன் விளைவுகளைத் தடுக்க முடியுமா? இந்நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியுமா?கடந்த 20 ஆண்டுகளில், வாழ்க்கை முறை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை ஆராய்வோம். மக்களின் 70 சதவீத உடல் உழைப்பு குறைந்து விட்டது. இந்த உடல் உழைப்பு, 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் மிக அதிகமாகவும், 30 வயதிலிருந்து 50 வயதிற்குள் அதிகமாகவும் குறைந்திருக்கிறது. இதனை தவிர்க்க சராசரியாக ஒரு மனிதன் தினமும் 10 ஆயிரம் அடிகள், அதாவது 5 கி.மீ. நடக்க வேண்டும். உடற்பயிற்சி, நடைப் பயிற்சியால் கண்டிப்பாக சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
உடல் உழைப்பை குறைக்கும் கருவிகள் :அலுவலகத்தில் 'லிப்ட்' பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாதவர்களை விட, அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். டூவீலர் பயன்படுத்துபவர்கள், சைக்கிள் பயன்படுத்துபவர்களை விட அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். வீடு கூட்டுதல், கழுவுதல், துணி துவைத்தல், உரலில் மாவு அரைத்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதில்லை.
உணவு பழக்க வழக்கங்கள் :துரித உணவுகள் உண்ணும் பழக்கம், வேகமாகப் பரவி வருகிறது. பெரும்பாலான துரித உணவுகள் அதிக கலோரி சக்தி கொண்டவை. இவை சர்க்கரை நோயை உருவாக்கும். அளவான உணவு வளமான வாழ்வு தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காய்கறி உணவு தான் உயிர் காக்கும் உணவு. எனவே அதனை அதிகம் பயன்படுத்த வேண்டும். சர்க்கரை நோயால் ஏற்படும் அனைத்துப் பாதிப்புக்களும், மதுவினாலும் ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் மது அருந்தினால், அது மூன்று மடங்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு சமம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் இனிப்பு, கார வகைகளில் எவ்வளவு கலோரிச் சத்து இருக்கிறது என்பதை அறிவோம். 50 கிராம் அளவுள்ள சுவீட்டில் உள்ள கலோரி அளவு: லட்டு - 210, குலோப் ஜாமுன் - 282, அல்வா - 225, ஜிலேபி 310, ரசகுல்லா - 220, ரவா லட்டு - 205, மைசூர் பாகு - 215, அதே நேரம் 50 கிராம் எடையுள்ள இட்லியில் உள்ள கலோரி அளவு, வெறும் 40 தான்.இப்படி இனிப்பு பலகாரங்களில் அதிக கலோரி இருப்பதற்கு சர்க்கரை மட்டுமல்ல, அதில் உள்ள கொழுப்பு சத்தும் காரணமாகும். ஏனென்றால், இப் பலகாரங்களை சமைக்கும் போது, நாம் தீங்கு விளைவிக்கும் பூரித கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய் பயன்படுத்துகிறோம்.
பூரிதமாகா கொழுப்புள்ள எண்ணெய் பயன்படுத்தினால், கொழுப்பு சத்து அதிகரிக்காமல் பாதுகாக்கலாம். நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் உள்ள பூரித கொழுப்புசத்தின் அளவுகள் (சதவீதத்தில்): தேங்காய் எண்ணெய் 88, நல்லெண்ணெய் 22, பாமாயில் 48, சூரிய காந்தி எண்ணெய் 9, சோயா பீன்சிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் 13, கடலை எண்ணெய் 21.இதில் தயாரிக்கப்படும் 50 கிராம் அளவுள்ள தின் பண்டங்களின் கலோரி அளவு: முறுக்கு - 200, மிக்சர் - 298, சேவு - 240, உளுந்த வடை - 180.
