ஹாயாக ஹாலில் அமர்ந்து, இஞ்சி டீயை உறிஞ்சியவாறு, அன்றைய காலை நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.
""என்னக்கா, நம்மூருக்குள்ள சிறுத்தை வந்திருச்சாமே,'' என, விவாதத்தை ஆரம்பித்தாள் மித்ரா.
""அதெல்லாம், ஒண்ணுமில்லப்பா, சும்மா பீதியை கௌப்பி விட்டுட்டாங்க. செந்நாயா இருக்கும்னு, வனத்துறையினர் சொல்லியிருக்காங்க. இருந்தாலும், மக்களிடம் பீதியை கொறைக்கிறதுக்காக, தோட்டத்துல, கேமரா பொருத்தியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""அரசு கேபிள் கழகம் நடத்தும் சேவை மையத்துல, ஏகப்பட்ட வசதியிருந்தும், பொதுமக்கள் வர மாட்டீங்கிறாங்களாமே?'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""தாலுகா ஆபீசுல இருக்கே அந்த மையத்தையா சொல்றே?'' என, கேட்டாள் சித்ரா.
""ஆமாக்கா, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கும், அச்சேவை மையத்துலயே பதிவு செஞ்சு, விண்ணப்பிக்க வசதி செஞ்சிருக்காங்க. ரெண்டே ரெண்டு கம்ப்யூட்டர்தான் இருக்கு. வருமானம், ஜாதி, இருப்பிட சான்று வழங்கவே நேரம் சரியா இருக்கு. அதனால, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பம் செய்றது ரொம்ப குறைவா இருக்கு. விண்ணப்பம் செய்றவங்க, தனியார் "ப்ரவுசிங்' சென்டருக்கு போறாங்க. அதனால, மக்களிடம் ஆதரவு இல்லையானு, சென்னையில் இருந்து குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""கட்சியை வளர்க்கணும்னு, ரெண்டு மாவட்டமா உருவாக்குனாங்க. பரிசு தொகை அதிகமா இருக்குதுன்னு, இப்ப, போட்டியை மட்டுமே ஒரே மாவட்டமா நடத்தியிருக்காங்க,'' என, புதிர் போட்டாள் சித்ரா.
""அக்கா, கொஞ்சம் விவரமா சொல்லுங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை,'' என, அலுத்துக் கொண்டாள் மித்ரா.
அவளை பார்த்து சிரித்த சித்ரா, ""அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூருல தி.மு.க., இளைஞரணி அறக்கட்டளை சார்பா போட்டி நடத்துனாங்க. மாணவ, மாணவியர் ஆர்வமாக கலந்துக்கிட்டாங்க. லட்சம் ரூபாய்க்கு மேல பரிசுத்தொகை வந்ததால, வடக்கு, தெற்கு என, ரெண்டா இருந்த மாவட்டங்களை ஒண்ணா சுருக்கி, பரிசுக்குரிய மாணவ, மாணவியரை தேர்வு செஞ்சிருக்காங்கப்பா,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
""அரசியல்வாதிகள்னாலே எப்பவுமே அப்படித்தான். கோடிக்கணக்குல வசூலிப்பாங்க. செலவு செய்யத்துல, ரொம்பவே யோசிப்பாங்க. ஆளுங்கட்சியா இருந்தா, யாரையாவது கையை காட்டிட்டு போயிடுவாங்க. எதிர்க்கட்சியா இருக்கிறதால, வசூலிச்ச தொகையை செலவழிக்கிறதுக்கு யோசிக்கிறாங்க போலிருக்கு,'' என, நக்கலடித்தாள் மித்ரா.
""அவிநாசிலிங்கம் செட்டியாரை, நம்ம மாநகராட்சி நெனைச்சு பார்க்கறதே இல்ல. கல்வியாளர்கள் ரொம்பவே வருத்தப்படுறாங்க,'' என, ஆவேசப்பட்டாள் சித்ரா.
""அவர், யாருக்கா? நம்மூருக்கு என்ன செஞ்சிட்டாரு,'' என, எதுவும் தெரியாமல் கேட்டாள் மித்ரா.
""சி.இ.ஓ., ஆபீஸ் செயல்படுற, கே.எஸ்.சி., பள்ளி இருக்கற இடம், அவிநாசிலிங்கம் செட்டியாரோட தோட்டம்; பழனியம்மாள் பள்ளி இருக்கறது, அவங்க வீடு இருந்த இடம். அப்பா பேர்ல கே.எஸ்.சி., பள்ளியும், அம்மா பெயர்ல பழனியம்மாள் பெண்கள் பள்ளியும் கட்டிக்கொடுத்தாங்க. அந்தக்காலத்துல, கல்வி அமைச்சராகவும் இருந்திருக்கார். மண்ணின் மைந்தர். இருந்தாலும், அவரோடு பிறந்த நாள், நினைவு நாளை கூட நெனைச்சு பார்க்கறதில்லை. பெருசா விழா நடத்தலைன்னாலும், சம்பந்தப்பட்ட ரெண்டு பள்ளிகளிலாவது, மரியாதை செய்யணும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம் சரி; "சிட்டி மம்மி'க்கு என்னாச்சு? அரசு விழாக்களுக்கு வர மாட்டீங்கிறாங்களே, கட்சிக்கூட்டத்துக்கு வந்தாலும், பேச மாட்டீங்கிறாங்களாமே,'' என, கேட்டாள் மித்ரா.
""கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செஞ்ச சம்பவத்துல இருந்து, அவங்களோட நடவடிக்கை மாறியிருக்கு. இதுக்கு முன்னாடி, ஆளுங்கட்சியில மூணு கோஷ்டி இருந்துச்சு; அதுல, சீனியரா இருந்தவரை, ஓரங்கட்டுனாங்க. அவரோ, கல்விக்கூடம் ஆரம்பிச்சு, வேற "ரூட்'டுல பயணிக்க ஆரம்பிச்சிட்டார். இப்ப, "சிட்டி மம்மி' ஒதுங்க ஆரம்பிச்சிருக்காங்க. கட்சிக்காரங்களிடம் கேட்டால், நமட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க. விஷயத்தை சொல்ல பயப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE