குடிசையை தூக்கிய வாஸ்து... கோவை ஆபீசர்க்கு புரோக்கரே தோஸ்து!| Dinamalar

குடிசையை தூக்கிய வாஸ்து... கோவை ஆபீசர்க்கு புரோக்கரே தோஸ்து!

Added : நவ 25, 2015
Share
மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்....கோனியம்மன் கோவில் கோபுரத்திலிருந்து ஒலித்த சுசீலாவின் தெய்வீகக் குரல், கோவையின் ரம்மியமான காலநிலையை இன்னும் சுகமாக்கியது. தரிசனத்தை முடித்து விட்டு, சித்ராவும், மித்ராவும் வெளியே வந்தனர்.''மித்து! அப்பிடியே நடந்து போய், கொஞ்சம் 'புக்ஸ்' வாங்கிட்டுப் போகலாமா?'' என்று நடக்க ஆரம்பித்தாள்
குடிசையை தூக்கிய வாஸ்து... கோவை ஆபீசர்க்கு புரோக்கரே தோஸ்து!

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்....
கோனியம்மன் கோவில் கோபுரத்திலிருந்து ஒலித்த சுசீலாவின் தெய்வீகக் குரல், கோவையின் ரம்மியமான காலநிலையை இன்னும் சுகமாக்கியது. தரிசனத்தை முடித்து விட்டு, சித்ராவும், மித்ராவும் வெளியே வந்தனர்.
''மித்து! அப்பிடியே நடந்து போய், கொஞ்சம் 'புக்ஸ்' வாங்கிட்டுப் போகலாமா?'' என்று நடக்க ஆரம்பித்தாள் சித்ரா.
''அக்கா! இப்போதைக்கு நம்மூர்ல நடந்து போறது தான் உத்தமம். வண்டியில போயி...ஒரே வாரத்துல, ரெண்டு பொண்ணுங்க உசிரு, அநியாயமாப் போயிருச்சே'' என்றாள் மித்ரா.
''கவரிங் செயினுக்காக அநியாயமாக் கொன்னாங்களே...மீனாட்சி. இன்னொன்ணு யாரு மித்து?''
''குழி இருக்குங்கிறதுக்காக, வண்டிய ஒதுக்கி, பரிதாபமா செத்துப் போன பிளஸ் 2 பொண்ணு ராஜேஸ்வரி. என்ன தான் லைசென்ஸ் இல்லேன்னாலும், ரோடு நல்லாயிருந்தா, இப்பிடி ஆயிருக்குமா? இப்பிடித்தான், ஐ.டி., கம்பெனிப் பொண்ணு, நிர்மலா காலேஜ் முன்னால, குழியில வண்டிய விடாம இருக்க, ஒதுக்குனப்போ, போலீஸ் ஆபீசர் வண்டியிலயே அடிபட்டு இறந்துச்சு''
''லைட்டு, ரோடு போடாத கார்ப்பரேஷன், செயின் ஸ்நாச்சிங்கைத் தடுக்காத போலீஸ்ன்னு... எல்லாத்துக்குமே ஏதோ ஒரு டிபார்ட்மென்ட்
டோட 'மிஸ்டேக்' தான காரணம்'' என்றாள் சித்ரா.
''கண்டிப்பா... கொஞ்ச நாளைக்கு முன்னால, ரோட்டுல போன பொண்ணுகிட்ட, நகையப் பறிச்சிட்டுப் போன ரெண்டு பேரு, அது 'கவரிங்'னு தெரிஞ்சுட்டு, திரும்ப வந்து, கெட்ட வார்த்தையில திட்டி, மூஞ்சில எறிஞ்சுட்டுப் போனாங்க. போலீஸ் மேல
பயமிருந்தா, இப்பிடி நடக்குமா?'' என்றாள் மித்ரா.
''புது கமிஷனர், திடீர் திடீர்னு ஸ்டேஷன்களுக்கு அதிரடி 'விசிட்' அடிக்கிறாரு. அவரு வந்தவுடனே, திருட்டு 'விசிடி' கடையெல்லாம் மூடிட்டாங்க. ஒரு நம்பர் லாட்டரியும், கஞ்சாவும் இன்னும் ஓடுதாம். இதையெல்லாம் தடுக்கிறதோட, செயின் ஸ்நாச்சிங்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைச்சா நல்லது''
''கஞ்சான்னதும் ஞாபகம் வந்துச்சுக்கா...பெரிய கடை வீதி லிமிட்ல கஞ்சா விக்க விட்டு, ஒரு போலீஸ் ஆபீசர், காசு வாங்கிட்டு இருந்திருக்காரு. ஸ்பெஷல் டீம், கஞ்சா குரூப்பை தேடுறது தெரிஞ்சு, தன்னோட 'திரு'முகத்தை ஹெல்மெட்ல மூடிக்கிட்டு, 'மேனி'யெல்லாம் 'மப்டி'ல மறைச்சிட்டுப் போய், அந்த குரூப்ட்ட 50 ஆயிரம் ரூபா பணம் வாங்கிருக்காரு''
''அட்ரா சக்கை...அட்ரா சக்கை...!''
''அதை எவனோ வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'ல பரவ விட்டானுக. உடனே, அங்க 'எல் அண்ட் ஓ'ல இருந்த அவரை, போத்தனுார்க்கு 'க்ரைம்' பார்க்க அனுப்பிட்டாங்க. சாதாரண போலீசு தப்பு செஞ்சா, 'சஸ்பெண்ட்' பண்றாங்க. ஆபீசர்க பண்ணுனா, டிரான்ஸ்பர் மட்டும் தானா'ன்னு கான்ஸ்டபிள்க எல்லாம் கதறுறாங்க''
''மித்து! அந்த ஆபீசரு, இதே ஊருல 98 லயிருந்து நகரவேயில்லை... தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''இவரு மட்டுமாக்கா...காட்டூர்ல, கட்டிடங்களுக்கு கட்டப்பஞ்சாயத்து பண்ணியே, வசூல்ல காட்டு காட்டுன்னு காட்டிட்டு இருக்காரே. அவரும், நம்மூரு ஆட்டோ மாதிரி, 'ஸ்டாண்ட்' அடிச்சு, உக்காந்திருக்காரே'' என்றாள் மித்ரா.
''ஆ....ஸ்டாண்ட்ன்னு சொன்னியே...சிட்டிக்குள்ள இருக்கிற 'ஸ்டாண்ட்' எல்லாத்தையும், காலி பண்றதுக்கு புது போலீஸ் கமிஷனர் திட்டம் போட்ருக்காராம்'' என்றாள் சித்ரா.
''தெரிஞ்சா...உடனே கொடியைத் தூக்கிட்டு, போலீஸ் கமிஷனர் ஆபீசு, கலெக்டராபீஸ்னு வந்துருவாங்களே'' என்றாள் மித்ரா.
''மித்து... கலெக்டராபீஸ்ல போன வாரம், ஒரு முக்கியமான கூட்டத்துக்கு, பிடிஓ, இன்ஜினியர்க எல்லாம் வந்திருக்காங்க. மீட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும், பின்னாடியும், 'ரெண்டு ஃபேமிலி'ஆபீசர்களைப் பத்தி தான், ஒரே பேச்சாம். இவரு, அவருன்னு ஆரம்பிச்சு, பெரிய பட்டியலே போட்டாங்களாம்'' என்று சிரித்தாள் சித்ரா.
''நம்மூர்ல திட்டம் போடுற ஆபீசருக்கே, ரெண்டு பேமிலி இருக்கு. ஆனா, மூவாயிரம் கோடி ரூபா திட்டமான ஜே.என்.என்.யு.ஆர்.எம்.,
திட்டத்துக்கு, ஒரே ஒரு ஆபீசர்தான் இருக்காரு தெரியுமா?''
