நேசம் வளர்ப்போம்..தேசம் காப்போம் :இன்று- உலக சகிப்புத்தன்மை தினம்| Dinamalar

நேசம் வளர்ப்போம்..தேசம் காப்போம் :இன்று- உலக சகிப்புத்தன்மை தினம்

Added : நவ 16, 2015 | கருத்துகள் (10)
 நேசம் வளர்ப்போம்..தேசம் காப்போம் :இன்று- உலக சகிப்புத்தன்மை தினம்

“மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பி பயலேஇது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவல”என்ற பாடல் வரிகள் நாம் அறிந்ததே. இந்த வரிகளில் வருவது போல்தான் இன்றைய உலக நிலை. சகிப்பு தன்மை இல்லை; சகிப்புத்தன்மை இல்லை என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன, மொழி, மத பேதமின்றி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.மனித நாகரிகத்தின் முன்னோடிகளாக, மேற்கத்திய நாகரிகத்தின் முகவரிகளாக கருதப்படும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கடந்த நுாற்றாண்டு வரை வெள்ளையர்களே உலகில் சிறந்தவர்கள், ஆங்கிலமே சிறந்த மொழி என்ற கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவர்களின் காலனியாதிக்க செயல்பாடுகள், உலகின் பல நாடுகளில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்தது. அவை மக்கள் மனங்களிலிருந்து சகிப்புத்தன்மை என்ற நற்குணத்தை அசைத்துவிட்டது. 1905-ல் ஆங்கில அரசு மேற்கொண்ட, வங்கப்பிரிவினை இந்தியாவில் இந்து--இஸ்லாமியரிடையே பிளவை ஏற்படுத்தியது வரலாற்று உண்மை.
சகிப்புத்தன்மை :ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல், ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பது சகிப்புத்தன்மை என விளக்கம் கொள்ளலாம். சகிப்புத்தன்மை என்பது ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி. அந்த உணர்வை எந்த ஒரு சமூக நம்பிக்கைகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் உருவாக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவான முகவுரை “இந்தியா ஒரு சமயச்சார்பற்ற சகிப்புத்தன்மை கொண்ட நாடு” என விளக்குகிறது.ஆனால் சமயச்சார்பற்ற மற்றும் சகிப்புத்தன்மையுடைய பார்வை என்பது ஏதோ ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே தேவை என்ற பார்வை இருப்பதாக கருதப்படுகிறது. இது இந்திய குடிமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பொதுவான அம்சம்.
ஏற்றத்தாழ்வு :துன்பமும், துயரமும் நிறைந்ததாக இந்த உலகம் இருக்கிறது. அச்சமும், வெறுப்பும், சந்தேகமும், நம்பிக்கையற்ற தன்மையும் மனித மனங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை. மனித சமூகத்தை, நாகரிக பாதைக்கு அழைத்து வந்த பல நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், இன்று மனிதர்களிடையே சரிசெய்ய இயலாத பிரிவினைகளை உண்டாக்கி வருகிறது. ஆற்றல்மிகு அறிவியல் கண்டுபிடிப்புகள், 'நான்தான் பெரியவன்' என்ற மனோபாவத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது. இவை மனித சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நுாற்றாண்டில் உலகப் போர்கள் மூலமாகவும் வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும் அரங்கேறிய, மனித குல பேரழிவுகள் இன்றைய மனித சமூகத்திற்கு எவ்வித பாடத்தையும் கற்றுத்தரவில்லை என்பதை, உலகில் நிகழும் வெடிகுண்டு சப்தங்கள் உறுதி செய்கின்றன.
பலமானவர்கள், பலமானவர்களை மட்டுமே மதிப்பார்கள் என்ற நிலைப்பாட்டினால்தான் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயுத உற்பத்தியில் கோடிகளைக் கொட்டி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஒன்றாகி வரும் உலகில் கடின உழைப்பு, விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை தெளிவான ஆன்மிக உணர்வு, பட்டினியால் வாழும் மக்களிடம் காட்டும் மனித நேயம், கல்வி வேலைவாய்ப்பில் நேச மனப்பான்மை, சர்வதேச நல்லுறவு ஆகியவற்றை பேணுவதன் மூலம் ஏற்றத்தாழ்வை நீக்க முடியும்.
யார் சகிப்புத்தன்மைஉடையவர் :கருத்து வேறுபாடுகள் எழுதல் என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று. ஆனால் வேறுபாடுகளை களைவதற்கான வழி அறவழியாக இருக்க வேண்டும். சகிப்புத் தன்மையற்றவர்களின் தேர்வே வன்முறை மார்க்கம். வன்முறை என்னும் வாள் முனையில், யாருடனும் நல்லுறவு பேண இயலாது; யாருக்கும் நல்வாழ்க்கை வழங்க இயலாது. எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே சகிப்புத்தன்மையுடையவர். அவர் தன்மீதான விமர்சனங்களுக்கு அறவழியிலேயே விளக்கங்களை தருகிறார். தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது, பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல்பவரே சகிப்புத்தன்மையுள்ளவர் எனக்கருதலாம்.
சகிப்புத்தன்மை வளர :உலகம் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கிறது. இன, மத சச்சரவுகள், வகுப்பு பூசல்கள் ஆகியவற்றை இல்லை என மறுக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ முடியாது. ஆனால் இவற்றுக்கான தீர்வை சமாதான முறையில், சகிப்புத்தன்மை உணர்வுடன் நாம்தான் காண வேண்டும். உலக அளவில் சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டால்தான் சகிப்புத்தன்மை வளரும். இதற்கான முயற்சி ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரிடத்திலிருந்தும் தொடங்கப்பட வேண்டும்.
“மதங்கள் என்பது தீவுகள் போன்றது. அன்பு, சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்களால் அவற்றை இணைத்தால் மத ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும்”“மத உணர்வு ஆன்மிக உணர்வாக மலர வேண்டும்” என்ற மறைந்த மாமேதை அப்துல்கலாமின் வரிகளை, சகிப்புத்தன்மை விரும்புவோர் அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.மக்கள் மனங்களிலிருந்து வெறுப்பைத் துடைத்து அழிப்பதே சகிப்புத்தன்மை நாடுவோரின் முக்கிய பணி என உணர வேண்டும். பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள் பிராந்தியங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் மனித நேய உணர்வுகளை நமது குழந்தைகளுக்கு போதிப்பதன் மூலம் சகிப்புத்தன்மை வளரும்.
புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, ஜாதி மதப்பித்து என்னும் சனி(இருள்) தொலைந்து, சமத்துவம் என்னும் ஞாயிறு (ஒளி) பிறக்க அன்பு, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.-முனைவர் சி. செல்லப்பாண்டியன்உதவிப் பேராசிரியர்தேவாங்கர் கலைக்கல்லூரிஅருப்புக்கோட்டை.78108 41550We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X