அன்பென்ற மழையிலே நனைவோம்..!| Dinamalar

அன்பென்ற மழையிலே நனைவோம்..!

Added : நவ 18, 2015 | கருத்துகள் (2)
 அன்பென்ற மழையிலே நனைவோம்..!

மற்றவர்கள் போற்ற வேண்டும், மற்றவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும், ஊர் உலகம் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் நிம்மதியைக் கெடுத்துவிடும். நம் பலவீனங்களோடும் நம் முகத்தோடும், இயல்பாய் நாமாக நாம் வாழ்வதே சாலச்சிறந்தது என உணருங்கள்.

ப்போது பார்த்தாலும் ஏதோஒரு வெறுமை, பேசும்சொற்களில் சலிப்பு, யாரும் இல்லாமல் தனித்துவிடப்பட்டது போன்ற உணர்வு, எதையாவது மனதில் போட்டுக் குழப்பி வருத்தத்தோடு வாழும் வாழ்க்கை! நம்மில் பெரும்பாலோர் இப்படி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.சின்ன பலுானுக்கும் ஒரு ரூபாய் மிட்டாய்க்கும் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளின் இன்பத்தைக்கண்ட பின்னும்கூட, நிம்மதி இழந்த மனிதர்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே! வாழ்க்கை ஓடுதளத்தில் வேகமாய் ஓடியும் கூட, மேலேற முடியாத வினோத விமானங்களாய் மாறிப்போனது ஏன்? புரிந்துகொள்ள முடியாத
புதிராக நம் வாழ்க்கையை மாற்றியது யார்? மாற்ற முடியாதா இந்த வாழ்வின் போக்கை?
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற
புறநானுாற்றுப் பாடல் வரி நமக்குதான். அர்த்தமற்ற லட்சியங்களுக்காக வாழ்வைப்பணயம் வைத்தவர்கள், வாழ்வின் பொருளே பொருளோடு வாழ்வது என்பதற்குப் பதில், பொருள் தேடி ஓடுவது என்று ஓடியவர்கள், விட்டுக்கொடுக்காமல், எதற்கும் வளைந்து கொடுக்காமல் எதையாவது பற்றி நின்றவர்கள், எப்படி நிம்மதியின் சந்நிதியில் அமைதியைக் கொண்டாடி நிற்கமுடியும்?
கவலைகளை விட்டுவிடுங்கள் எல்லாவற்றையும் விட மன அமைதி முக்கியமானதாயிற்றே! மனத்தை அரிக்கிறது கவலை எனும் கரையான். நாம் அனுமதிக்காத வரை, நம்மை யாரும் துன்பப்படுத்தி விட முடியாது. தேவையற்ற கவலைகளால், நம்மை நாமே எரித்துக்கொள்கிறோம். ஊழ்வினைக்கும், நம்மைச் சூழ் வினைக்கும் நாமே காரணம். முன்னெடுத்த தவறான முடிவுகள் நம்மை முன்னேறவிடாமல் பின்னிழுத்துச் செல்கின்றன.
எதிர்பார்ப்பு வேண்டாம்
எதிர்பார்க்கத் தொடங்கும் போது ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்கவேண்டும். நாம் விரும்புகிற வகையில் மாற, மற்றவர்கள் ஒன்றும் பொம்மைகள் இல்லை என்பதை உணருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், வாழ்பவர்களின் வாழ்வில் நிம்மதிக்குப் பஞ்சமில்லை.
பொருட்காட்சியில் நம் குழந்தைகள் சோப் தண்ணீரில் முக்கி ஊதும்போது, வரும் மாயக்குமிழி போன்றதே, இந்த நிலையாமை உடைய வாழ்க்கை. இதை உணர்ந்து கொண்டால் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு மருத்துவர் யாருக்கோ சொல்கிற நோய்க் கூறுகள், உங்களுக்கு இருப்பதாக
வீண் கற்பனை செய்து, நிகழ்கால நிம்மதியை இழக்கமாட்டீர்கள். அச்சமே மிகக் கொடூரமான நோய் என்று உணருங்கள்.
போலி வாழ்க்கை வாழாதீர்கள் மற்றவர்கள் போற்ற வேண்டும், மற்றவர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும், ஊர் உலகம் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணம் நம் நிம்மதியைக் கெடுத்துவிடும். பிரபலமாய் மாறுவது எளிது, பிரபலமான பின் அதைத் தக்கவைப்பதற்காக நம்மையே நாம் பணயம் வைக்க வேண்டி வரும்.
நம் பலவீனங்களோடும் நம் முகத்தோடும், இயல்பாய் நாமாக நாம் வாழ்வதே சாலச்சிறந்தது என உணருங்கள்.எந்தச் சமயத்தின் வேதமும், பேதம் பார்க்கச் சொல்லவில்லை. திருக்காளத்தி மலையில், சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வடிந்த உடன், அம்பறாத்துாணில் இருந்து அம்பை எடுத்துத் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய, கண்ணப்ப நாயனாரைப் போல் எதையும் எதிர்பார்க்காமல்
அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். தடைகளைத் தாண்டி வெல்லுங்கள் ஒருசெயலைச் செய்யும்போதே அதன் வெற்றி தோல்விகளின் வாய்ப்புகளை எதிர்கொள்ளப் பழகுங்கள். பரந்த வானம் குறித்த பயமிருந்தால், பறத்தல் குறித்து பறவைகளால் நினைத்துப் பார்க்க
முடியுமா? எட்டாவது மாதத்தில் எட்டடி வைத்து நடக்கத் தொடங்கும் நம் வீட்டு சிறுகுழந்தைகள் எழுச்சியோடு நடப்பதற்கு, எத்தனை அடிகள் படவேண்டியிருக்கிறது. சிற்றுளி, மகத்தான மலையைக் கூடக் காலப்போக்கில் சிறுகற்களாய் மாற்றி
விடுகிறது. சிறு தோல்விகள் 'மா ரணம்' தந்து மரணத்தில் கொண்டு சேர்த்துவிடுகின்றன. உள்ளிருந்து உருக்கெடுக்கும் அச்ச உணர்வை விட்டுவிட வேண்டும்.
கவலை வலைகளில் சிக்குண்டு பின்னிக் கிடக்கும் நமக்கு ஆறுதலும் தேறுதலும் யார் தருவார்? விழுதலின் விழுது, எழுதலில் தான் உள்ளது. தோல்வியை ஒருபோதும் அவமானமாகக் கருதவேண்டாம். பள்ளிக்
கூடத்தில் இருந்து 'மூளை வளர்ச்சிக் குறைந்த மாணவன்' என்று வெளியே அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்குமளவு மாபெரும் விஞ்ஞானியாய் எப்படி மாறினார்.வென்றால் வெற்றிக்கோப்பையைப் பெற்றுக் கொள்வதும், தோற்றால் ஏன் தோற்றோம் எனக்கற்றுக்கொள்வதும்
நிம்மதிக்கு வழிவகுக்கும்.உறவுகளைப்பேணுங்கள் உறவுகள் உன்னதமானவை என்று
உணருங்கள். உறவுகளுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை. எல்லோரிடமும் குறைகண்டுபிடித்துக் கொண்டே இருந்தால் யாரும் நம்மோடு இருக்கப் போவதில்லை. உலகமயமாக்கலின் விளைவால் உலகம் முழுக்கப்
பயணிக்கத் தொடங்கிவிட்ட நமக்கு “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற சங்கப்பாடல் வரி, கண்டம் கடந்தும் அனைவரையும் அன்புபாராட்டக் கற்றுத் தருகிறது.
“அன்பிற் சிறந்த தவமில்லை” என்று பாரதியார் கூறுவதைப் போன்று அன்பைத் தவமாகக் கொள்வோம். அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனைய நாமும் நனைவோம். நிம்மதியின் சந்நிதியில் நாம் மனிதப்பூக்களாவோம்.நடந்ததை மறந்திடுங்கள் நடந்த நிகழ்வுகளையே நினைத்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை. 'இதுவும் கடந்துபோகும், எதுவும் கடந்துபோகும்' என்று உணருங்கள். வெற்றி வரும்போது மமதையும், தோல்வி வரும்போது
துடித்துப்போவதும் சரியானதன்று.தசரதன், 'பட்டாபிஷேகம்' என்று சொன்னபோதும், கைகேயி, 'மரவுரி தரித்துக் கானகம் போ' என்று சொன்னபோதும் செந்தாமரை போன்ற முகத்தோடு ஒன்றாகக் கருதிய இராமபிரானின் சமநிலை, அவருக்குப் பெருமை தேடித்தந்தது.
மலை குலைந்தாலும் நிலை குலையா மனமிருந்தால், எதுவும் நம்மை அண்டாது. எனவே நடந்ததை நினைத்து நடுங்குவதும், வரப்போவதை நினைத்து வருந்துவதும்
அவசியமற்றது.வேகமாய் முடிவெடுங்கள் வேகமும் விவேகமும் உடையவர்களை இந்த வாழ்வு கொண்டாடுகிறது. தயக்கத்தை தள்ளி நிறுத்துங்கள், எதையும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் தீர்க்கமாய் ஆய்ந்து வேகமாய் முடிவு எடுங்கள். எதையும் துணிச்சலாய் எதிர் கொள்ளுங்கள்.
நம் நிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம் நம் நாக்குதான் என்பதை உணர்ந்து,
சொற்களைத் தேவையான இடங்களில் பயன்படுத்தி, தேவையற்ற இடங்களில் மவுனம் சாதித்து வாழ்ந்தால் நிம்மதியாகப் பல்லாண்டு வாழலாம்.நமக்கு எந்த நேரத்தில் எதைத் தரவேண்டும் என்பது நம்மைப் படைத்து, ஒவ்வொரு நிமிடத்திலும் வழிநடத்திக் கொண்டிருக்கும் இறைவன் மிக நன்றாகவே அறிவான். இதனை புரிந்து கொண்டு உங்களை அந்த பரம்பொருளிடம் ஒப்படையுங்கள். அவன் அருளாலே அவன் தாள் பணிந்திடுங்கள். நிம்மதி தருவது அவன் சன்னிதி என்று உணருங்கள்.-முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ்அப்பா கல்லுாரி,திருநெல்வேலி.99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X