''என்ன மித்து சொல்ற...ஒரு எஸ்.இ., ரெண்டு இ.இ.,ன்னு பத்துப் பதினைஞ்சு பேரு இருந்தாங்களே''
''இப்ப இருக்கிறது ஒரே ஒரு இ.இ., மட்டும் தான். 2008 ல ஆரம்பிச்ச யுஜிடி, இன்னும் முடிஞ்ச பாடில்லை. நஞ்சுண்டாபுரம் எஸ்டிபி, பல வருஷமா 'ஸ்டே'ல கிடக்கு. மழை நீர் வடிகால் அமைக்கிறேன்னு, 200 கோடிய சாப்பிட்டாங்க''
''யுஜிடிக்காக தோண்டுன ரோடுகளையே, சரி பண்ண மாட்டேங்கிறாங்க. புலி வருது கதையா, 100 கோடி ரூபா வருது வருதுங்கிறாங்க. ம்ஹூம்....போலீஸ் ரெக்கார்டுல பார்த்தா, கார்ப்பரேஷன் ரோட்டுல தான், அதிகமான ஆக்சிடென்ட், அதிகமான சாவு நடக்குது''
''இங்கயிருக்கிற ஆபீசர்களுக்கு, பொட்டி வாங்கவும், போட்டுக் கொடுக்கவுமே நேரம் சரியாயிருக்கு'' என்றாள் மித்ரா.
''அதுலயும் அந்த லேடி ஆபீசரைப் பார்த்து, எல்லா ஆபீசருமே, நடுங்குறாங்க மித்து'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்ல இப்போ, இன்னொரு கலெக்ஷன் ஓடுதுக்கா...நீர் நிலைகள்ல குடியிருக்கிற மக்களுக்கு மாற்று வீடுக கொடுக்கணும்னு தான், 'ஸ்லம்போர்டு'காரங்க, வேகவேகமா பல ஆயிரம் வீடு கட்டிட்டு இருக்காங்க. ஆனா, சம்மந்தமே இல்லாத ஆளுகள்ட்ட, 'நாங்க வீடு வாங்கித் தர்றோம்'னு ஆளும்கட்சிக்காரங்க வசூல் பண்றாங்களாம்'' என்றாள் மித்ரா.
''அதெப்பிடி முடியும்...அதான், ஏற்கனவே 'பயோ மெட்ரிக்'ல பதிவு பண்ணி, டோக்கன் கொடுத்துட்டாங்களே'' என்றாள் சித்ரா.
''கொடுத்துட்டாங்க. ஆனா, 'வீடு நிறையா இருக்கு. நாங்க நினைச்சா, வீடு வாங்கித்தர முடியும்'னு சொல்லி, பத்தாயிரம், இருபதாயிரம்னு வசூல் பண்றாங்க. பல இடங்கள்ல வீடு கட்டுனாலும், வெள்ளலூர்ல கட்டுற வீடுகளை வாங்குறதுக்கு தான் பயங்கரப் போட்டியா இருக்கு''
''ஊரெல்லாம் இப்போ புரோக்கர்க ஆதிக்கமாத்தான் இருக்கு''
''நிஜமாவே ரொம்ப ஓவர் தான்க்கா. கோயம்புத்தூர்ல இருந்துட்டு, இங்க நாலு மாவட்டம், விருதுநகர் பக்கம் மூணு மாவட்டம்னு ரெண்டு கையில ஏழு மாவட்டத்துக் காசை வாங்க கஷ்டப்படுறாரே...டிரான்ஸ்போர்ட் ஆபீசர். அவரு என்ன பண்றாரு தெரியுமா?''
''காசு வாங்குறதுக்கு...கூட ரெண்டு கைய வச்சிருக்காரா?''
''சித்ராக்கா...இந்த விஷயத்துல, நிஜமாவே நீ சித்தர்க்கா...அந்த ஆபீசர், ரேஸ்கோர்ஸ்ல இருக்கிற ஒரு கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கிருக்காரு.
அவருக்கு ரெண்டு காரும் இருக்கு. ஆனா, ஒரு புரோக்கரோட டூவீலர்ல தான், பின்னாடி உட்கார்ந்து அவரு ஆபீஸ் போறாரு. அந்த புரோக்கர்தா, அவருக்கு டிரைவர், சர்வர்...ஆல் இன் ஆல். அதனால, அவரோட ஆட்டம் தாங்கலையாம்!'' என்றாள் மித்ரா.
''மித்து...க.க.சாவடி, செக்போஸ்ட்ல, கேரளா போற வண்டிகள்ல, ஆர்டிஓ சொன்னதாச் சொல்லி, ஒவ்வொரு லாரியிலயும், தீபாவளிக்காசுன்னு பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் பறிச்சாரே, ஒருத்தரு... அவரை அங்கயிருந்து மாத்திட்டாங்க''
''மாத்திட்டாங்கன்னதும், நம்மூரு ஜி.எச்.,ல பொணங்களை மாத்துனது ஞாபகத்துக்கு வந்துச்சு. அது, ரெண்டுமே 'பர்ன்ஸ் கேஸ்'தான். அதுல ஒரு லேடியோட ஹஸ்பெண்ட், 'என்ன சார் இப்பிடிப் பண்ணீட்டிங்க. உங்களை சும்மா விட மாட்டேன்'னு போலீஸ்காரங்ககிட்ட கொந்தளிச்சிருக்காரு''
''போலீஸ்க்கே மிரட்டலா...அவுங்க சும்மா இருந்திருக்க மாட்டாங்களே''
''யெஸ்...அந்த லேடி சாகுறதுக்கு முன்னால, முதல்ல கொடுத்த 'ஸ்டேட்மென்ட்'ல, 'எம் புருஷனாலதான் தீ வச்சுக்கிட்டேன்'னு சொல்லிட்டு, அப்புறமா...'சமையல் பண்றப்போ, தீப்பத்திருச்சு'ன்னு மாத்திச் சொல்லிருக்கு. அதை வச்சு, போலீஸ்காரங்க, 'சவுண்ட் விட்டா, சாவுக்குக் காரணம் நீ தான்'னு கேசு போட்ருவோம்னு மெரட்டி, அந்த ஆளை விரட்டிட்டாங்க''
''மித்து..நம்மூருல கோவில் டிபார்ட்மென்ட்ல கடவுள் பக்தியுள்ள பகுத்தறிவுவாதி ஒருத்தரு, முக்கியமான போஸ்ட்ல இருக்காரு.
மூட நம்பிக்கையில்லாத அவரு, ரேஸ்கோர்ஸ்ல அவருக்கு கவர்மென்ட் கொடுத்த பங்களாவுல இருந்த கீத்துக்குடிசைய மட்டும் எடுத்துட்டாரு'' என்றாள் சித்ரா.
''ஏன்...அவருக்கென்ன பிரச்னையாம்?'' என்றாள் மித்ரா.
''இதுக்கு முன்னாடி, அங்க குடியிருந்த பல ஆபீசர்க 'சஸ்பெண்ட்' ஆயிட்டாங்க. இவருக்கு, ஒரு கேசுல 'பிடிவாரன்ட்' போட்டாங்க. அப்புறம்தான், தன்னோட பகுத்தறிவை மூட்டை கட்டி வச்சுட்டு, ஜோசியரு சொன்னபடி, கீத்துக் கொட்டகைய தூக்கிட்டாராம்'' என்றாள் சித்ரா.
புத்தகக்கடை வந்தது. இருவரும் அமைதியாகி, புத்தக வேட்டையில் இறங்கினார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X