பெண் உரிமையும் மனித உரிமையே! இன்று (நவ. 25) சர்வதேச பெண் வன்கொடுமை தடுப்பு தினம்| Dinamalar

பெண் உரிமையும் மனித உரிமையே! இன்று (நவ. 25) சர்வதேச பெண் வன்கொடுமை தடுப்பு தினம்

Added : நவ 24, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 பெண் உரிமையும் மனித உரிமையே! இன்று (நவ. 25) சர்வதேச பெண் வன்கொடுமை தடுப்பு தினம்

வட அமெரிக்காவில் உள்ள டொமினிக் குடியரசின் கொடுங்கோல் ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவிற்கு எதிராக அரசியல் போராட்டங்களை நடத்தியதற்காக, 1960ல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்பட்ட மூவர் கொல்லப்பட்டனர். 'மறக்க முடியாத வண்ணத்துப் பூச்சிகள்' என சர்வதேச சமுதாயத்தால் நினைவு கூறப்படும், மிராபெல் சகோதரிகளின் படுகொலையை நினைவு கூறவும், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்,
ஐக்கிய நாடுகள் சபையால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நாளாக இன்று (நவ., 25) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பல்வேறு
வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி, அதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய நாளின் நோக்கம். இந்நாள் உலகம் முழுவதும் ஐ.நா., சபையின் வேண்டுகோளின்படி சர்வதேச நாடுகளால் 'ஆரஞ்சு தினமாக' கொண்டாடப்படுகிறது.
கசப்பான உண்மை
சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போவது வேதனை தருவதாகும். உலகில் வாழும் பெண்களில் சுமார் 35 சதவீத பெண்கள் தம் வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பது கசப்பான உண்மை. இன்றைக்கு வாழும் பெண்களில் சுமார் 70 கோடி பெண்கள் குழந்தை திருமணம் செய்தவர்கள். அதிலும் குறிப்பாக சுமார் 25 கோடி பெண்கள் 15 வயதிற்கும்
குறைவான வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள். குழந்தை திருமணத்தை எதிர்ப்பதன் நோக்கமே, 18 வயதிற்குள் திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானோர்
கல்வியை கைவிட்டவர்கள், குடும்ப வன்முறைக்கு அதிகமாக இலக்கானவர்கள் மற்றும் குழந்தை பேற்றில் பல்வேறு உடல் ரீதியான சிக்கல்களை சந்திப்பவர்களாக
உள்ளனர். பாரம்பரியம் பெயரில் கொடுமை
உலகின் முன்னணிஆப்ரிக்க மாடலான வாரிஸ், சோமலியா நாட்டில் பெண் உறுப்புகள் சிதைக்கப்படுகின்ற கொடுமைகள் குறித்து “வாரிஸ் டைரி” என்ற பெயரில் வெளியிட்டுள்ள உண்மைச் சம்பவங்கள் வாசிப்பவர்களின் கண்களை ஈரமாக்குவது
நிச்சயம். ஆப்ரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 29 நாடுகளில் இதுவரை, சுமார் 13 கோடி பெண்களுக்கு பெண்ணுறுப்புகள்
வெட்டப்பட்டு அல்லது காயப்படுத்தப்பட்டுள்ளதாக, சமீபத்தில் ஐ.நா., சபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல், உள்நோக்கத்தோடு பெண்ணுறுப்பை சிதைக்கும் அல்லது காயத்தை விளைவிக்கும் கொடூரம், இன்றும் பழக்கவழக்கம், பாரம்பரியம், சமூக கட்டமைப்பு என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடந்துக் கொண்டிருப்பது கற்காலத்தை நினைவு படுத்துகிறது.
மாதர் தம்மை இழிவு செய்யும்..
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” எனமகாகவி பாரதி பொங்கி எழுந்து நுாறாண்டு கடந்த பின்னரும், இன்றும் வரதட்சணை என்ற பெயரில் பெண்கள் கொளுத்தப்படும் அவலநிலை உள்ளது. டில்லியில் மாணவி நிர்பயா நள்ளிரவில் ஐந்து பேரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட குற்றச்சம்பவம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது. இன்றும் இச்சம்பவம் நம் மனதில் ஓயாத அலைகளாக எழுந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 2015-ல் வெளியிடப்பட்ட தேசிய குற்றஆவணக் பதிவேடு கூடத்தின் ஆண்டறிக்கை மூலம் இந்தியாவில் ஆண்டு தோறும் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை அறிய முடியும். 2014-ல் சுமார் 34,530 பாலியல் வல்லுறவு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குற்ற சம்பவம் நடைபெற்று, காவல்துறை அல்லது நீதித்துறையின் பார்வைக்கு வராத வழக்குகள் அடங்காது. இந்த எண்ணிக்கை 2013 ஐ விட 7 சதவீதம் அதிகம். இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் 94 சதவீதம் பேர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்களே. இதில் 38 சதவீத பெண்கள் 18 வயதுக்கு குறைவான சிறுமிகள் ஆவர். தினமும் 848 பெண்கள் கொடுமை, வல்லுறவு அல்லது கொலை செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பெண் பாதுகாப்புக்கு அச்சம் தமிழகத்தில் கடந்த ஆண்டில் 1126 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது 2013 ஆண்டின் எண்ணிக்கையான 923 குற்றச்சம்பவங்கள் என்பதை விட 22 சதவீதம் அதிகம். இதில் 665 பேர் சிறுமிகள் என்பது அதிர்ச்சியான தகவல். தினந்தோறும் சராசரியாக 3 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு இலக்காகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் நாட்டில் பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து தன் பரிந்துரையை மத்திய அரசிற்கு கொடுத்துள்ளது. இந்த அறிக்கையில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட ரீதியாக, பொருளாதார ரீதியாக வழங்கப்படவேண்டிய உதவிகள் மற்றும் நிவாரணங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. காவல்துறை, நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறையில் செய்யவேண்டிய முக்கியமான சீர்திருத்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தினால் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்களை குறைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