இனிப்பு மட்டுமல்ல எதிரி :சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு மட்டுமல்ல எதிரி. அவர்கள் காரத்தையும் தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் சமைக்கப்படும் அனைத்து கார வகைகளிலுமே கலோரிச் சத்து அதிகமாக இருக்கிறது. முக்கியமாக 'டிவி' பார்த்துக் கொண்டு, நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் போது, அளவில்லாமல் சாப்பிட்டு விடுகிறோம். இதுவே உடல் பருமனுக்கும், சர்க்கரை நோய்க்கும், மாரடைப்பிற்கும் காரணமாகிறது. ரத்த சர்க்கரை அளவு, காலையில் சாப்பிடாமல் இருக்கும் போது 126க்கு மேலும், 5 இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் போது 180க்கு மேலும் இருந்தால், சர்க்கரை நோய் உறுதியாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.விரலில் ஊசியால் குத்தி எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, ரத்த நாளத்தில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவை விட 10 முதல் 20 கிராம் அதிகமாக இருக்கும். ரத்த அளவு பரிசோதனை முறை மாறும் போது, ரத்த சர்க்கரை அளவு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. முக்கியமாக ஸ்டிராயிடு மாத்திரை, லித்தியம் போன்ற மன வியாதிக்கான மாத்திரை, வலிப்பு மாத்திரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடலாம்.
உயிர்காக்கும் இன்சுலின் :ஏதோ போதை ஊசிகள் போல, இன்சுலின் நோயாளிகளை அடிமையாக்கிவிடும் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. இன்சுலின் உயிர் காக்கும் மருந்தாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் மரணம், இன்சுலின் கண்டுபிடித்த பின்னரே குறைந்தது. இதனை கண்டுபிடித்த பிரெடரிக் பேன்டிங் பிறந்த நாள், உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.மருத்துவரின் ஆலோசனைப்படி இன்சுலினைப் பயன்படுத்தலாம். இதனால் எந்தவித பாதிப்பும், பக்க விளைவும் இல்லை.முப்பது முதல் 40 சதவீத சர்க்கரை நோயாளிகள் இதய நோயினாலும், ரத்த கொதிப்பு நோயினாலும் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், இப்பாதிப்பு வராமல் தடுக்கலாம். இரண்டும் வெவ்வேறு நோய்கள் தான். சர்க்கரை நோய், இன்சுலின் சுரப்பது குறைவதாலும், இன்சுலின் வேலைத் திறன் குறைவதாலும் ஏற்படுகிறது. ஆனால், ரத்த அழுத்தம் ரத்த நுண்நாளங்களில், இதயத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயின் கொடுமையான பக்க விளைவு 'வலியில்லா மாரடைப்பு- மரணம்'. கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயால், இவ்வகை மரணங்களை நிச்சயமாக தடுக்கலாம்.சர்க்கரை நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவான உணவு, சத்தான உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும். துரித உணவுகள் உடல் நலத்தை கெடுக்கும் உணவுகளாகும். மன அழுத்தமும் சர்க்கரை நோயை உருவாக்கும். யோகா மூலம் மன அழுத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.-டாக்டர் ஜெ.சங்குமணிசர்க்கரை நோய் நிபுணர், மதுரைsangudr@yahoo.co.in

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivazhagan Nambi - Doha,கத்தார்
13-நவ-201514:45:10 IST Report Abuse
Arivazhagan Nambi பல் வேறு துறைகளில் சாதிக்க வேண்டுமென நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று சிந்திக்கலாமே..............வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
13-நவ-201510:41:36 IST Report Abuse
R.Srinivasan சர்க்கரை நோய் பரிசோதனை செய்யும்போது ..ஒவ்வொரு லேபிலும் ஒவ்வொரு அளவு காட்டுகிறது....இது எதனால் என்று தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Subbiah Ayyanar - Chennai,இந்தியா
13-நவ-201508:40:56 IST Report Abuse
Subbiah Ayyanar மிகவும் நல்ல தகவல்.
Rate this:
Share this comment
M. Ramasamy - Thoothukudi,இந்தியா
13-நவ-201517:34:32 IST Report Abuse
M. Ramasamyபயனுள்ள தகவல் மிகவும் முக்கியமானது ஆகும் இன்னும் அதிகமாக வழங்கினால் நாங்கள் விழிப்போடு இருக்க உபயோகமாக இருக்கும் நன்றி தினமலர் மு ராமசாமி தாசில்தார் தூத்துக்குடி மாவட்டம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X