பெண் சமத்துவம் பெண்கள் ஓர் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் திகழ்கின்றனர். இதை நாம் பெற்ற தாயிடமோ, மனைவியிடமோ அல்லது உடன்பிறந்த சகோதரிகளிடமோ எளிதாக உணரமுடியும். “ஆணும், பெண்ணும் நிகரென கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என மகாகவி பாரதி உலகம் உயர்வதற்கு பெண் சமத்துவம் அடிப்படை என்பதை அன்றே தெளிவுபடுத்தியுள்ளார்.
பெண்ணுரிமையும், மனித உரிமையே. ஆணுக்கும், பெண்ணுக்குமான ஏற்றத்தாழ்வை குறைப்பதே உண்மையான சமத்துவமாகும். எந்த வீட்டில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படுகின்றார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் குடியேறும். பெண் அடிமைத்தனத்தை அங்கீகரிக்கும் எந்ததேசமும் உலக அரங்கில் ஒருபோதும் உயர முடியாது. நம் வீட்டையும், நாட்டையும் தேவதைகள் குடியேறும் சொர்க்கமாக மாற்ற இன்றைய 'ஆரஞ்சு தினத்தில்' உறுதி ஏற்போம்.
---ஆர்.காந்தி, வழக்கறிஞர்,மதுரை,98421 55509gandhiadvocate@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
25-நவ-201514:43:08 IST Report Abuse
Sivagiri குட் கொஸ்டின் . . .
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
25-நவ-201514:39:13 IST Report Abuse
Barathan பெண் வன்கொடுமை என்பது ஒரு சமுதாய புரைபோன கேன்சர். அன்பு,பாசம், நட்பு, நேர்வழி, உண்மை பேசுதல், பிற மனிதர்களையும் மதிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இந்த பாழாப்போன பணத்தைதையே குறிகோளாக கொண்டு வாழும் ஒரு சில ஆண்கள் ( ஆண்கள் என்று சொல்ல வரவில்லை ) எனும் பசு தோல் போர்த்திய புலி போல இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு மிக மென்மையான பசு குணத்திற்கும் அதிகமான நல்ல குணம் உடைய பெண்களை ஒரு வெறிபிடித்த புலியை போல திருமணதிற்கு பிறகு கடித்து குதறி வேட்டையாடுகிறார்கள் இந்த ஆண்கள் மற்றும் இந்த செயலுக்கு மிகவும் மகன்களுக்கு உறுதுணையாக இருக்கும், அவர்களின் தாய், தந்தை, அண்ணன்கள், தம்பிகள், பற்றும் அனைத்து நெருன்க்கிய உறவின்களை எல்லோரையும் வாழ்நாள் முழுதும் ஜெயிலில் காலம் கழிக்க வேண்டும் என்று மிக மிக கடுமையான சட்டம் கொண்டு வந்து தண்டிக்க படவேண்டும். இந்த மாதிரி குற்றங்கள் எல்லாம் இந்த மிருகங்களால் தெரிந்தே நடத்த படுகின்றது. எனவே இந்த மிருகங்களை சுமுதாயத்தில் வாழ அனுமதிக்க கூடாது. அப்போது இந்த பெண்களை பெற்று விலைமதிக்க முடியாத அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்த பெற்றோர்களுக்கு நீதி கிடைத்ததாக அர்த்தம். ஒரு பெண் திருமணதிற்கு பிறகு பெற்ற தாய் தந்தையை பிரிந்து செல்வதே அவளுக்கு பெரிய இழப்பு, இது போறதற்கு புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடிமையாக நடத்துதேன்பது இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்று சிவனே தன் உடம்பில் பாதியை தன் மனிவிக்கு பாதியை கொடுத்த தாக ஆன்மீக வரலாறு. பெண்களை சூரை யாடும் இந்த மாதிரியான மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் மிருகங்கள், திருசெங்கோடு சென்று அங்கு மலைமேல் இருக்கும் அர்த்தனாசீர்வரர் (சிவன் பாதி பார்வதி பாதி என காட்சியளிக்கும்) அருளை பெற்றாலும் திருந்த மாட்டார்கள். ஏன் எனில் இந்த பாழா போன மனிதர்களுக்கு பெண்களின் உயிரை விட பணம் பணம் ,,,,,,,,தான் முக்கியம்.
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
25-நவ-201522:08:49 IST Report Abuse
sethuபெண்களுக்காக உணர்வுபூர்வமாக எழுதிய நண்பர்களுக்கு நன்றி ,அதாவது ,பசு ஒரு சாதுவான மிருகம் ,அதற்கு மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பாதுகாக்கப்படுகிறது ,என்னை அடிமையாக வைக்காமல் விட்டு விடுங்கள் என சொல்லி ,காட்டிற்குள் சென்று சுதந்திரமாக வாழ்கிறேன் என நினைத்து பசியோடு அலையும் புலிக்கும்,சிங்கங்களுக்கும் இறையாகும்போது தான் தெரியும் தனது நிலை என்ன என.அதனால பெண்களுக்காக குரல் கொடுங்கள் வேண்டாம் என சொல்லவில்லை,அதை முதலில் உங்களது வீட்டில் இருந்து ஆரம்பியுங்கள், மனித மிருகங்கள் அதிகமாக வாழும் இக்காலத்தில் பெண்கள் பெண்களாக இருந்தால் தப்பித்து வாழலாம். மற்றபடி ,அவர்களின் கதை அவர்களின் கையில தான் உள்ளது,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X